ஆடையில் ஆரி ஒர்க் அலங்காரம்..! மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்!(மகளிர் பக்கம்)
ஆடை அணிவதில் குஜராத்தி, மார்வாரி பெண்களுக்கு நிகரில்லை என்பது அந்தக் காலம். அதுபோல, கண்ணாடி, ஜரிகை, ஜிகினா என நாட்டுப்புற பெண்களின் ஆடை அலங்காரமும் பெண்களிடையே ஒரு தனி அட்ராக்ஷனை இப்போது ஏற்படுத்தி உள்ளது. நாங்களும் உங்களைப் போல கலக்குவோம்ல.. என ஆடை அணிவதில் அனைத்து மாநில பெண்களும் போட்டி போட்டு பாரபட்சமின்றி கலக்கி வருகிறார்களே. எப்படி இது சாத்தியமானது என ஆராய்ந்தால், ஆரி வடிவமைப்பு கலைக்கு பெண்ணுலகம் இப்போது அடிமையாகி இருப்பது தான் காரணம்.
ஏறக்குறைய எல்லா டைலர் கடையிலும் ஆரி வேலைப்பாடு, எம்ப்ராய்டரி, ஃபேஷன் வடிவமைப்புடன் உடை தைத்து தரப்படும் என விளம்பரம் செய்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் அந்த கலையில் வல்லுநர்களா என்று ஆராய்ந்து பார்த்தால், அதிலும் ஒரு யுத்தி கையாளப்படுவது தெரிகிறது. அதாவது ஒரு ஊரில் ஒருத்தரோ அல்லது ஒரு சிலரோ தான் ஆரி வேலைப்பாடு கலையில் வல்லுநராக இருப்பார்கள். அதுவே சென்னை போன்ற நகரங்களில் ஒரு ஏரியாவுக்கு ஒரு சில கலைஞர்கள் என அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.
இவர்களிடம் எல்லா டைலர்களும் தங்களது கஸ்டமர் கொடுத்த துணியை கொடுத்து அதில் வேலைப்பாடு செய்து தருகிறார்கள். அது பிளவுசாகவோ அல்லது சுடிதார் துணி எதுவாக இருந்தாலும், அதற்கான குறிப்பிட்ட டிசைன் குறிப்பிட்ட வல்லுநர்கள் மூலமே டிசைன் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட கலையான ஆரி வேலைப்பாடுகளில் அசத்தி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த பத்மஜோதி.
செக்காலை சாலை செல்லும் வழியில் யாரைக் கேட்டாலும் இவரின் கடையினை அடையாளம் காட்டுகிறார்கள். ‘‘எந்த ஒரு தொழிலுக்கும் அசாத்திய பொறுமையும், கவனமும் மிகவும் அவசியம். முதலீடு கூட அப்புறம் தான். அதுலயும் குறிப்பா ஆரி வேலைப்பாடு என்பது கவனம் சிதறாமல் செய்ய வேண்டிய அற்புதமான கலை.
அழகுக்கு மேலும் அழகூட்டும் இந்தக் கலையிலும் பொறுமை தான் மிகமிக அவசியம். அதே சமயம் கவனச்சிதறல் இருக்கக் கூடாது. பண முதலீடு என்பது இரண்டாம் பட்சம். நான் கூட ஒன்னும் பெரிசா முதலீடு பண்ணல. கையில் இருந்த சொச்ச காச வச்சுதான் கடையை தொடங்கினேன். அதற்கு முன்பு, மற்றவர்களுக்கு தையல் கலையினை சொல்லிக் கொடுத்து வந்தேன். அதைத் தொடர்ந்து ஆரி வேலைப்பாட்டையும் கற்றுக் கொண்டேன்.
கடை தொடங்கிய முதல் மாதத்தில் லாபம்னு எனக்கு கிடைத்தது வெறும் 1,000 ரூபாய் தான். கடையை தொடர்ந்து நடத்த முடியுமான்னு நான் ஒரு கனம் கூட யோசிக்கல. காரணம், ஆயிரம் ரூபாய் லாபம் அளித்த எனது ஒரு சில கஸ்டமர்களே அவர்களின் நண்பர்கள், உறவினர்கள்னு அறிமுகம் செய்தாங்க. இதற்கு மத்தியில் என் தோழிகள் ரொம்ப ஆர்வத்தோட என்ன ஊக்குவிச்சாங்க. அவங்க மூலமாகவும் கஸ்டமர்கள் கிடைச்சாங்க. தற்போது எல்லா செலவும் போக ஒரு 30 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடிகிறது’’ என்றவர் பெண்களுக்காக இது மிகவும் உகந்த தொழில் என்றார்.
‘‘இதில் எனக்கு வரும் வருமானம் எனக்கான வாழ்வாதாரம் தான். கணவரோட தொழில்ல குடும்பம் நன்றாகவே சென்றாலும், எனக்குன்னு ஒரு தொழில் பிடிப்பு இருக்கணும்னு முடிவெடுத்து களத்தில் இறங்கி சாதித்து உள்ளேன். எனது நிறுவனத்தில் பெண்களுக்கு ஆரி வேலைப்பாடு சொல்லித் தருகிறோம். எம்ப்ராய்டரிங் மற்றும் டைலரிங் பயிற்சியும் உண்டு. என்னிடம் இப்போது 10 பெண்கள் வேலை பார்க்கிறார்கள். நம்மால 10 குடும்பம் சந்தோஷமாக இருப்பது மனதிற்கு இனிமையாக உள்ளது.
டைலர்கள் பலரும் ஆர்டர் தருகிறார்கள். சொல்லப்போனா அவங்களும் ஆரம்ப காலத்துல எனக்கு ரொம்பவே உதவி செய்தவர்கள் தான். ஃபேஸ்புக், வாட்சப் அப்படின்னு சமூக வலைத்தளங்களில் என்னோட ஆடை வடிவமைப்புகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் இருந்தும் ஆர்டர்கள் குவிகிறது.
இது மட்டுமன்றி, என்னிடம் பயிற்சி பெற்று மதுரை, திருச்சி, ராஜபாளையம், தேவகோட்டை, பட்டுக்கோட்டை என செட்டில் ஆன பெண்கள் பலரும் அங்கிருந்து ஆர்டர் எடுத்து கூரியரில் அனுப்புகிறார்கள். ஆர்டர் எங்கிருந்து கிடைத்தாலும், ஒரு வாரத்தில் டெலிவரி செய்யும் அளவில் என்னிடம் பெண்கள் பலர் வேலை பார்க்கிறார்கள்’’ என்றவர் தற்போது சணல் பை உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார்.
‘‘பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வாக சணல் பைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொறுமையும், கைநேர்த்தியும் உள்ள பெண்கள் எல்லோரும் ஆரி வேலைப்பாடு மற்றும் சணல் பை தயாரிப்பினை கற்றுக் கொண்டு, சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என சொல்லி முடித்தார் பத்ம ஜோதி.