ரங்கோலியில் தலைவர்களின் உருவங்கள்! (மகளிர் பக்கம்)
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு. ஆனால் கோலக்கலைகளோ பல்லாயிரம் என்கிறார் புதுச்சேரியை சேர்ந்த கலைமாமணி மாலதி செல்வம். சரஸ்வதி நடமாடும் கைகளுக்கு சொந்தக்காரர்… தான் காணும் அனைத்தையும் எழில் கொஞ்சும் தத்ரூப ஓவியங்களாக வரைந்து விடுவதில் வல்லவர். புதுச்சேரியில் உள்ள இவரது ‘லலிதாஸ் ஆர்ட் அண்ட் கிராப்ட்’ பலருக்கும் ரங்கோலி மட்டுமல்லாது பல்வேறு கலைகளையும் கற்றுத்தருகிறது. இவருடன் பேசிய சில துளிகள்…
கோல ஓவியங்கள் வரையும் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
நான் சிறுவயதில் ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். பின்னர் ஒரு பள்ளி விழாவில் ஆசிரியர் ஒருவர் வரைந்த கோல ஓவியத்தை கண்டு வியந்து அந்த கோல ஓவியங்கள் கலை மீது எனக்கு ஈடுபாடு அதிகரித்தது. எனது பதினைந்தாவது வயதில் அதில் சில நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்து கோல ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். அதை பார்த்த பலரும் வியந்து பாராட்ட எனக்கு கோல ஓவியங்கள் மீது தனி பாசமும், ஆர்வமும் வந்துவிட்டது.
அது தொழிலாக மாறக் காரணம்?
எனது உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த விழா நிகழ்வில் நான் ரங்கோலியில் மாயகிருஷ்ணரை வரைய அதை கண்டு வியந்த பலரும் தங்களது வீடுகளில் வரைய அழைத்தனர். பின்னர் அதுவே எனது தொழிலாக மாறிவிட்டது. அதன் பிறகு திருமண வீடுகளில் ரங்கோலி வரைய ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து என்னுடைய ஓவியக்கலையை மேலும் அதிகரிக்க திருமணங்களில் வாசலில் ரங்கோலி மட்டுமல்லாது, மணமக்களின் உருவ ஓவியங்களையும் வரைய ஆரம்பித்தேன். அது பலரையும் கவர்ந்திழுக்க அதை தொடர்ந்து நிறைய அழைப்புகள் வரத்தொடங்கியது.
உங்கள் தொழிலுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?
திருமண வீடுகளில் மணமக்கள் உருவங்களை வரைய ஆரம்பித்த பிறகு தான் எனக்கான வாய்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. பொதுவாக சாதாரண ரங்கோலி கோலங்களை பலர் போடுவது வழக்கம். அதுவே ஒருவரை ஓவியமாக வரையப்பட்ட உருவத்தினை அப்படியே தத்ரூபமாக வரைவது என்பது கொஞ்சம் அசாத்தியமானது. அது தான் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. திருமணத்தில் நான் வரைந்த மணமக்களின் ஓவியங்களைப் பார்த்து பல்வேறு விழா நிகழ்வுகளுக்கு தலைவர்களின் உருவ படங்களை் வரைவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்க ஆரம்பிச்சது. இதுவரை நான் வரையாத பிரபலங்களே கிடையாதுன்னு சொல்லலாம். அத்தோடு எனது ரங்கோலி திறமைகளை கண்டவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுத்தர வேண்டினர். அப்படி தொடங்கியது தான் எனது ‘லலிதாஸ் ஆர்ட் அண்ட் கிராப்ட்’. இதில் கோலங்கள் மட்டுமல்லாது பல்வேறு கலைகளையும் கற்றுத்தருகிறேன்.
நீங்கள் வரைந்த ஓவியங்களில் உங்களுக்கு அதிக பாராட்டை பெற்றுத்தந்தது எது?
எல்லா ஓவியங்களும் எனக்கு பாராட்டை பெற்று தந்தவை தான்.. கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி அவர்களை நான் வரைந்தது எனக்கு அதிக பாராட்டை பெற்றுத் தந்தது. அதே போன்று பாரதியாரின் விதவிதமான ஓவியங்கள், பிரபல தலைவர்கள் ஓவியங்கள், நான் வரைந்த தெய்வீக ஓவியங்கள் என பலதும் எனக்கு பாராட்டை பெற்றுக் கொடுத்தது. ஒரு முறை சங்கமம் நிகழ்ச்சிக்காக முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களை வரைந்து போட்டோ எடுத்து வந்திருந்தேன். ஆனால் கலைஞரது ஓவியத்தை கடைசிவரை அவரிடம் காண்பிக்க முடியவில்லை என வருத்தமாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் ஒவியமாக வரைந்துள்ளேன்.
கோலக்கலையும் அடுத்த தலைமுறையும்…
இன்றைய தலைமுறையினருக்கு சாதாரண புள்ளிக் கோலம் போடவே தெரிவதில்லை. மேலும் அவர்களுக்கு இந்த கலை மேல் பெரிய அளவில் ஈடுபாடும் இல்லை என்று நினைக்கும் போது எனக்கு அது மிகப்பெரிய ஆதங்கமாக இருந்தது. அதனால் அதனை பலருக்கும் கற்றுத்தரவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. எனது அகாடமியில் கூட கோலங்களுக்கே முன்னுரிமை தருகிறேன். தற்போது பலர் என்னிடம் கோலங்களை கற்க ஆர்வமுடன் முன் வருகின்றனர். என் கோலக் கலைகளுக்காகவே பல்வேறு நாடுகளுக்கும் பயணித்திருக்கிறேன்.
தற்போது உலகெங்கும் பலரும் என்னிடம் ஆன்லைனில் கோலங்களை கற்று வருகிறார்கள். எனது கோலங்களை வெளிநாட்டினரும் வியந்து பாராட்டுகிறார்கள். ஒரு சிலர் புதுச்சேரிக்கு வரும் போது அந்த கலையை நேரடியாக என்னிடம் கற்றுக் கொண்டு செல்கிறார்கள்’’ என்ற மாலதி செல்வத்திற்கு 2010ம் ஆண்டு புதுச்சேரி அரசு ‘கலைமாமணி’ பட்டத்தை வழங்கி கௌரவித்தது. இதுவரை முப்பத்தி ஐந்திற்கு மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் மாலதி.
மேலும் ‘சித்திரை கலை அரசி’, ‘கலா ரத்னா’, ‘ஓவிய தந்தை ஜெகன்நாதன் விருது’ போன்ற விருதுகளை பெற்றுள்ளார். தற்போது லலித கலா அகாடமியின் புதுச்சேரிக்கான பிரதிநிதியாக செயல்பட்டு வரும் மாலதி, ஸ்வீடன் நாட்டின் கோல ஆராய்ச்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். கோலக்கலை நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்றுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க கலையை வருங்கால சந்ததியினருக்கு கற்றுக் கொடுப்பதே தமது வாழ்நாள் லட்சியம் என்கிறார் மாலதி செல்வம்.