நோயாளியாக்கும் EMI வைரஸ்!!(மருத்துவம்)

Read Time:13 Minute, 48 Second

தினமும் உங்களுக்கு வரும் அலைப்பேசி அழைப்பில் வான்டடாக உங்களை அழைத்துப் பேசுவதில் முதலிடத்தைப் பிடிப்பது யாரென்று யோசியுங்கள். கண்டிப்பாக உங்களது வங்கியில் இருந்து வந்த அழைப்புக்களாக இருக்கும். ‘பர்சனல் லோனாவது வாங்குங்கள்… வட்டியில்லை’ என்று சொல்வார்கள். உங்களது வங்கிக் கணக்குக்கு கிரடிட் கார்ட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அழைப்பார்கள். உங்களுக்கான கார் லோன், வீட்டு லோன் என வகை வகையாய்ப் படையெடுப்பார்கள். தவணை முறையில் பொருட்களை விற்பவர்கள் தவிர்க்க முடியாத நண்பர்களாவார்கள்.

‘நீங்கள் எந்தக் கவலையும் பட வேண்டாம்’ என புதுப்புதுத் திட்டங்கள் வழியாக உங்களைச் சந்திக்காமலேயே உங்களது சம்பளத்துக்கான கணக்குப் போட்டு உங்களைக் கடனாளியாக்கிவிட்டு அடுத்தடுத்த நபர்களைத் தொடர்வார்கள். இதனால் பெரும்பாலான வீடுகளில் மாதச் சம்பளத்தை மொத்தமாகப் பார்த்தே பல ஆண்டுகளாகிவிட்டது. மாதம் முழுவதும் இந்தத் தேதிக்குள் இந்த EMI கட்டணுமே என்ற பதை பதைப்புடன் பயணிக்கின்றனர். ஒவ்வொரு நாளைக் கடப்பதும் இங்கு சுமையாகிப் போகிறது.

உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதிக்கும் வைரஸ் நோயாகவே இன்று கடன் சுமை மாறிவிட்டது. இந்த நெருக்கடியைக் கையாளும் உளவியல் வழிகள் என்ன?

மனநல ஆலோசகர் சினேகா ஜார்ஜ் கடன் உருவாக்கும் மனச்சிக்கல்களையும் அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் தீர்வுகள் பற்றி விளக்குகிறார். ‘‘கடன் பட்டவர்களால் தூக்க மாத்திரையின் உதவியின்றித் தூங்கக் கூட முடியாது என்ற நிலையே இங்கு தொடர்கிறது. பார்ப்பதை வாங்கும் நுகர்வுக் கலாச்சாரம் இவர்களைக் கடனாளியாக்குகிறது. திட்டமிடாமல் வாழ்வதும் தற்கால இளைஞர்களைக் கடனாளிகளாக மாற்றுகிறது.

நம் ஊரின் மழைவளம், வெப்பநிலைக்கும் ஏற்ப ஏரி, குளங்கள் என திட்டமிட்டு வாழ்ந்த நம் முன்னோர் காலத்தில் வெள்ளம், வறட்சி இரண்டுமே சமநிலையில் சமாளிக்கப்பட்டது. இருக்கும் இடத்தை எல்லாம் வீட்டு மனைகளாக மாற்றிக் கொண்ட இந்தத் தலைமுறை வெள்ளத்திலும், நிலத்தடி நீர் இன்றியும் தத்தளிக்கிறது. மனிதர்களது இன்றைய வாழ்க்கை முறையில் கடன் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது.

சின்னச்சின்னத் தேவைகளுக்காக தங்களால் திரும்பச் செலுத்த முடியும் கடன்களை மட்டுமே வாங்குகின்றனர். தனது வருமானத்துக்குள் செலவு செய்து பழக்கப்பட்டவர்களிடம் உங்களுக்கு வட்டியில்லாக் கடனாக அவசர நேரங்களில் உதவும் படியாக வங்கிகள் கடன் அட்டையை வழங்குகிறது. ஈ.சி. இ.எம்.ஐ என்ற வசதி விலை மதிப்புமிக்கப் பொருட்களையும் தவணை முறையில் வங்கிப் பயன்படுத்த உதவுகிறது. குறைந்த பட்ச வருமானத்தில் கூட நிறைந்த வாழ்வைப் பெற உதவுகிறது.

