வருமானத்தை ஈட்டும் தஞ்சாவூர் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான திறமைகள் இருக்கின்றன. அந்தத் திறமைகளை மேம்படுத்தினால், அதனைக் கொண்டே ஒரு நிரந்தரமான வருமானத்துக்கு வழிவகை செய்யலாம். அந்த வகையில், சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல் தனக்குள் பொதிந்துகிடந்த ஓவியத் திறமையை மெருகேற்றி அதனை ஒரு தொழிலாக செய்து வருகிறார் கீதாலட்சுமி. ‘‘சிறுவயதிலிருந்தே எனக்கு ஓவியத்தின் மேல் அதிக ஆர்வம் இருந்தது. அதற்கு காரணம் எனது தந்தை ஒரு பிரபலமான ஓவியர். பள்ளியில் படிக்கும்போது ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன். அன்று முதல் ஓவியத்தில் பெறும் புகழ்பெற்று பலருடைய பாராட்டு களையும் பரிசுகளும் பெறவேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அதனால் பள்ளியில் ஓவியத்திலும், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு (Art and Craft) என்ற வகுப்பில் சேர்ந்தேன். என்னுடைய கலைப்பொருட்களைப் பார்த்துவிட்டு ஆசிரியர்களும் பள்ளி மாணவியர்களும் பாராட்டுவார்கள்.
பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு பள்ளியில், ஒரு வயதான பாட்டி தஞ்சாவூர் ஓவியம் நன்றாக வரைவார்கள். அவர்கள் வரையும்போது பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பேன். அதைப் பார்த்த பாட்டி நீ இக்கலையைக் கற்றுக்கொள்கிறாயா? நான் கற்றுத்தருகிறேன் என்றார்கள். அதைக் கேட்ட நான் மிக்க மகிழ்ச்சியுடன் பாட்டிக்கு நன்றியைத் தெரிவித்ததோடு பாட்டியிடம் ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மேலும் தெரிந்துகொள்ள அவர்களே எனக்கு வேறு ஒரு பயிற்சியாளரை அறிமுகம் செய்தாங்க. அவரிடம் ஒரு ஆண்டுகாலம் பயிற்சியெடுத்து அந்த ஓவியத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். பின்பு நானாக ஒவ்வொரு ஓவியமாக வரைய ஆரம்பித்தேன். என்னுடைய கலை ஆர்வம் மற்றும் நேர்த்தியைப் பார்த்த எனது தந்தை அதனைப் பாராட்டி நீயும் தஞ்சாவூர் ஓவியம் வரையும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கலாமே என்றார். அதன் பிறகு தஞ்சாவூர் ஓவியத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து அதனை சந்தைப்படுத்தும் முயற்சியில் சென்னை காதி கிராஃப்டில் என்னுடைய ஓவியங்களை வைத்தேன், நன்றாக விற்பனை ஆகின. அவற்றைப் பார்த்த சிலர் தங்களுக்குத் தேவையான ஓவியங்களைத் தஞ்சாவூர் ஓவியங்களாக வரைந்து தருமாறு கேட்கின்றனர். அவற்றை இன்றுவரை செய்து
கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இவை தவிர நவீன ஓவியங்களும் வரைகிறேன். தஞ்சை ஓவியம் என்பது மிகப் பழமையான கலை. நம் முன்னோர்கள் பலர் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் இவ்வோவியங்கள் சுத்த தங்கத் தகடுகளால் செய்யப்பட்டுள்ளன. மற்றும் அவற்றில் முத்துகள், வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். தற்போது தங்க தகடுகளுக்கு பதில் கோல்ட் பாயில்கள் மற்றும் ஜெய்ப்பூர் ஜெம்ஸ், அமெரிக்கன் டயமென்ட்ஸ் போன்ற கற்களை பயன்படுத்துகிறோம். தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்குத் தனித் திறமை வேண்டும். அதற்குப் பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம். ஓவியங்களுக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்ய வேண்டும். என்னுடைய ஓவியங்களை நான் விற்பனைக்கு வைக்கும் இடத்தில் ஓவியங்களை பெற்றவர்கள், அதில் உள்ள வன்ணங்கள் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருப்பதாக கூறிச் சென்றுள்ளனர்.
