எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை… இப்ப நான் இருக்கேன் அவர்களுக்கு!(மகளிர் பக்கம்)
சாரி டிரேபிஸ்ட் ஜெசி
ஜீன்ஸ்… ஸ்கர்ட்… லெக்கின்ஸ்ன்னு மார்டன் உடைகள் அணிந்தாலும் தழைய தழைய புடவை கட்டும் அழகே தனிதான். இந்த காலத்து மார்டன் பெண்களுக்கு புடவை கட்டுவது பெரிய வேலையாக உள்ளது. ஐந்து மீட்டர் நீளமான புடவைகளை கட்டுவதே ஒரு கலைதான். இந்த கலையினை மட்டும் பிரத்யேகமாக செய்து வருகிறார் சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த ஜெசி. சென்னையின் முதல் ‘சாரி டிரேபிஸ்ட்’(saree drapist) என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
‘‘கல்லூரி பட்டப்படிப்பு முடிச்சிட்டு, வேலைக்காக காத்திருந்தேன். என் அக்கா மேக்கப் ஆர்டிஸ்ட். அவங்க தான் என்னை மோட்டிவேட் செய்து, என்னையும் இந்த துறைக்குள் வரச்சொன்னாங்க. எனக்கு அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டும்னு ஆசை. வீட்டில் முதலில் என்னை கன்வின்ஸ் செய்தாலும், வேலைக்கு போ, பிடிச்சிருந்தா தொடர்ந்து செய் இல்லைன்னா இந்த துறையை தேர்வு செய்ன்னு சொன்னாங்க. அந்த சமயத்தில் எனக்கும் போலீஸ் துறையின் கால்சென்டர் அதாவது, கன்ட்ரோல் அறையில் வேலை. மக்கள் மட்டுமில்லாமல் போலீசாரும் பிரச்னையோ அல்லது விபத்து குறித்து 100 என்ற எண்ணிற்கு போன் செய்து சொல்வாங்க. அதற்கு ஏற்ப நாங்க தகவல்களை பரிமாறணும்.
எங்க வீட்டில் அந்த வேலை வேண்டவே வேண்டாம்ன்னு சொல்ல… நான் பிடிவாதமா சேர்ந்தேன். ஆனால் சில காலம் கூட என்னால் தாக்குப் பிடிக்க முடியல. காரணம் அங்கு எந்த அரசு விடுமுறையும் எடுக்க முடியாது. மூன்று ஷிப்ட் முறை மாறி மாறி வேலை பார்க்கணும். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாலும், குறிப்பிட்ட நாட்கள் எடுக்க முடியாது. அவர்கள் சொல்லும் நாட்களில் தான் எடுக்க முடியும். கடைசியில் என் அக்கா சொன்னது தான் நடந்தது.
அவங்க மேக்கப் ஆர்டிஸ்ட் என்பதால், என்னை புடவை கட்டுவது குறித்த பயிற்சி எடுக்க சொன்னாங்க. அதாவது saree drapist. புடவை கட்டுவது ஒரு வேலையான்னு கேட்கலாம். இப்பெல்லாம் கல்யாணம் முதல் வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும், புடவை மட்டுமே கட்டி விட சொல்லி கேட்கிறார்கள். எல்லாருக்கும் புடவை கட்டத் தெரிந்தாலும் அதை அழகாகவும், நேர்த்தியாகவும், கலையாமலும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புறாங்க. இப்போது என்னுடைய பிசினசும் அதுதான்’’ என்று சொன்ன ஜெசிக்கு ஆரம்பத்தில் புடவைக் கட்ட தெரியாதாம்.
‘‘எனக்கு ஓரளவுக்கு தான் புடவைக் கட்ட தெரியும். ஆனால் மணப்பெண்களுக்கான புடவை எல்லாம் எனக்கு ஆரம்பத்தில் கட்ட தெரியாது. இது தான் என்னுடைய துறை என்று முடிவான பிறகு… நான் வீட்டிலேயே எனக்கு புடவைக் கட்டி பழகினேன். பல யுடியூப் வீடியோக்கள் மற்றும் அம்மா, அக்காவின் உதவியுடன் தான் நான் முதலில் எனக்கு நானே கற்றுக் கொண்டேன். என்னால் மற்றவர்களுக்கு கட்ட முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகு, அக்காவுடன் முதல் திருமண நிகழ்ச்சிக்கு மணப்பெண் முதல் அவங்க அம்மா மற்றும் உறவினர்களுக்கு புடவை கட்டிவிட்டேன். எல்லாருக்கும் பிடிச்சு போனது.
