தாகம் தணிக்கும் தர்பூசணி!! (மருத்துவம்)
உடலில் இயற்கையாக ஏற்படுகிற வேகங்களை அதாவது மலம், சிறுநீர், பசி, தாகம், தும்மல் போன்றவைகளை எக்காரணத்தைக் கொண்டும் தடுத்து நிறுத்தக் கூடாது. ஏனெனில் இவை உடல் செயல் இயக்கங்களால் ஏற்படுகிறவை. ஆதலால் தடுத்து நிறுத்தாமல் உடலுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாறாக தாகத்தை அடக்கினால் உடல் சோர்வு, மந்த நிலை, வாயில் வறட்சி, காது கேளாமை, இதயத்தில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதற்கு போதுமான தண்ணீர் பருகுவதே சிறந்த மருந்து. எனவே,தாகம் எடுத்தவுடன் உடனே தண்ணீர் பருக வேண்டும்.
உடலின் இயல்பான இந்த உந்துதலானது கோடையில் அதிகமாகும். இந்த இயல்பான உடலின் தேவையானது மூளையின் செயல்பாட்டால் ‘உடலில் தண்ணீர் குறைந்து விட்டது, தண்ணீர் பருக வேண்டும்’ என்ற எண்ணத்தை தூண்டுகிறது. அதிக வியர்வையின் காரணமாக கோடைக் காலத்தில் நீர்ச்சத்தை இழக்கிறோம். அத்துடன் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் வியர்வையின் மூலமாக வெளியேறுகிறது. இதனால் வெளியேறிய நீர்ச்சத்தை சமநிலைப்படுத்துவதற்காக வழக்கத்தைவிட அதிகமாக தாகம் ஏற்படுகிறது.
மேலும் கோடை பருவத்தில் உடலின் சூடு அதிகமாகிறது.அந்த சூட்டில் இருந்து உடலைப் பாதுகாக்க வியர்வைச் சுரப்பியின் வழியாகவும் நீரை வெளியேற்றி சூட்டில் இருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது. இதனாலும் உடலிலுள்ள நீர் குறைந்தவுடன் தண்ணீர் பருக விருப்பம் ஏற்படுகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் இந்த தண்ணீர் தாகத்தைத் தணிக்கும் அருமருந்து தர்பூசணி என்றால் அது மிகையில்லை.
தர்ப்பூசணிப் பழத்தில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக தண்ணீர், மீதமுள்ள பகுதியில் கோடைக்காலத்தில் அதிக வியர்வையின் காரணமாக உடல் இழக்கும் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் தர்ப்பூசணிப் பொருட்களின் காரணமாக அதிக ரத்த அழுத்தம் குறையும். தர்பூசணி தண்ணீர் தாகத்தை தடுப்பதோடு மட்டுமில்லாமல் சிறுநீரையும் நன்றாக வெளியேறச் செய்கிறது. உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் வெப்பத்தை சமன்ப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள மாசுகளை வெளியேற்றுகிறது.
இதேபோல் கோடை காலத்தில் மக்கள் துன்புறும் மற்றொரு விஷயம் சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல்.இதற்குக் காரணம் வியர்வை மூலமாக தண்ணீர் அதிகளவில் வெளியாகி, சிறுநீர் உற்பத்தி குறைந்து விடுவதால் குறைந்த அளவு சிறுநீர் மிகவும் சிரமப்பட்டு வெளியாகிறது. கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தாகம், சிறுநீர் போகும்போது எரிச்சல் இந்த தொந்தரவுகளுக்கு இயற்கையால் தரப்பட்ட வரப்பிரசாதம் தர்ப்பூசணிப்பழம்.
தர்பூசணிச்சாறுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து (ஜீரணசக்தி, சளித் தொந்தரவு போன்றவைகளை அனுசரித்து) பாலும் கலந்து பருக, உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். தர்பூசணிச் சாறுடன் தேவையான அளவு சர்க்கரை, தேன், ரோஜாப்பூவிலிருந்து எடுத்த பன்னீர் போன்றவைகளைக் கலந்து உபயோகித்தால், கோடையில் ஏற்படும் உடல் எரிச்சல் குணமாகும். தர்பூசணி சாற்றுடன் சீரகம் கலந்து கொதித்து ஆறிய தண்ணீரையும் கலந்து தினமும் ஒரு வேளை பருகினால்,கோடைக்காலத்தில் ஏற்படும் நீர்ச் சுருக்கு சிறுநீர் தடங்கல் குணமாகும். தர்ப்பூசணிப் பழத்தைச் சாப்பிட்டு வர தண்ணீர்த் தாகம் தணிவதோடு மட்டுமில்லாமல் பசியும் அடங்கும். குடல் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் தணியும் தொடர்ந்து பயன்படுத்தி வரமலச்சிக்கல் ஏற்படாது. உடல் எடையும்கட்டுக்குள் இருக்கும்.
சூரியக்கதிர்களின் தாக்கத்தால் சருமத்தின்வனப்பு குறைந்துவிடும். இதற்கு மிகச் சிறந்தது தர்பூசணிச் சாறு. இந்த சாற்றைக் கொண்டு முகம் அலம்பி வரலாம்.பழத்தைச் சாப்பிடுவதின் மூலமாகவும் தோலின் வனப்பு கெடாமல் பாதுகாக்கலாம். தர்பூசணி பழம் அல்லது சாற்றைப் பருகும் பானமாக பயன்படுத்தலாம்.ஆனால், தர்ப்பூசணி பழ விதை மருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தர்பூசணி விதையை பாலில் அரைத்து சாப்பிட தலைசுற்றல், மயக்கம் குறையும். விதையை நிழலில் உலர்த்தி பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட சிறுநீர் தடங்கல், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்றவை நீங்கும்.
‘எனக்கு சுகர் இருக்கிறது. தர்பூசணிப் பழம் சாப்பிடலாமா’ என்று நீரிழிவு நோயாளிகளுக்கு கேட்கத் தோன்றும். பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள், பருவநிலை மாற்றத்தினால் உடலில் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து காப்பதற்கே. எனவே, சிறிதளவு உண்பதின் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகூடாது.சிறிதளவு சாப்பிடலாம்.
தர்பூசணி பயன்படுத்தும் போது
*சாலைகளில் திறந்தவெளியில் பழத்தை வெட்டி வைத்திருக்கும் பழங்களைவாங்கி சாப்பிடக்கூடாது.
*அஜீரணம், சளி, ஆஸ்துமா உடையவர்கள் தர்ப்பூசணிப் பழத்தை தவிர்த்து கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மாற்று வழியைத் தேட வேண்டும்.
*அதிகளவு அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களும் தர்ப்பூசணிப் பழத்தை தவிர்க்க வேண்டும்.