யோகர்ட்டில் என்ன சிறப்பு?!(மருத்துவம்)
இந்தியாவில் தயிரைப் போல மேற்கத்திய நாடுகளில் யோகர்ட்(Yogurt) என்பது பெரிதும் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளாக உள்ளது. யோகர்ட்டுக்கும் தயிருக்கும் என்ன வித்தியாசம்? என்ன ஒற்றுமை?
* யோகர்ட் என்பது ஒரு புளிப்பாக்கப்பட்ட பால் ஆகும். பதப்படுத்தப்பட்ட பாலில் உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து, பல மணி நேரம் வைக்கப்படுவதன் மூலம் யோகர்ட் தயாராகிறது. இந்த பாக்டீரியாக்கள் பாலிலுள்ள சர்க்கரை என்ற லாக்டோஸை, லாக்டிக் அமிலமாக மாற்றி பாலை திரவப் பொருளாக மாற்றுகிறது. இதனால் இதற்கு ஒரு வித்தியாசமான ருசி கிடைக்கிறது.
* லாக்டோபேசிலஸ் பல்காரிகஸ்(Lacotobacillus bulgaricus) மற்றும் ஸ்ட்ரெப்டோக்காக்கஸ் தெர்மோபை லஸ்(Streptococcus Thermophilus) என்ற இரண்டு பாக்டீரியாக்களால் பதப்படுத்தப்படுவதுதான் யோகர்ட். இது ப்ரோபயாட்டிக்(Probiotic) ஆகும். இதில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளது. தயிரோடு ஒப்பிடுகையில், யோகர்ட்டில் புரதச்சத்து அதிகம். கார்போஹைட்ரேட் குறைவு. எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள், பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்கள், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்களுக்கு யோகர்ட் நல்ல
சாய்ஸாக இருக்கும்.
* பாலில் சிறிது மோர் ஊற்றி வைப்பதன் மூலம், அது இயற்கையாகப் புளித்துப் போய் தயிராகிறது. அதனால் வீடுகளிலேயே எளிதாகத் தயிரைத் தயார் செய்யலாம். ஆனால், யோகர்ட் தயாரிப்பதற்கு உயிருள்ள பாக்டீரியாக்கள் தேவை. எனவே, அதனை உணவு தொழிற்சாலைகளில்தான் தயார் செய்ய முடியும். கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்களை உள்ளடக்கிய தயிரானது, இந்திய உணவுமுறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
* யோகர்ட்டில் புரதச்சத்து அதிகமுள்ளதால் உடல் பருமனைக் குறைத்து தசைகளை சீர்படுத்துகிறது. கால்சியம் அதிகமுள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குடல்நாள நுண்ணுயிரிகள்(Gut Microflora) இருப்பதால் குடலிலுள்ள நோய்க் கிருமிகளைக் கொன்று குடல்நோய் தடுப்பாற்றலை மேம்படுத்துகிறது.
* யோகர்ட்டில் உள்ள கொழுப்பில் இணைந்த லினோலிக் அமிலம் இருப்பதால் அது நோய் எதிர்ப்பைத் தூண்டவும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கவும் உதவுகிறது. லாக்டோ இன்டாலரசன்ஸ் உடையவர்கள் மற்றும் பசும்பால் ஒவ்வாமை உடையவர்கள் யோகர்ட்டைப் பருகலாம். இது வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை குறைக்கிறது.
யோகர்ட்டை எப்படி பயன்படுத்தலாம்?
யோகர்ட்டை உடற்பயிற்சிக்குப்பின் பருகும் பானமாக உட்கொள்ளலாம். ஜங்க் உணவுக்குப் பதிலாக ஆரோக்கிய சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். பழங்களைச் சேர்த்து உட்கொண்டால் அது சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த ஆகாரமாகும். யோகர்ட்டைக் கொண்டு பழ ஸ்மூத்திகள் (Fruit Smoothies), சாண்ட்விச் நடுவில் ஃபில்லிங்காகவும் பயன்படுத்தலாம்.