அன்று முதல் இன்று வரை அவங்க வீட்டு விசேஷத்திற்கு என்னை புடவைக் கட்டுவதற்காக மட்டுமே அழைப்பாங்க. இவங்களைப் போல் எனக்கு 15 கிளையன்ட்கள் இருக்காங்க. முதலில் தென்னிந்திய புடவைகள் மட்டுமே கட்டி வந்தேன். அதன் பிறகு ஐயர் மற்றும் ஐயங்கார் மடிசார் புடவைகள் கட்டுவது குறித்தும் தெரிந்து கொண்டேன். இரண்டுமே மடிசார் என்றாலும், அதை கட்டுவதற்கான விதம் வித்தியாசப்படும். ஐயர் மடிசார் புடவை 9, 11 மற்றும் 12 கஜத்தில் கட்டலாம்.
இதில் காலுக்கு பின் கொசுவம் போல் வரும். ஐயங்கார் புடவை 6, 9, 10 கஜத்தில் கட்டலாம். கொசுவம் வைக்காமல் அப்படியே சுற்றி கட்டணும். என்னுடைய வலைத்தளத்தில் இந்த புடவை பற்றி போஸ்ட் போட்டிருந்தேன். அதைப் பார்த்த நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் என்னை அழைத்து ஒரு விளம்பர படத்திற்காக மடிசார் கட்ட சொல்லிக் கேட்டாங்க. முதலில் அவங்க வீட்டில் டிரையல் செய்து பார்த்தோம். அவங்களுக்கு பிடிச்சதால், புடவைக் கடை விளம்பரத்திற்கு அவங்களுக்கு மடிசார் கட்டிவிட்டேன்.
அதன் பிறகு ஒரு நகைக் கடை விளம்பரத்திற்காக மீண்டும் அவங்களுக்கு புடவைக் கட்டி விட்டேன். அந்த இரண்டு விளம்பரங்களுக்கு பிறகு தான் சென்னையில் ஜெசின்னு டிரேப்பிஸ்ட் இருப்பது தெரிய வந்தது. எனக்கு முன் சரஸ்வதி அவர்கள், விளம்பர படங்களுக்கு மட்டுமே செய்து வந்தாங்க. நான் விளம்பரம் மட்டுமில்லாமல், திருமணம், வளைகாப்பு என எல்லா விழாக்களுக்கும் செய்து வந்தேன். இதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் 14 முதல் மறுநாள் 15ம் ேததி வரை 28 மாநிலம் மற்றும் 6 யூனியன் டெரிடரியின் உடைகளை புடவையில் டிரேப் செய்தேன். இது லைவ் நிகழ்ச்சி என்பதால் எனக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைச்சது. விளம்பர படங்களிலும் வாய்ப்பு கிடைச்சது’’ என்றவர் தன்னுடைய இரண்டு வருட அனுபவத்தை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும் என்பதால், சாரி டிரேப்பிங் குறித்த பயிற்சி எடுக்க ஆரம்பித்துள்ளார்.
‘‘எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கண்களால் பார்க்கும் போது எளிதாக தெரியும். அதையே செய்து பார்த்தால் தான் அதில் உள்ள நிறை குறைகள் தெரியும். புடவை கட்டுவதும் அப்படித்தான். என்னுடைய அம்மா ஐந்தே நிமிஷத்தில் புடவையை கட்டிடுவாங்க. எனக்கு 20 நிமிஷமாகும். அப்படி நான் இந்த துறைக்கு வந்த பிறகு தான், இதை மற்ற பெண்களுக்கும் ஒரு தொழிலாக ஏற்படுத்தி தரலாம்ன்னு எண்ணம் வந்தது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் என்னிடம் பயிற்சி எடுக்க வராங்க.
