திருநங்கைகளுக்கான இலவச பரதப் பயிற்சி! (மகளிர் பக்கம்)
ஸ்ரீ சத்ய சாய் டான்ஸ் அகாடமி, கேரளாவில் ஏற்கனவே திருநங்கைகளுக்காக இலவச நடனப் பயிற்சி பள்ளியை வெற்றிகரமாக இயக்கி, இப்போது தமிழ்நாட்டில் நம்ம சென்னையிலும் திருநங்கைகளுக்கான இலவச பரதநாட்டிய பள்ளியை தொடங்கியுள்ளனர். ஸ்ரீ சத்ய சாய் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த நடனப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ஆனந்தகுமார், “26 வருடத்திற்கு முன் ஒரு சிறிய இடத்தில் ஐந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த தொண்டு நிறுவனம். பின், வயதானவர்களுக்கான இல்லத்தையும் நாங்கள் ஆரம்பித்தோம். சாலைகளில் ஆதரவில்லாமல் கைவிடப்பட்டவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்கள் நல்லபடியாக வாழ இந்த அமைப்பு உதவி செய்து வருகிறது.
இப்படி கேரளாவில் மட்டும் 141 திட்டங்களை எங்கள் அமைப்பு செயல்படுத்தி, கேரளாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமாகவும், இந்தியாவில் நான்காவது பெரிய தொண்டு நிறுவனமாகவும் வளர்ந்து நிற்கிறது. இதன் வரிசையில் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தினர் என்று பார்த்தால் அவர்கள் திருநங்கைகள் தான். தங்களிடம் ஏற்படும் ஒரு மாற்றத்தினை உணர்ந்து அதை அவர்கள் வீட்டில் வெளிப்படுத்தும் போது… பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் நிராகரிக்கப்படுகிறார்கள். விளைவு வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். தங்களை உடல் ரீதியாக மாற்றிக் கொள்கிறார்கள். படிப்பில்லை…
அதனால் வேலையும் இல்லை… வயிற்றுப் பிழைப்புக்காக கைத்தட்டி பிச்சை எடுப்பது… பாலியல் தொழிலில் ஈடுபடுவது என்று அவர்கள் தங்களின் வாழ்க்கையினை கடந்து வந்தார்கள். இந்த நிலமை மாறி இவர்களை சமூகம் மற்றும் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்கள். தற்போது இவர்களும் கல்வி கற்கிறார்கள்… அதோட நில்லாமல் சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இருப்பினும்… இவர்களில் இது போன்று ஒரு நல்ல நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இன்றும் நாம் சாலையில் சில திருநங்கைகளை பார்க்க முடிகிறது. யாராவது ஒருவர் ஆதரவுக்கரம் நீட்டினால் கண்டிப்பாக அதை பற்றிக் கொண்டு அவர்கள் முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அதன் அடிப்படையில் தான் திருநங்கைகளுக்காக, ஸ்ரீ சத்ய சாய் இலவச டான்ஸ் அகாடமியை கேரளாவில் முதல் முறையாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எங்களின் தொண்டு நிறுவனம் மூலமாக துவங்கினோம். அங்கு தற்போது 36 திருநங்கை மாணவர்கள் பரத நாட்டியத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். கேரளாவில் ஆரம்பித்து ஒரு மாதமான நிலையில் இதனை சென்னையிலும் துவங்கலாம் என்று திட்டமிட்டோம். இவர்கள் இந்தியா முழுக்க உள்ளனர் என்பதால் முதலில் கேரளா அதன் பின் சென்னை என்று திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் வருகிற ஜூன் மாதம் முதல் திருநங்கைகளுக்கான டான்ஸ் வகுப்புகள் சென்னையில் துவங்க இருக்கிறது’’ என்றார்.
‘‘பொதுவாக கலை என்றாலே அது மனிதனை நல்வழிப்படுத்த உதவும் ஒரு மிகப்பெரிய கருவிதான். நல்ல பழக்கத்தையும், கவுரவமான ஒரு வாழ்க்கையை வாழவும் கலை ஒரு மனிதனை தூண்டுகிறது. மேலும், அது நல்ல வேலை வாய்ப்பினையும் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. அதனால் தான் திருநங்கைகளுக்கான பரதநாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினோம். பொதுவாக திருநங்கைகளுக்கு நடனமாடவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவர்களுடைய உரிமைகளும் உணர்வுகளும் மறுக்கப்பட்டு இருக்கிறது. அதை இந்த கலை மூலம் மீட்டெடுத்து திருநங்கைகளுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கதான் இந்த பயிற்சிப் பள்ளியை நாங்கள் ஆரம்பித்து இருக்கிறோம்.
இந்தியாவில் கோயில்களிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் பொதுவாக பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். எங்கள் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்த, அவர்களுக்கு அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர இருக்கிறோம். ஒரு நூலைப் பிடித்தால் போதும் எங்க மாணவர்கள் அதை பற்றிக் கொண்டு முன்னேறிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அது மட்டுமில்லாமல் எங்க மாணவர்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களில் இந்த டான்ஸ் அகாடமியை ஒப்படைத்து, அவர்களையே மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்படியும் செய்ய முடிவு செய்துள்ளோம்.
மேலும் இவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்களும் திறமையான நடன ஜாம்பவான்கள். காயத்ரி சுப்ரமணியன், கோபிகா வர்மா மற்றும் திருநங்கை சமூகத்தை சேர்ந்த ஸ்ரீ மதி பத்ராவும் எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இதில் தேர்ச்சி பெற்றதும் அவர்கள் நடன ஆசிரியராக வேலை செய்ய அனைத்து உதவிகளையும் நாங்கள் ஏற்படுத்தி கொடுக்கிறோம்.
பல பன்னாட்டு நிறுவனங்களிலும் எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அங்கேயே பணிபுரியும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கிறோம்” என்கிறார்.
இதை தவிர இந்த தொண்டு நிறுவனம் இலவச ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு திட்டம் என ஒவ்வொரு துறையிலும் பயனுள்ள பல இலவச சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்கள் அடிக்கடி டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்நாளை பல வருடங்கள் அதிகரிக்க முடியும். ஆனால் ஆதரவற்ற பலர், இந்த சிகிச்சையை செய்ய முடியாமல் உயிர் இழப்பது வழக்கம். அதைத் தெரிந்து கொண்டு இலவச டயாலிசிஸ் சேவையை முதல் முறையாக இந்தியாவில் இந்த அமைப்பினர் துவங்கினர். இப்போது 14 சென்டர்களில் இலவச டயாலிசிஸ் சேவையினை வழங்கி வருகிறார்கள்.
5 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு கடந்த 16 ஆண்டுகளில் சிகிச்சையினை இந்த அமைப்பு வழங்கி உலக சாதனையிலும் இடம்பெற்றுள்ளனர். ‘‘மக்களிடம் ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உதவி வருகிறோம். உலகமெங்கும் எங்கள் அமைப்புக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களின் உதவியால்தான் எங்கள் அமைப்பு பல நன்மைகளை செய்து வருகிறது. இன்னும் எங்களின் தொண்டு தொடரும்’’ என்றார் ஆனந்தகுமார்.