இது என் திறமைக்குக் கிடைத்த பரிசாக எடுத்துக்கொண்டேன். அதன் பின்னர் தஞ்சாவூர் பெயிண்டிங் தவிர நிப் பெயிண்டிங், கேரளா மியூரல் பெயிண்டிங், கான்வாஸ் பெயிண்டிங், மிரர் கிளாஸ் பெயிண்டிங், ஸ்டெயின் கிளாஸ் பெயிண்டிங், மெட்டல் எம்போஸிங், மியூரல் பெயிண்டிங், பாட் மியூரல் பெயிண்டிங், வாட்டர் கலர் பெயிண்டிங்… என பலவித ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். அதனை கற்றுக் கொடுக்கவும் செய்கிறேன்’’ என்றவர் இதன் மூலம் ஒரு நிரந்தர வருமானம் பார்க்க முடியும் என்றார். ‘‘ஓவியக்கலையில் ஆர்வமிருந்தால் நிரந்தரமான வருமானம் கிடைக்கும். எல்லாவற்றையும் விட நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை அவசியம். இதுநாள் வரை நான் நூற்றுக்கணக்கான வகுப்புகள் எடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான ஓவியங்களை வெளிநாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுதும் விற்பனையும் செய்துள்ளேன். தனித்திறமைகளில் நம்பிக்கையிருந்தால் அதனை ஒரு தொழிலாக மாற்றி வாழ்க்கையில் சாதிக்கலாம். இது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான வீட்டிலிருந்து செய்யக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பாக அமையும். மேலும் நம்முடைய தனித்திறமைக்கு ஏற்ப ஓவியங்களில் வித்தியாசம் காட்டினால் கூடுதல் புகழ்பெறலாம்.
விட்டிலிருந்தபடியே செய்யும் இத்தொழிலில் பெண்களுக்க பெரிய அளவில் கிடைப்பது மன அமைதியும் மகிழ்ச்சியும் என்றால் அது மிகையாகாது. ஆரம்பத்தில் எனக்கு இந்த ஓவியக் கலையை கற்றுக்கொடுத்த அந்த வயதான பாட்டியம்மாவையும், மேலும் மெருகேற்றியவரும் குருவாகவிருந்து செயல்பட்ட சேகர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குள் இருந்த தனித்திறன் ஓவியக்கலைப் போல் உங்களுக்கும் இருந்தால் நீங்கள் ஒரு நல்ல பயிற்றுநரிடம் கற்றுக்கொண்டு வீட்டில் இருந்தபடியே ஒரு சிறு தொழிலாக செய்யலாம். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக ஓவியம் வரைந்து கொண்டு பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன். மனதுக்கு நிம்மதியாகவும், மன அமைதியும் பெற்றுள்ளேன். மிகச் சிறந்த ஆற்றல் மிக்க கலை இந்த ஓவியக்கலை. விருப்பத்துடன் கற்றுக் கொண்டால், வெற்றி என்ற கனியினை சுவைக்கலாம். பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் இந்த கலையினை பயிலலாம். இக்கலையில் பல வருடங்களாக என் தந்தையும், கணவரும், எனக்கு ஊக்கம் அளிப்பவர்களாக இருந்து வருகிறார்கள்.
என்ன தான் அழகான அன்பான பெண்ணாக இருந்தாலும் அவளை நம்பி சிறு வருமானம் வரவில்லை என்றால் அது அந்தக் குடும்பத்திற்கும் அவளுக்கும் ஒரு மனச்சோர்வையே கொடுத்துக்கொண்டிருக்கும் என்பது யதார்த்தமான உண்மை. அதனால்தான் ஒரு சில பெண்கள் கிடைத்த வேலைக்குப் போகலாமா, ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டு செய்யலாமா என நினைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை தனது திறனைக்கொண்டு செய்யும் தொழிலே சிறந்தது என்று சொல்வேன்’’ என்றார் ஓவியக் கலைஞர் கீதாலட்சுமி.