பலாப்பழ பாஸ்தா… கேக்… சாக்லெட்!(மகளிர் பக்கம்)
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் பெரும்பாலும் சக்க பாயசம் அல்லது சக்கையில் கொண்டு வறுவல் போன்றவை தான் நாம் செய்வது வழக்கம். ஆனால் இந்த பலாப்பழங்களிலும் பாஸ்தா, சாக்லெட், சேமியா, கேக் என பல வகையான உணவுகளை செய்யலாம் என்கிறார் கேரளாவைச் சேர்ந்த ராஜ. பலாப்பழம் கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் மரம் வைத்து அதில் வளர்ப்பது வழக்கம். வெளித் தோற்றம் முட்களாக இருந்தாலும், உள்ளே இனிப்பாக இருக்கும் அதன் சுவைக்கு ஈடு இணைக் கிடையாது. அப்படிப்பட்ட சுவையான பழத்தில் இருந்து பல வகையான உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் இவர்.
‘‘பலாப்பழத்தின் சுளைகள் மட்டுமில்லை அதன் மேல் உள்ள முற்கள் வரை அனைத்தையும் பலவித உணவுப்பொருட்களாக பயன்படுத்த முடியும். இதிலிருந்து 400க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை உருவாக்க முடியும். அதை ‘ஃப்ரூட் என் ரூட்’ (Fruit N Root ) என்ற பெயரில் சந்தைப்படுத்தி வருகிறேன். நான் பிறந்து வளர்ந்தது கேரளா என்றாலும், திருமணமாகி என் கணவரின் வேலைக் காரணமாக சில காலங்கள் மும்பையிலும் பின் கத்தாரிலும் வசித்து வந்தேன்.
ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையின் போது வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது அம்மா உலர் பலாப்பழங்களை, அதன் சுளை மற்றும் கொட்டையில் இருந்து தயாரான பொருட்களை பேக் செய்து கொடுப்பார். அதை ஆண்டு முழுவதும் வைத்து சாப்பிடுவேன். அப்போது எல்லாம் தெரியாது இந்த உணவுப் பொருட்கள்தான் எனக்கு ஒரு தொழிலாக அமையும்ன்னு. சில ஆண்டுகள் கழித்து நானும் என் கணவர் எல்லாரும் குடும்பத்துடன் கேரளாவிற்கு திரும்பிட்டோம். என்னுடைய கிராமம் ஆலப்புழை. அங்கு பலாப்பழம்தான் ஃபேமஸ். இங்கு எல்லாருடைய வீட்டிலேயும் பலாப்பழம் மரம் இருக்கும். மேலும் இங்கிருந்து தான் பலாப்பழம் மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம் பலாப்பழங்கள் அதிகமாக விளைவதால் சில சமயம் பழங்களும் வீணாகிப் போகும்.
கஷ்டப்பட்டு விளைவித்த பழங்கள் வீணாவதைப் பார்க்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, பலாப்பழம் பாயசம் மட்டுமின்றி அதில் பல புதுமையான உணவுகளையும் தயாரிக்கலாம் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அதில் என்னென்ன செய்யலாம்ன்னு ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். நேந்திரப் பழத்தினை காயவைத்து பொடியாக்கி அதை குழந்தைகளுக்கு கஞ்சியாக தயாரித்து கொடுப்பார்கள். அதேப்போல் பலாப்பழத்திலும் செய்ய முடியுமான்னு யோசித்தேன். முதலில் பலாப்பழத்தை உலர வைத்து பொருட்கள் தயாரிப்பதற்கான உணவு உரிமம் பெற்றேன். அதன் பிறகு அதைக் கொண்டு என்ன செய்யலாம்ன்னு யோசித்தேன்.
