நான் துவங்கும் தொழில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும்!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 18 Second

‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். எங்க வீட்டில் எல்லாரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று இப்போது அதிகாரிகளாக இருக்காங்க. அவர்களைப் பார்த்து எனக்கும் இளம் வயதிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்திருந்தது’’ என்று கூறும் நந்தினி பிரியா தற்போது எந்த பதவியும் இல்லாமல், பலருக்கு பல முறையில் தன்னால் முடிந்த சேவையினை செய்து வருகிறார்.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மதுரை சட்டக்கல்லூரியில் பி.எல் படிப்பில் சேர்ந்துள்ளார். ‘‘சட்டம் படித்து முடித்ததும் ஐ.ஏ.எஸ்க்கு என்னை தயார் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் என்னுடைய முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. எட்டு முறை தேர்வு எழுதியும் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு உடைந்ததால், நான் ரொம்பவே துவண்டு போனேன். அந்த சமயம் எனக்கு ஊக்கமளித்தது என் பெற்றோர்தான்.

அவங்கதான் ஐ.ஏ.ஏஸ்மட்டுமே வாழ்க்கையில்லை… அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்குன்னு எனக்கு புரிய வச்சாங்க. நான் ஐ.ஏ.எஸ் தேர்விற்காக அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிச்சேன். அந்த பயிற்சி எடுத்தும் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை என்றாலும், அந்த பயிற்சி எனக்கு மிகவுமே உதவியாக இருந்தது. அதனால் என்னைப் போல் பலர் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஆனால் அதற்கு அவர்களால் போதிய அளவில் ெசலவு செய்ய முடியாது. அப்படிப்பட்ட 200 மாணவர்களுக்கு இரண்டு வருடங்கள் இலவசமாகப் பயிற்சியளித்து வந்தேன்’’ என்றவர் அதன் பிறகு தன்னை ஒரு தொழில்முனைவோராக மாற்றிக் கொண்டார்.

‘‘வீட்டில் கேக் மற்றும் சாக்லெட் செய்து அதை விற்பனை செய்வது கூட ஒரு தொழில் தான். எனக்கும் அதே போல் ஒரு தொழில் துவங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதே சமயம் நான் தொடங்கும் தொழில் எனக்கு மட்டுமில்லை மற்றவர்களுக்கும் பயன்தரக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி எல்லாருக்கும் பயன் தரக்கூடியது என்ன என்று யோசித்த போது தான் இயற்கை முறையில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய், உடலுக்கு பயன்படுத்தும் சோப்பும் தயாரிக்கலாம்ன்னு எண்ணம் ஏற்பட்டது. மேலும் என் நண்பர்கள் பலர் சித்த மருத்துவத்தில் சிறப்பாக விளங்கி வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி மதுரைக்கு வருவாங்க.

இங்க இருக்கும் மூலிகைகளை வாங்கி செல்வார்கள். இங்கு நிறைய இயற்கை மூலிகைகள் இருக்கிறது. இது எல்லாவற்றிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பார்கள். அது மட்டுமில்லாமல் அது குறித்து ஆராய்ச்சியும் செய்து வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை இங்கு வரும் போது, இயற்கை மூலிகைகள் குறித்து பேசுவாங்க. அதைக் கேட்கும் போது, என்னை அறியாமலேயே இயற்கை பொருட்கள் மேல் ஈடுபாடு அதிகமானது. காரணம் என் நண்பர்கள் சில டிப்ஸ் எல்லாம் தருவாங்க. அவங்க சொல்வதை கேட்டு நானும் வீட்டில் செய்து பார்ப்பேன். எனக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. அதுவும் என்னை இயற்கையான முறையில் சோப்பு மற்றும் எண்ணெய் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியதுன்னு சொல்லலாம். அந்த தூண்டுதல் தான் ‘ஏகா’ (Yeka) நிறுவனம் உருவாக காரணமாக இருந்தது.

என் நண்பர்களின் உதவியுடன் முருங்கை கீரையில் தலைக்கு தேய்க்கும் எண்ணையை தயாரித்தோம். இதற்கு நிறைய சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள், மூலிகை சார்ந்த புத்தகங்கள் பெரிதும் பயன் கொடுத்தது. இந்த கீரையோடு, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை முதலிய ஆறு வகையான கீரையைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோம். இந்த எண்ணெய் தயாரிக்க நிறைய ஆய்வுகள் செய்து ஓர் ஆண்டுக்குப்பின்னரே இதை நாங்கள் சந்தைப்படுத்தினோம்.

வெர்ஜீன் தேங்காய் எண்ணெயையும் பன்னீர் ரோசையும் கலந்து உடம்பிற்கு தேய்க்கும் எண்ணெயைத் தயாரித்தோம். இது நல்ல வரவேற்பு பெற்றது’’ என்றார்.‘‘ஒரு பொருளை தயாரித்து சந்தைப்படுத்துதல் என்பது சற்று சவாலான காரியம். நாங்கள் இதைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது. முதலில் இரண்டு ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டோம். குறிப்பாக நாங்க தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்துவது சிக்கலாக இருந்தது. என்ன பிரச்னைகள் மற்றும் தடைகள் ஏற்பட்டாலும், சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் மட்டுமே என் மனதில் இருந்தது. இதற்கு காரணம் நான் முன்பு சந்தித்த தொடர் தோல்விகள்.

