லாவணிக் கலை !!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 44 Second

“லாவணி” என்றால் தர்க்க வாதம். அதாவது தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்ற விவாத நிகழ்ச்சிபோல அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் கலை வடிவமாக இது இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் தோன்றிய இக்கலை, 18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தமிழகத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. தற்போது தமிழகத்தில் அதிபட்சமாக 20 லாவணி குழுக்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக, லாவணிக் கலையில் இருந்துவரும் தஞ்சையைச் சேர்ந்த மூத்த லாவணி கலைஞர் ஜோதிவேல் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

இது மராட்டியர்களின் கலை வடிவம். சரபோஜி மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது அவர்களின் மொழி புரிதலுக்காக அங்கிருந்து சில கலைகளும் அவர்களோடு தஞ்சைக்கு
வருகிறது. அப்படி வந்ததே பொய்க்கால் குதிரை ஆட்டமும், லாவணிக் கலையும். லாவணி மராட்டியத்தில் ஆட்டமும் பாட்டுமாக இருந்திருக்கிறது. தஞ்சை வந்த பிறகு ஆட்டம் இல்லாமல் வெறும் பாடல் வடிவமாக மாறியது. வயல்களில் வேலை செய்பவர்கள், நாற்று நடுகையில் களைப்பைத் தீர்க்கவும், அறுவடை காலங்களில் உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்கவும், ஒருவருக்கொருவர் கிண்டல் கேலி செய்து, இயல்பான கிராமிய இசைப் பாங்குடன் பாடத்தொடங்கியதே லாவணிக்கலையின் தொடக்கம் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேடையில் இரண்டு பிரிவினர் எதிர் எதிராக அமர்ந்து எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரில் பாடல் மற்றும் வசனத்தை இசையோடு பேசி ஒரு தலைப்பை விவாதிக்கும் நிகழ்ச்சியாகவும் இது இருந்தது. கிட்டதட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இதுமாதிரியான தர்க்கவாத நிகழ்ச்சிகள் உயிர்ப்புடன் இருந்திருக்கிறது என்றவர், ராகம், தாளத்துடன் தமிழ் புலமை மிக்கவர்கள் மட்டுமே இக்கலையில் ஈடுபட முடியும். இசை கருவி வாசிப்போர், விவாதம் செய்வோர் என, ஐந்து முதல், ஏழு கலைஞர்கள்வரை ஈடுபடுகின்றனர். தப்பு, துந்தனா, கை தாள கருவி, ஆர்மோனியம் உள்ளிட்ட இசைக் கருவிகள் லாவணியில் இடம்பெறும்.

தாங்கள் இடம்பெற்ற குழுவிற்கு வலுசேர்க்க புராண, இதிகாசக் கதைகள், தமிழ் இலக்கியத்தில் இருந்து கதைகள், வரலாற்று நிகழ்வுகளின் உண்மைகள் போன்றவற்றைப் பாடியும், கதையாகச் சொல்லியும், நயத்துடன் விவாதிக்க வேண்டும். சொல்ல வரும் கருத்து வலிமையானதாக, நேரம் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாகப் பதில் சொல்லி, எதிர்க்கட்சியை வீழ்த்தும்
கட்சியே வெற்றிபெறும். கிட்டதட்ட தமிழில் வரும் பட்டிமன்றத்தைப் போன்றதொரு வடிவம். ஆனால் உரையாடல் இல்லாத பாடல் வடிவம்.

ஆரம்பத்தில் மக்களை மகிழ்விக்க, லாவணிக் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புராண இதிகாசங்கள், சித்தாந்தங்கள் போன்றவை, லாவணி மூலமாக மக்களுக்கு ஊட்டப்பட்டது. மராத்திய லாவணிக்கு முன்பாக, தமிழகத்தில் காமன் கூத்து என்ற புராணக் கதை, லாவணி பாணியை போலவே வழங்கப்பட்டு வந்துள்ளது. காமனை சிவன் எரித்தார் என்ற புராண கதையில் எரிந்த கட்சி என்பது காமனை குறிக்கிறது, எரியாத கட்சி என்பது சிவனைக் குறிக்கிறது. லாவணி போன்ற வடிவில் அந்தக் கூத்து இருந்ததால், லாவணியை வழங்குவதிலும் எரிந்த கட்சி, எரியாத கட்சி பின்பற்றப்பட்டது.

