உணவு ரகசியங்கள்!! (மருத்துவம்)
வைட்டமின் டி கண்டுபிடிப்பு
பண்டைய பாரம்பரிய மருத்துவத்தில், Rickes என்னும் எலும்புருக்கி நோயைக் குணப்படுத்துவதற்கு சூரிய வெளிச்சமே பயன்படுத்தப்பட்டது. சர் எட்வர்டு மெலன்பி என்பவர்தான், கொழுப்பு உணவுகளிலுள்ள கரையும் தன்மையுள்ள ஒரு பொருள் எலும்புருக்கி நோயைக் குணப்படுத்துவதாகக் கண்டறிந்தார். அதன்பிறகான பல கட்ட ஆய்வுகளில் பண்ணா மீனின் (Cod fish) ஈரல் எண்ணெயில் இருப்பதும் இந்த கொழுப்புப்பொருள்தான் என்றும் இதையே எலும்புருக்கி நோய்க்குப் பயன்படுத்தலாம் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. பிறகு ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மேக்காலம் என்பவரால் வைட்டமின் டி என்று பெயரிடப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
வைட்டமின் டி – வகைப்பாடு
வைட்டமின் டி இரண்டு நிலைகளில் கிடைக்கிறது. அசைவ உணவுகளிலிருந்து பெறப்படும்; வைட்டமின் டி3 என்னும் cholecalciferol மற்றும் தாவர உணவுகளிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி2 என்னும் ergocalciferol. இந்த இரு வகை வைட்டமின் டி- யும் உணவுகளிலிருந்து பெறப்பட்டாலும், இவற்றை செயல்படும் நிலைக்கு மாற்றுவதற்கு வேறு பொருட்கள் தேவைப்படுகின்றன என்று 1922 லேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அவை அசைவ உணவுகளிலிருக்கும் 7-dehydro-cholesterol மற்றும் தாவர உணவிலிருக்கும் ergosterol.
தேவையான அளவு
ஒரு வயது குழந்தைக்கு 10 மைக்ரோ கிராம், 13 வயது முதல் 70 வயது வரையில் 15 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. ஆனால், 70 வயதிற்கு மேல், வைட்டமின் டி பற்றாக்குறை அதிகமாகி, எலும்புகள் பலகீனமடையும் என்பதால், 20 மைக்ரோ கிராம் அளவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் 15 மைக்ரோ கிராம் வைட்டமின் டி தினசரி தேவையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் டி உணவு ஆதாரங்கள்
வைட்டமின்கள் அனைத்தும் ஐந்து வகையான உணவுகளிலிருந்தே தேவையான அளவில் கிடைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வைட்டமின் டி மட்டுமே உணவின் வழியாகப் பிரதானமாகக் கிடைக்கப்படுவதில்லை. காரணம், வைட்டமின் டி- யை எந்தத் தாவரமும் உற்பத்தி செய்து வைத்திருப்பதில்லை. அசைவ உணவுகளில் மட்டும் முட்டை மஞ்சள் கரு மற்றும் ஆட்டு ஈரலில் சிறிதளவும், சில கொழுப்பு நிறைந்த மீன்களின் கல்லீரலில் சேமிக்கப்பட்டு, உணவாக எடுத்துக்கொள்ளும்போது சிறிதளவும் உடலுக்குக் கிடைக்கிறது.
அதுவும் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கும் நிலையில் தான் கிடைக்கும். சொற்ப அளவிலேயே கிடைக்கும் வைட்டமின் டியால், சத்து குறைபாடு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சில உணவுகளில் செறிவூட்டப்படுகிறது. அமெரிக்காவைப் பொருத்தவரையில், பதப்படுத்தப்பட்ட பால், சோயா, பாதாம், ஓட்ஸ் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் பால் ஆகியவற்றில் வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்டே பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதனால் அங்கிருக்கும் மக்கள் குடிக்கும் ஒரு கப் பாலில் 3 மைக்ரோ கிராம் வைட்டமின் டி இருக்கிறது. இவை தவிர, காலை உணவுக்காகப் பயன்படுத்தப்படும் தானிய வகைகளான சோளம், ஓட்ஸ் போன்றவற்றில் செறிவூட்டம் செய்யப்படுகிறது. வெறும் 10 % அளவே உணவிலிருந்து வைட்டமின் டி கிடைக்கும் நிலையில் மீதமுள்ள 90 % சூரிய வெளிச்சத்தின் மூலமாகவே பெறப்படுகிறது.
