கிறிஸ்துமஸ் டிரீ அலங்கார குக்கீஸ்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 7 Second

ஃபரா, ஃபாலியா, ஃபரிசா ஃபாஹிம்ஆகிய மூவரும் சென்னையை சேர் ந்த சகோதரிகள். இவர்கள் கிறிஸ்துமஸ் அன்று கேக்குடன் செய்யப்படும் குக்கீஸ்களை அலங்காரப் பொருட்களாக உருவாக்கி அதனை சமூகவலைத்தளம் மூலம் பிரபலபடுத்தி வருகின்றனர். லாக்டவுன் நேரத்தில் ஒரு ஜூலை மாதத்தில் ஆரம்பமான தொழில்தான் இதுவும். குக்கீஸ் பின்கட்டுகளை ருசியாக உருவாக்குவது ஒரு கலை. ருசியுடன் கலையையும் சேர்ந்து அலங்கார பிஸ்கட்டுகளை இந்த சகோதரிகள் தயாரிக்கின்றனர்.

சகோதரிகள் மூவரும் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவர்கள். இதில் மூத்தவர் ஃபரா, இரண்டு குழந்தைகளுக்கு தாய். டெக்ஸ்டைல் டிசைனிங் படித்துள்ளார். இரண்டாவது ஃபாலியா, இவர் கிளினிக்கல் நியூட்ரிஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடைக்குட்டி ஃபரிசா, 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.ஃபாலியாவிற்கு சிறுவயதிலிருந்து பேக்கிங் செய்யப் பிடிக்குமாம். “எங்களுடையது கூட்டுக் குடும்பம். அப்பா, ஜவுளி விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாங்கள் மூவருமே சின்ன குழந்தைகளாக இருக்கும் போதே வீட்டில் கேக் மற்றும் குக்கீஸ் வெரைட்டிகளை பெரியவர்களுடன் சேர்ந்து செய்வோம். எப்படி சில குடும்பங்கள் பொழுதுபோக்கிற்காக சினிமா, பீச் எனப் போவார்களோ எங்களுக்கு ஒன்றாக சேர்ந்து பேக்கிங் செய்வது ரொம்ப பிடிக்கும். அது எங்களுடைய குழந்தைப் பருவத்தின் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் என்றே சொல்லலாம். எங்கள் மூவருக்குமே படிப்பிற்கு நடுவே பேக்கிங்தான் நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அடிப்படை பேக்கின் முறையினை தெரிந்து கொண்டு அதன் பிறகு எங்களின் க்ரியேட்டிவிட்டிக்கு ஏற்ப குக்கீஸ்களை தயாரித்து பார்ப்போம். சாப்பிட்டு ருசியாக இருந்தால் அதை அடுத்து தொடர்ந்து செய்வோம்” என்ற சகோதரி ஃபாலியா, அக்காவின் திருமணத்திற்கு பிறகு சில காலம் குக்கீஸ் மற்றும் கேக் வகைகளை மூவரும் பேக் செய்யவில்லையாம்.

‘‘அக்காவிற்கு கல்யாணம் எங்களின் படிப்பு என்பதால் நாங்க அதில் பிசியாக இருந்திட்டோம். குக்கீஸ் செய்ய நேரமில்லை. அக்காவிற்கு குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு குழந்தைக்காக ஃபரா அக்கா செய்ய ஆரம்பித்தார். அக்கா செய்யும் போது எங்களுக்கும் கொடுப்பார். குக்கீஸ் பிஸ்கட்டுகளை சாப்பிடுவதை விட, அதை ஒன்றாக சேர்ந்து செய்யும் போது ஏற்படும் சந்ேதாஷத்திற்கு அளவில்லை. அதனால் அக்கா செய்யும் போது நாங்களும் உடன் சேர்ந்து செய்ய ஆரம்பித்தோம். வீட்டில் இருப்பவர்களும் பாராட்ட, கொரோனா லாக்டவுன் நேரத்தில் எல்லாரும் வீட்டில் இருக்க குக்கீஸ் செய்து ஆன்லைனில் விற்கலாம் என்ற எண்ணம் தோன்றியது’’ என்ற ஃபரிசா அவர்களுக்கு மிகவும் பிடித்த பண்டிகையான ஈத் திருநாளன்று ‘பேட்டர் ஸ்டோரீஸ்’ (@Batter.stories) என்ற பெயரில் குக்கீஸ் தொழிலை இன்ஸ்டாவில் ஆரம்பித்துள்ளனர்.