நல்ல தரமான, சுகமான, உடலிற்கு எந்த வித தீங்கும் விளைவிக்காததை தயாரித்தாலும், அதை சந்தைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது. அப்போதும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் போன்றவை பெரும் உதவியாக இருந்தது. இதை என்னுடைய தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விற்பனை செய்ய வசதியாக இருந்தது. எங்களின் பொருட்களும் அவர்களுக்கு பிடித்து போக, நம்பிக்கையோடு வாங்கத் தொடங்கினார்கள். தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்’’ என்றவர் பெண்களுக்கு சுய சம்பாத்தியம் முக்கியம் என்று பதிவிட்டார்.

‘‘பெண்கள் திருமணமானவுடன், குடும்பம், குழந்தைகள் என்று தங்களின் எண்ணத்தினை மாற்றிக் கொள்கிறார்கள். குடும்பத்தை மட்டுமே நன்றாகப் பார்த்துக் கொண்டாலே போதும் என்று நினைக்கிறார்கள். வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், செல்வதில்லை. அது போன்றவர்களுக்கும் நாங்கள் வேலை கொடுத்து அவர்களுக்கு சம்பாத்தியம்
ஏற்படுத்தி தருகிறோம். தற்போது எங்களின் நிறுவனத்தில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எங்களுடைய நோக்கமே நிறைய பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது தான்’’ என்ற நந்தினி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘‘வியாசர்பாடியில் ‘ஆல் தி சில்ட்ரன்’ என்ற அமைப்புள்ளது. இது முழுக்க முழுக்க ஆண்களுக்கான இல்லம். இங்கிருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஏதேனும் குற்ற பின்னணியில் இருப்பார்கள். அல்லது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார்கள். அல்லது கொலை செய்யப்பட்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் இல்லம்தான் இது. சின்ன வயதிலிருந்தே இப்படிப்பட்ட குற்றப் பின்னணியில் இருந்து வருவதால் அவர்கள் தவறு செய்யவும் மேலும் அவர்களின் மனநிலை மற்ற பிள்ளைகள் போல் இல்லாமல் கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருக்கும். அன்பு, அரவணைப்பு, பாசம் போன்றவை கிடைக்காததால், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகம் பாதிக்கப்பட்டு சமூகத்தின் மீதும், பெண்கள் மீதும் அதிகம் வெறுப்பு உடையவர்களாக மாறி விடுகிறார்கள்.

இவர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை கொடுப்பதால் மட்டுமே திருத்திவிட முடியாது. ஒவ்வொரு ஆணும் இந்த சமூகத்தில் வளரும் போது அந்தந்த பருவத்தில் அவனை சுற்றியுள்ள சமூகம் ஒரு பெண்ணை எவ்வாறு பார்க்கிறது என்பதைப் பற்றிய புரிதல் அவசியம். ஆண் மகனிடம் பெண் பிள்ளைகளை சமமாக நடத்த வேண்டும், வெறும் காமத்திற்கு மட்டுமானவள் அல்ல என்பதை பெற்றோர்கள் சொல்லி வளர்க்க வேண்டும். அதன் மூலம் ஆணுக்கு இந்த சமூகத்தில் பெண்களை பற்றியான நல்ல புரிதல்கள் ஏற்படும். இது எதுவுமே சொல்லி புரிய வைக்க இவர்களுக்கு பெற்றோர்களோ, உறவினர்களோ அல்லது நண்பர்களோ கிடையாது. அந்த எண்ணத்தை மாற்ற நினைத்தேன். அவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர்களை நேரடியாக சந்தித்த போது அவர்களின் மனநிலை என்ன என்று புரிந்தது.

படிப்பிலும் அவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதே சமயம் பெண்கள் மீதும் மற்றவர்கள் மீதும் ஒரு வெறுப்பு எப்போதும் இருந்தது. மேலும் இந்த இல்லத்தில் 200க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தாலும் 18 வயது வரைதான் இந்த இல்லத்தில் இருக்க முடியும். அதன் பிறகு அவர்கள் தங்களுக்கான பாதையினை வகுத்துக் கொள்ள வேண்டும். சரியான படிப்பும் இல்லை என்பதால், அவர்கள் வெளியே வந்த பிறகு தேர்வு செய்யும் பாதையும் தவறாகத்தான் உள்ளது. இதனால் ஒரு திட்டம் வகுத்து இவர்களின் தனித்திறமையை ஆராய்ந்து அதற்கு ஏற்பவர்களை வழிநடத்த நினைச்சேன்.

சிலருக்கு நடனத்தில் ஆர்வமிருந்தது. ஒரு சிலர் விளையாட்டில் அதிக ஈடுபாட்டோடு இருந்தார்கள். சிலர் அறிவியல் கண்டுபிடிப்புகளில் திறமையாக இருந்தனர். இப்படி ஒவ்வொருவரின் தனித்திறமை மாறுபட்டது. தவறான திசையில் இருந்து அவர்களுக்கு பிடித்தமான துறைக்கு இவர்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்கள் விரும்பிய துறைக்கான பயிற்சி அளித்து பெண்கள் மூலமாகத்தான் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் அவர்களுக்கு பெண்கள் மீது ஒரு நல்ல மதிப்பும் மரியாதையும் வரும் என்று நம்பினேன். தற்போது அதற்கான பயிற்சிகள் கொடுத்து வருகிறேன்’’ என்று கூறிய நந்தினி பிரியா இளைஞர்களின் வாழ்வை தூய நெஞ்சமாக மாற்றி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி!(மருத்துவம்)
Next post குழந்தைகளுக்கும் வந்தாச்சு மூலிகை அழகு சாதனப் பொருட்கள்!(மகளிர் பக்கம்)