இந்த பயிற்சியினை செல்ஃப் மற்றும் புரொபஷனல்ன்னு இரண்டாக பிரித்தேன். செல்ஃப் என்பது புடவையே கட்டத்தெரியாத பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கானது. புரொபஷனல்… இதை தொழிலாக எடுக்க விரும்பும் பெண்களுக்கானது. இரண்டு நாள் பயிற்சியில் புடவையினை பிளீட் எடுப்பது முதல் பிரீபிளீட்டிங் செய்வது வரை மற்றும் மணப்பெண், கர்ப்பிணி, வயதானவர்கள் அனைவருக்கும் எப்படிக் கட்ட வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிக்கிறேன். சென்னையில் மாதம் ஒரு நாள் பயிற்சி இருக்கும். பெங்களூரிலும் எடுத்து வந்தேன். கோவிட்டால் டிராவல் செய்ய முடியவில்லை. அதனால் சென்னையில் மட்டும் பயிற்சியினை தொடர்கிறேன்.
நான் இந்த துறையை 2017ம் ஆண்டு தேர்வு செய்யும் போது சாரி டிரேப்பிங்கிற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் கிடையாது. மேக்கப் ஆர்டிஸ்ட் அவர்களே புடவையும் கட்டுவாங்க. இந்த காலத்து பெண்கள் உடம்போடு உடம்பாக புடவை ஒட்டி இருக்க வேண்டும்ன்னு விரும்புறாங்க. அதனால தான் பிளிட்களை ஐயர்ன் செய்து கட்ட ஆரம்பிச்சோம். இதன் அடுத்த கட்டம் தான் பிரீப்பிளீட். அதாவது ஏற்கனவே புடவையின் முந்தானை, நெஞ்சுப்பகுதி மற்றும் கொசுவத்தில் வைக்கப்படும் பிளிட்கள் ஐயர்ன் செய்து வைத்திடுவோம். அதை அப்படியே மணப்பெண்ணிற்கு கட்டிவிட வேண்டியது தான்.
ஒன்று வேலையும் சுலபம், இரண்டாவது டென்ஷன் இருக்காது, மூன்றாவது இரண்டே நிமிடத்தில் கட்டி முடித்திடலாம். இதனால் ஒரே நாட்களில் நான்கு நிகழ்ச்சிகள் கூட தொடர்ந்து செய்ய முடியும். ஆரம்பத்தில் விசேஷ நாட்களுக்கு முன் பெண்களை வரச்சொல்லி அவங்களின் அளவைக் கொண்டு பிரீப்பிளீட் செய்தேன். இப்போது அவர்களின் முழு அளவு புகைப்படம் இருந்தாலே போதும் பிரீப்பிளீட் செய்யலாம். பெரும்பாலும் பல பெண்கள் செய்யும் தவறு, பிரீப்பிளீட் செய்யப்பட்ட புடவையினை சாதாரண புடவைப்போல் கட்டுவது. சாதாரணமாக கட்டும் போது முதலில் புடவையின் நுனியினை பாவாடையில் சொருகிய பிறகு நடு கொசுவம் எடுப்போம். பிரீப்பிளீட் செய்யப்பட்ட புடவையில் ஏற்கனவே நடு கொசுவம் எடுக்கப்பட்டு இருப்பதால், முதலில் அதை வைத்த பிறகுதான் புடவையை கட்ட வேண்டும்.
அடுத்த தவறு உள்பாவாடை கட்டும் முறை. உள்பாவாடை கட்டும் போது பெரும்பாலும் லூசாகத்தான் கட்டுவாங்க. அப்படிக் கட்டினால் புடவை இடுப்பில் நிற்காது கீழே இறங்கிடும். ஒரு விரல் அளவு இடைவேளை இருக்குமாறு பாவாடையை கட்ட வேண்டும். பாவாடை வேண்டாம் என்று விரும்பினால் ஷேப்பர் அல்லது நாட்டெட் லெக்கின்ஸ் அணியலாம். பாவாடை கட்டும் போது அதன் முடிச்சு, உங்களின் தொப்புள் பகுதியில் இருக்க வேண்டும். பக்கவாட்டில் முடிச்சு போடும் போது, டிரான்ஸ்பெரன்ட் புடவைகளை கட்டினால் அந்த முடிச்சு வெளியே தெரிய வாய்ப்புள்ளது. நடுவில் கட்டும்போது, அந்த பகுதி நடுக்கொசுவம் சொருகும் போது மறைந்துவிடும்’’ என்றவர் இந்த துறைக்கு பொறுமை மற்றும் சிரித்த முகம் மிகவும் அவசியம் என்றார்.