“சமூக வலைத்தளங்களில் பல பேர் கேக் மற்றும் குக்கீஸ் வெரைட்டிகளை விற்கின்றனர். அவர்களைவிட எப்படி தனித்துவமாக தெரிவது என்று யோசித்தோம். ஏன் தீம் குக்கீஸ் செய்யக்கூடாது என முடிவு செய்தோம்” என்கிறார் ஃபரா. அதன்படி கடந்த ஆண்டு இவர்கள் உருவாக்கிய ஈத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உட்பட பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்ட தீம் குக்கீஸ் மிகவும் பிரபலமாகி வருகின்றன.குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இவர்கள் உருவாக்கியிருக்கும் கிறிஸ்துமஸ் அலங்கார குக்கீஸ் பிஸ்கட்டுகளை அப்படியே கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்கார ஆபரணங்களாக தொங்கவிட்டு பின்னர் அதை அப்படியே சாப்பிட முடியும். இந்த கிறிஸ்துமஸ் குக்கீஸ் பெட்டியில் ஸ்னோமேன், கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கேண்டி, கிறிஸ்துமஸ் சாக்ஸ் என பல அலங்காரப் பொருட்கள் அடங்கியுள்ளன. இதை வாடிக்கையாளர்களின் விருப்பமான வடிவங்களில், டிசைன்களில், நிறங்களில் இவர்கள் தயாரித்து கொடுக்கின்றனர்.

‘‘இந்த குக்கிகளை தயாரிக்கக் குறைந்து 40 மணிநேரம் தேவை” என்கிறார் கடைக்குட்டியான ஃபரிசா. “குக்கீசை பல வடிவங்களில் தயாரித்து பின் அதன் மீது அழகான டிசைன்களில் ஐசிங் செய்ய வேண்டும். இந்த ஐசிங்கை பல லேயர்களில் செய்வோம். அந்த ஒவ்வொரு லேயரும் காய்ந்த பின் தான் அதன் மீது மீண்டும் ஐசிங் செய்ய முடியும். ஐசிங் செய்வது மெஹந்தி இடுவதைப் போலதான். நிறைய பொறுமை தேவை.

இந்த ஐசிங்காக நாங்கள் உருவாக்கும் வண்ணங்களை தயாரிக்கவே பல மணி நேரம் ஆகும். எங்களுடைய குக்கீஸ் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சென்னை பெங்களூர் உட்பட வெளிநாட்டிற்கு பயணிப்பவர்களும் எங்களுடைய குக்கீசை வாங்கி செல்கின்றனர்” என்கிறார். பேட்டர் ஸ்டோரீஸ் ஆன்லைன் விற்பனையைத் தாண்டி, சென்னை தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையிலும் தங்கள் குக்கீஸை விற்பனை செய்கின்றனர். அனைத்து கொண்டாட்டங்களுக்கும், பரிசுகளுக்கும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப குக்கீஸை வடிவமைத்துக் கொடுக்கின்றனர்.

மினி சாக்கோசங்க்ஸ் குக்கீஸ் (Mini Chocochunks Cookies)

தேவையான பொருட்கள்:

70 கிராம் – உப்பு சேர்க்காத வெண்ணெய் (அறை வெப்பநிலை)
140 கிராம் – மைதா மாவு (Flour)
2 கிராம் – பேக்கிங் பவுடர்
50 கிராம் – டார்க் சாக்லேட்
1 – முட்டை
75 கிராம் – நாட்டு சர்க்கரை (brown sugar)
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு சிறிய பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து க்ரீம் பதத்திற்கு மீண்டும் நன்றாக பீட்டர் கொண்டு கலக்கவும். இந்த வெண்ணெய் சர்க்கரை கலவையில், ஒரு முட்டையையும் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது அதில் டார்க் சாக்லேட் சேர்த்து லேசாக மீண்டும் கலக்கவும்.

கடைசியாக மாவு, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து அந்த கலவையை நன்றாக கிளரவும். பிசைந்த மாவை ஃப்ரிட்ஜுக்குள் ஒரு 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும். இந்த நேரத்தில், அவனை (oven) 200-250 டிகிரி செல்சியஸ் வரை முன்கூட்டியே சூடேற்றிக்கொள்ளவும் (pre heat).

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, வெளியே எடுத்த மாவை, ஒரு பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் பேப்பர் விரித்து அதன் மேல் வெண்ணெய் அல்லது நெய் தடவி, குக்கீஸ் மாவினை சிறிய பந்துகளாக உருட்டி லேசாக அழுத்திக்கொள்ளலாம். குக்கீஸ் கலவைக் கொண்ட பேக்கிங் ட்ரேயை அவனில் வைத்த, 7-10 நிமிடங்களில் பேக் செய்யலாம். குக்கீஸ் ஆறியவுடன், சாப்பிட தயாராகிவிடும். உங்கள் ருசிக்கு ஏற்ற விதத்தில் சர்க்கரை மற்றும் சாக்லேட் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். குக்கீஸ் கட்டர்களில் பல வடிவங்கள் உள்ளன. அதன் மூலம் விரும்பிய வடிவத்தில் குக்கீஸினை வடிவைமத்து பேக் செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!(மகளிர் பக்கம்)
Next post இதய சிகிச்சை அரங்கம்!!(மருத்துவம்)