நீங்கள் ஒரு முறை பொருள் வாங்கி அதனை முறையாகத் திரும்பச் செலுத்தும் போது உங்களைப் பெருமைக்குரிய வாடிக்கையாளர்களாகக் கருதி, அடுத்தடுத்த கடன்களில் உங்களது தேவைக்கும் மீறிய பொருட்களையும் வாங்கத் தூண்டுகின்றனர். காத்திருக்கும் நேரத்தில் பொழுதைப் போக்க நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் உலவித் திரும்பும்போதும், உங்களது கிரெடிட் கார்டில் சில ஆயிரங்கள் காணாமல் போயிருக்கும். எது சுலபத் தவணையாக இருந்ததோ அது பின்னாளில் சுமக்க முடியாத சுமையாக மாறிக் கழுத்தை நெரிக்கிறது.

இப்படி வாங்கிய கடன்களை அடைக்க இவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்துக்குள்  தள்ளப்படுகின்றனர். இது ஒருவிதமான மன அழுத்தத்தைத் தருகிறது. இந்த மன அழுத்தம் இவர்களை கிரியேட்டிவாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது; தூக்கம் பறிக்கிறது. குறைவாக சாப்பிடுவதும் இவர்களது உடல் நலத்தை பாதிப்படையச் செய்கிறது. கடனின் அளவு அதிகரிக்கும்போது அவர்களின் Problem solving மற்றும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. இதனால் மேலும் மேலும் தேவையற்ற நிதிச்சுமைகளுக்கும் இவர்கள் ஆளாகின்றனர்.

கடனில் இருந்து வெளியில் வர நினைப்பவர்கள் அடுத்தடுத்து கடனுக்குப் பொருள் வாங்குவதை நிறுத்த வேண்டும். எது தேவை, எது தேவையற்றது என செலவுகளைப் பிரித்துப் பட்டியலிட வேண்டும். அத்தியாவசியத் தேவைகள் தாண்டி ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம். அதிகக் கடன் வாங்குபவர்கள் எது முக்கியமானது என்று முடிவெடுக்கத் தெரியாமல் குழம்பிப் போயிருப்பார்கள். இவர்கள் குழப்பத்தில் இருந்து வெளியில் வர மனநல ஆலோசகரிடம் அறிவுரை பெறலாம். நிதி ஆலோசகர்களை அணுகியும் சிறந்த தீர்வினைத் தேடலாம்.

கடன் வாங்கினால் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வட்டியில்லாக் கடன் முறையில் செலுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். அதிகக் கடன் தரும் மன அழுத்தம் உடநலத்தைப் படிப்படியாக பாதிக்கிறது. மிகை ரத்த அழுத்தப் பிரச்னையாகத் துவங்கி மாரடைப்பு வரை கொண்டு செல்கிறது. முடிவெடுக்க முடியாமல் குழப்ப நிலைக்குத் தள்ளப்படுவதும் அவர்களது வேலையில், அன்றாட வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்குகிறது.

ஒரு சிலர் கடன் தொல்லையைத் தடுக்க முடியாத டென்சனில் மது மற்றும் புகைப்பழக்கத்துக்கும் ஆளாகின்றனர். இது அவர்களின் உடல் நலம், சமூக வாழ்க்கை முறையை பாதிக்கிறது. இவர்களைச் சார்ந்து வாழும் மனைவி, குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. துவக்கத்திலேயே கடனைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு முறை உங்களது கடன் அட்டையைப் பயன்படுத்தும் முன்னும் எதார்த்தமாக யோசித்துப் பாருங்கள் அது தேவைதானா?!’’ என்று கேள்வி எழுப்புகிறார் சினேகா.

‘கடன் ஒரு போதை வஸ்துவுக்குச் சமமானது’ என்கிறார் பிசினஸ் கன்சல்டன்ட் கிருஷ்ண வரதராஜன். ‘‘வாங்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், வட்டி குட்டி போட்டு பேரன் பேத்தி எடுத்து எல்லாம் சேர்ந்து நம் தோளில் ஏறிக் கொள்ளும்போதுதான் தெரியும். இவைகளின் தொல்லைகள் அதிகரிக்கும்போது வட்டி கட்டுவதற்காக இன்னொரு கடன் வாங்கத் தள்ளப்படுகிறார்கள். இத்தனை கடன்களும் சேர்த்து கட்ட வேண்டுமே என்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இன்னொரு புறம் சமூகத்தில் தனது கௌரவத்தை நிலைநிறுத்த போலியான தோற்றத்துக்காக கூடுதல் செலவுகளையும் செய்ய வேண்டியுள்ளது. இவை மறைமுகமாக சம்பந்தப்பட்ட நபரின் ரத்த அழுத்தம் கூட்டி, கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்து உள்ளுறுப்புக்களில் பலவிதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.