கலை மூலம் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதே இதில் முக்கியம். காலச்சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாத எந்த ஜீவராசியும் தளைக்க முடியாது. கலையும் இலக்கியமும் மக்களுக்கானது. வெள்ளைக்காரர்களை எதிர்க்க கலை வடிவங்களை பயன்படுத்தவில்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா? எத்தனை காலத்திற்கு அரைத்த மாவையே அரைக்க முடியும். மராத்திய மன்னர்கள் காலத்தில் தொடங்கிய லாவணி கலை, ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர வேட்கை ஊட்டவும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மக்களுக்கு நாட்டு நடப்புகளை சொல்வதற்கும் பயன்பட்டது.

அரசியல் கட்சிகள் ஆதிக்கம் பெற ஆரம்பித்த காலத்தில், கட்சிகள் இடையே காரசார விவாதங்கள், லாவணியில் இடம் பெற்றன என்ற ஜோதிவேல், மக்கள் குறையை அரசாங்கத்திடம் எப்படி தெரியப்படுத்துவது என்று தர்க்க வாதம் செய்வது லாவணிக் கலைதான். இதில் நேரடியாகவே செய்திகள் இடம் பெறும் என்கிறார். லாவணிக் கலை இப்போது ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போதுல்ல இளைய தலைமுறையினருக்கு இதுபோன்ற ஒரு கலைவடிவம் தமிழகத்தில் இருப்பது தெரியாமலே போய்விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது என வருத்தம் தெரிவித்தவர், இன்றைய தலைமுறைக்கு லாவணிக் கலையை சொல்லித்தர எங்களைப் போன்ற வயதானவர்கள் மட்டுமே இருக்கிறோம். லாவணிக் கலையில் என் ஆசான் கல்யாணி அம்மா. லாவணிக் கலையில் இருக்கும் கடைசிப் பெண்கலைஞரும் அவர் மட்டுமே. அவருக்கும் வயது முதிர்வாகிவிட்டது. உடல் நலம் வெகுவாய் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றவாறு விடைபெற்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கடைசி லாவணிக் கலைஞரான கல்யாணி அம்மாவிடம் பேசியபோது.. எதிர் எதிராக இடம்பெறும் இரு குழுக்களில் முதலில் விருத்தமும் அதைத் தொடர்ந்து பாட்டும் வரும். கலை மீதிருந்த ஆர்வத்தில் 12 வயதில் லாவணிக் கலையை கற்க ஆரம்பித்தேன். பாண்டிச்சேரி, வேதாரண்யம், சென்னை போன்ற இடங்களுக்கு இந்தக் கலை சார்ந்து பலமுறை பயணித்திருக்கிறேன். இப்போது எனக்கு வயது 68. லாவணிக் கலைஞர்களில் சிலர் தஞ்சாவூரிலும் இருக்கிறார்கள். அழிவின் விளிம்பில் நிற்கும் இந்தக் கலையை சிலர் இறப்பு வீட்டில் இப்போது வருமானத்திற்காக மட்டுமே செய்கிறார்கள் என்றவாறு பேசமுடியாத நிலையில் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி விடைபெற்றார்.

சரபோஜி மன்னர்கள் காலத்தில் தஞ்சாவூரின் தெருக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லாவணி பாடல்கள் ஒலித்தன. அவை புத்தக வடிவில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் அலமாரிகளை மட்டுமே அலங்கரித்து வீற்றிருக்கும் லாவணிப் பாடல்கள் தங்களை பாடும் குரலுக்காக காத்துக்கிடக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யோகம் அறிவோம்! (மருத்துவம்)
Next post அரிவாள் ஆட்டம்!! (மகளிர் பக்கம்)