இன்றைய தலைமுறையினர் பீட்சா, பாஸ்தா, பர்கர் தான் அதிகமாக விரும்புகிறார்கள். இவை அனைத்தும் மைதா மாவில் தயாரிப்பதால், அதை ஆரோக்கியமாக மாற்ற நினைத்தேன். அதன் விளைவு தான் பலாப்பழ பாஸ்தா” என்கிறார் ராஜ. ‘‘முதலில் பலாப்பழத்தினை எவ்வாறு உலர வைத்து அதை மாவாக திரிக்க வேண்டும் என்று கயம்குளத்தில் உள்ள மையத்தில் பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு அதில் என்னுடைய சமையல் திறனைப் புகுத்தி, உலர வைத்து மாவாக்கிய பலாப்பழத்தில் சூப், சப்பாத்தி, போண்டா, சாக்லெட், பர்கர். லட்டு போன்றவற்றை தயார் செய்ய ஆரம்பித்தேன். பலாப்பழத்தில் பாஸ்தா செய்யலாம்ன்னு முயற்சி செய்தேன்.
இதற்காக பாஸ்தா இயந்திரம் தேடிய போது எனக்கு அந்த இயந்திரம் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் தான் திருவனந்தபுரத்தில் உள்ள சி.டி.சி.ஆர்.ஐ ஆய்வு நிறுவனம் மரவள்ளிக்கிழங்கில் இருந்து பாஸ்தா தயாரித்தது பற்றி கேள்விப்பட்டேன். உடனே அங்கு பயிற்சியில் இணைந்தேன். பயிற்சி பெற்றது மட்டுமில்லாமல் அங்கு தொழில் நுட்பத்தின் உரிமை பெற்றேன். பிறகு கிராமத்தில் ஒரு ஆலை ஒன்றை அமைத்தேன். அந்த ஆலையில் முக்கிய வேலையே உலர் பழத்தில் இருந்து மாவு தயாரிப்பது தான். இதில் அரிசி மாவு மட்டுமில்லாமல் நேந்திர பழ மாவு, பலாப்பழ மாவும் தயாரிக்கிறோம். பலாப்பழம் பொறுத்தவரை அதன் சுளைதான் நாம் சாப்பிட்டு பழகி இருப்போம்.
ஆனால் அதன் தோலில் உள்ள முட்களில் இருந்து மருத்துவ குணம் கொண்ட தக்ஷாமினி தூள், பிசினில் இருந்து கன்மாஷி, கொட்டையில் இருந்து பாயசம், கேக், சாக்லெட் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பொருட்களை பலாப்பழத்தில் இருந்து தயாரிக்கலாம். மேலும் பலாப்பழத்தில் சமைக்கப்பட்ட உணவுகளை பார்சலாக வழங்கி வருகிறேன். அவித்த வாழை இலையில், சாதம், பலா அவியல், உலர் கறி ஆகியவை வைத்து தருகிறேன். விரும்பியவர்களுக்கு மீனும் உண்டு” என்றவர் இவர் தயாரிக்கும் பொருட்களில் செயற்கை பதப்படுத்தல் பொருட்களை சேர்ப்பதில்லையாம்.
பலாப்பழத்தில் இருந்து உருவான பல மாவு வகைகளை தற்போது உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து வருகிறார். மேலும் mydukaan.com மூலம் ஆன்லைனிலும் நுழைந்துள்ளார். என்னதான் ஆன்லைன் என்ற மோகம் இருந்தாலும், நாங்க உள்ளூர் சந்தையில் தான் கவனம் செலுத்தி வருகிறோம். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பலாப்பழ பருவம். அதன் பிறகு, பழங்களை அறுவடை செய்து அதனை உணவுப் பொருட்களாக மாற்ற ஆரம்பித்துவிடுவோம். பலாப்பழத்தை தொடர்ந்து வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு விளையும், என்பதால் ஆண்டு முழுதும் நாங்க இவற்றில் உணவுப் பொருட்களை தயாரிக்கும் தீவிர வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவோம்.
பொடி மட்டுமில்லாமல் மிக்சர், முறுக்கு, பக்கோடா போன்றவற்றை கிழங்கில் இருந்து தயாரிக்கிறோம். பலாப்பழ தயாரிப்பிற்காக மாநில அரசு விருது கிடைத்தது. அதன் மூலமும் ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. மேலும் எங்களின் முக்கிய நோக்கம் இவற்றை ஏற்றுமதி செய்வதுதான். விரைவில் சர்வதேச அளவில் இவற்றை கொண்டு செல்வேன்’’ என்றவர் அதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.