இதனால் வெளியிடங்களில் இனிக்க இனிக்கப் பேசும் கணவரோ/தந்தையோ வீட்டுக்கு வந்தால் தங்கள் குடும்பத்தினரிடம் எரிந்து விழுவார். தேவையற்ற அழுத்தம் கொடுப்பது, தன்னை சார்ந்திருப்பவர்களின் மனம் நோகும்படி நடந்து கொள்வது என மொத்தமாக மாறிப் போயிருப்பார். அவரை அணுகுவதே மற்றவர்களுக்கு சிக்கலாகிப் போகும்’’ என்றவரிடம், வாங்கிய கடனால் வரும் சிக்கலை எப்படி சமயோசிதமாக அணுகுவது என்று கேட்டோம்…

* வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும் வரை, நீங்கள் அதன் வேலையாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

* கடனை அடைக்கும் வரை எந்த ஒரு சிறு செலவையும் 10 முறை யோசித்து விட்டே செய்யுங்கள்.

* கடன் வாங்கிக் கடன் கொடுப்பது கானல் நீர் நம்பிக்கைதான். எனவே, புதிதாகக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

* கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் அதைப் பற்றி யோசித்து எவ்வளவு வட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என களத்தில் இறங்கும் நபரா நீங்கள்? கண்டிப்பாக கடன் புதைகுழியாக மாறி உங்களை விழுங்கிடும். முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

* கடனை நினைத்துப் பயப்படுங்கள். கடன்காரர்களை நினைத்து பயப்பட வேண்டாம். அவர்களுக்கு நீங்கள் வாடிக்கையாளர்.

* ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால்தான் கடன் கொடுத்தவர் முன்னிலையில் நீங்கள் கூனிக்குறுக வேண்டும். அடைக்க வேண்டும்  என்ற அக்கரை இருக்கும் பட்சத்தில் உங்களது நேர்மையின் கம்பீரத்துடன் கடன் கொடுத்தவரிடம் அக்கறையாகப் பேசுங்கள்.

* போனை எடுக்க பயப்படாதீர்கள். கடன்காரர்களுக்குப் பயந்து ஓடத் தேவையில்லை. ஓடுபவர்களைத்தான் துரத்துவார்கள். நின்று சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

* கடன் கொடுத்தவர்கள் நிலையில் இருந்து யோசித்தால் கட்டுவதற்கான வழி புலப்படும்.

* உங்களது கடனுக்காக வீட்டில் உள்ளவர்களை வைத்துப் பேச வைக்காதீர்கள். அதுவும் துன்பத்திலேயே முடியும். வீட்டில் உள்ள நேரமும் நிம்மதியற்றதாக மாறும்.

* கடன் தந்தவர்கள் உங்களது வீட்டைத் தேடி வருவதற்கு முன், அவர்கள் வீட்டுக்கு நீங்கள் சென்று விடுங்கள். நீங்கள் ஓடி ஒளிகிற ஆள் இல்லை என்பதைப் புரிய வையுங்கள்.

* அவர்கள் வசூலுக்கு வரலாமா என்று கேட்பதற்கு முன்னர் நீங்கள் போன் செய்து பதில் சொல்லுங்கள்.

* கடன் வாங்கியவர்களிடம் நட்பாகவும், உண்மையாகவும் இருங்கள். தவணைத் தொகையைக் குறைக்க முடியுமா என்று பாருங்கள். வட்டிக்கு வாங்கிய கடன்களை வட்டியில்லாக் கடன்களாக மாற்றிக் கொடுங்கள்.

* பலவிதக் கடன்கள் வாங்கி மனம் நோவதை விட அடிப்படைத் தேவைக்கான கடன்களோடு நிறுத்திக் கொள்ளலாம்.

* அடுத்தடுத்து வாங்கும் கடன்களால் குடும்ப உறவுகளுக்கும் சிக்கல்கள் துவங்கும்.

* கடன் வட்டி என சுமைகள் அதிகரிக்கும். வட்டியைக் குறைத்து அல்லது தவிர்த்து கடன்களை அடைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடியுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதய சிகிச்சை அரங்கம்!!(மருத்துவம்)
Next post பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது!!(அவ்வப்போது கிளாமர்)