‘‘எனக்கு சின்னதா ஏதாவது சொன்னா உடனே கோவம் வந்திடும். அம்மா கோவத்தை கட்டுப்படுத்து, யார் என்ன சொன்னாலும் சிரிச்சிட்டே வந்திடுன்னு சொல்வாங்க. டிரேப்பிங் மட்டுமில்லாமல் ஹேர்ஸ்டைலும் செய்கிறேன். அதற்கும் அக்கா தான் காரணம். முதலில் டம்மியில் ஸ்டைல் செய்ய கத்துக்க சொன்னாங்க. அப்படித்தான் கத்துக்கிட்டேன். கடந்த மூணு வருஷமா அக்கா மேக்கப் ஆர்டிஸ்டா போகும் இடமெல்லாம் நான் தான் சாரி டிரேப்பர் அண்ட் ஹேர்ஸ்டைலர்.
என்னுடைய இந்த இரண்டு துறை சார்ந்து அப்கிரேட் செய்யணும். விளம்பர படங்கள் செய்யணும். நிறைய பெண்களுக்கு சொல்லிக் கொடுத்து, அதன் மூலம் அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரணும். நான் இந்த துறைக்கு வந்த போது எனக்கு சொல்லித்தர யாருமில்லை. இப்ப நான் இருக்கேன் அவர்களுக்கு’’ என்ற ஜெசி 2021 ம் ஆண்டிற்கான சிறந்த ‘சாரி டிரேபிஸ்ட்’ விருதினை பெற்றுள்ளார்.
புடவை கட்டும் போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்
*உள்பாவாடை கட்டும் போது வலது அல்லது இடது பக்கம் முடிச்சு போடுவாங்க. அப்படி போட்ட பிறகு பாவாடை நாடாவில் சுறுக்கமாக இருக்கும் துணிகளை சரியாக்கி, முதுகு தண்டுவடப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்தப் பகுதி பெண்களுக்கு வளைந்து இருப்பதால், புடவை கட்டும் போது நேர்த்தியாக இருக்கும். இல்லை என்றால் குண்டான ேதாற்றத்தை
எடுத்துக்காட்டும்.
*முந்தானைக்காக எடுக்கப்படும் பிளீட்ஸ் தான் உடம்பின் மேல் பகுதிக்கும் வரும். அதனால் முந்தானை பிளீட்ஸ் எடுக்கும் போது மார்பக பகுதியினை போக்கஸ் செய்து எடுக்கணும். மணப்பெண்களுக்கு சின்ன சின்ன பிளீட்ஸ் வைக்கலாம். அதுவே கர்ப்பிணிகளுக்கு கொஞ்சம் பிளீட்ஸ் பெரியதாக எடுக்க வேண்டும்.
*பிரீப்பிளீட்டில் நடுக் கொசுவம் எடுக்கும் போது, அவர்களின் மொத்த உடலமைப்பை பார்த்து எடுக்கக்கூடாது. இடுப்புக்கு கீழ் உள்ள பகுதியின் அளவைக் கொண்டு தான் எடுக்கணும்.
*புடவையின் நுனியில் முடிச்சு போட்டு கட்டினால் புடவை கட்டும் நேராக இல்லாமல் ஒரு பக்கம் ஏத்தம் இறக்கமாக இருக்கும்.
*புடவையினை பாவாடைக்குள் சொறுகும் போது சுறுக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உங்களை குண்டாக காண்பிக்கும்.
*புடவையின் இடது பக்கம் பட்டி எடுத்து அதை உள்ளே இழுத்து பின் குத்துவது வழக்கம். அவ்வாறு குத்தும் போது, புடவை துணியில் குத்தாமல், பாவாடையில் குத்த வேண்டும். அப்போதுதான் நகராமல் ஸ்டிப்பாக இருக்கும்.
*புடவை கட்டி முடித்த பிறகு மார்பக பகுதியில் உள்ள பிளீட்ஸ் தளர்வாக இருப்பது போல் தோன்றினால், தோள்பட்டையில் உள்ள முந்தானையை நன்றாக இழுத்து பின் குத்தலாம். புடவை முந்தானை நகராமல் இருக்கும்.
*காட்டன் பாவாடைகள் தான் பெஸ்ட் சாய்ஸ். சாட்டின் துணி பாவாடையை தவிர்ப்பது நல்லது. காரணம் இதில் புடவை நேர்த்தியாக நிற்காது.
*புடவையில் இடது பக்கம் லேயர் வைக்கும் போது, அதனையும் உள்ளே நன்றாக இழுத்து பாவாடையுடன் சேர்த்து பின் செய்ய வேண்டும்.