வைட்டமின் டி குறைபாடு
வைட்டமின் டி சத்து குறைபாட்டால் Rickets என்னும் எலும்புருக்கி நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. ஒன்றிலிருந்து மூன்று வயது வரையில் குழந்தைக்குப் போதுமான வைட்டமின் டி கிடைக்காத நிலையில், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பருவ வயதில் வயதுக்கேற்ற உயரம் கிடைப்பதில்லை. அதேபோல், கர்ப்பகாலத்திலும் பாலூட்டும் காலத்திலும் தாய்க்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால், பிறக்கும் குழந்தை எலும்புகளில் உறுதியில்லாமல் பிறப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சி நிலையிலும் எலும்புகளில் போதுமான உறுதியில்லாமல் rickets நோய் ஏற்படுகிறது.
இவைமட்டுமல்லாமல், சூரியக்கதிர்கள் அவ்வளவாக ஊருடுவாமல் நீண்ட குளிர் இருக்கும் பிரதேசங்களில் வசிப்பவர்கள், அசைவ உணவை முழுவதும் விடுத்து சைவ உணவை எடுத்துக்கொள்பவர்கள், தாய்க்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கும் நிலையிலும் மூன்று மாதங்களுக்கும் மேலாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் போன்றோருக்கு மிக எளிதில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டுவிடுகிறது.
வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்ட குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறு, சுவாசப்பாதை பிரச்சினைகள், பல் வளர்ச்சியில் குறைபாடு அல்லது தாமதம், வளைந்த கால் மூட்டு, முன்னோக்கி வளைந்த மார்பெலும்பு, உறுதியற்ற ஒழுங்கற்ற தலைப்பாகம் போன்றவை அறிகுறிகளாகக் காணப்படுவதுடன் நடக்கும்போதுகால் தாங்கலான ஒழுங்கற்ற நடையும் இருக்கும்.
பெரியவர்களைப் பொருத்தவரையில், Oteomalacia என்னும் எலும்பு மென்பாடு நோய், வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படுகிறது. வைட்டமின் டி போதுமான அளவிற்குக் கிடைக்காதபோது, எலும்பை உருவாக்கி உறுதியையும் அளிக்க உதவும் கால்சியம் சத்து தேவையான அளவு உடலுக்கு சேர்வதில்லை. இதனால் ஏற்படும் எலும்பு மென்பாடு நோயின் அறிகுறியாக, எலும்பு மற்றும் எலும்புடன் சேர்ந்திருக்கும் தசைகளில் தீராத வலியுடன் வீக்கம் ஏற்படுதல், எளிதில் உடைந்துவிடுதல், நடப்பதில் சிரமம் போன்றவை காணப்படும்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடத்தில் காணப்படும் இந்த இரண்டு வகையான எலும்பு மென்பாடு நோய்களுக்கும் 25 முதல் 125 மைக்ரோ கிராம் அல்லது 1000 – 500 IU அளவில் வைட்டமின் டி மருந்தாகக் கொடுக்கலாம். நீண்ட நாட்களுக்குக் கொடுத்தாக வேண்டிய நிலை இருப்பின், வைட்டமின் மிகை நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, 10 மைக்ரோ கிராம் அளவிற்கும் கொடுக்கலாம். இதனுடன் வைட்டமின் டியின் செயல்பாட்டுக்குத் தேவையான கால்சியம் சத்து நிறைந்த உணவுகளான பச்சை காய்கள், கீரைகள், வெந்தயம், கேழ்வரகு போன்றவற்றையும் உணவில் தொடர்ச்சியாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி மிகைநிலை
பள்ளிக் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்களுக்கு 100 மைக்ரோ கிராம் அளவிற்கு மேல் வைட்டமின் டி உடலில் சேரும்போது உபாதைகளைக் கொடுக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்நிலையில் உடலில் அதிக அளவில் கால்சியம் சத்து சேர்ந்துவிடுவதால், ரத்தத்தில் கால்சியம் சத்து அதிகரித்து, ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் இதயத்தசைகளின் மென்திசுக்கள் தடித்துவிடும் நிலையும் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், எலும்புச் திசுக்களில் அதிக கால்சியம் சேர்ந்து, படிமானமாகி, சிறிது சிறிதாக எலும்பின் உறுதியையும் குறைத்துவிடுகிறது. உடலில் அதிக அளவு கால்சியம் சேர்ந்துவிடும் நிலையில், அறிகுறியாக பசியின்மை, உலோகத் தன்மையுடன் கூடிய சுவை, வாய் உலர்ந்து போய்விடுதல், குமட்டலுடன் வாந்தி, சில நேரங்களில் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது. கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் மருந்துணவுகளைத் தொடர்ச்சியாக அதிக அளவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு எளிதில் வைட்டமின் டி நச்சுத் தன்மை ஏற்பட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.