மேக்கப் பாக்ஸ்-ஹைலைட்டர்!! (மகளிர் பக்கம்)
பளபள கன்னங்கள், மினுமினுக்கும் நெற்றி, ஜொலிக்கும் சருமம் இதெல்லாம் யாருக்குதான் பிடிக்காது. அதை முகத்தில் கொண்டுவரும் முதன்மையான பணியை செய்வதுதான் ஹைலைட்டர் வேலை. எப்படி ஹைலைட் செய்து கொள்ளலாம். என்னென்ன வெரைட்டிகள் உள்ளன முழு விபரங்கள் தருகிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் சங்கீதா மோகன்.
‘‘ஹைலைட்டர் – மேக்கப்பை பொறுத்தவரை இந்த வார்த்தை முகத்தில் எந்தெந்த பகுதிகள் பளிச்செனத் தெரிய வேண்டும் என நினைக்கிறோமோ அந்த பகுதியை ஹைலைட் செய்யறதுதான். குறிப்பா மேல் கன்னங்கள், நெற்றி, உதட்டுக்கு கீழே தாடை இந்தப் பகுதிகள் எல்லாம் வெளிச்சத்தில் பிரகாசமாக தெரிய வைக்கிறதுதான் ஹைலைட்டர் செய்யக்கூடிய வேலை. எண்ணை சருமம் கொண்டவங்களுக்கு இந்த பளபளப்பும், மினுமினுப்பும் அவங்களே வேண்டாம்னு சொன்னாலும் இயற்கையாகவே அவங்க முகத்தில் இருக்கும். வறண்ட சருமம், சாதாரண சருமம், சென்சிடிவ் சருமம் மேலும் பருக்கள் நிறைந்த சருமம் இப்படிப்பட்டவர்களுக்குதான் ஹைலைட்டர் மிகவும் அவசியம்’’ என்னும் சங்கீதா ஹைலைட்டரில் என்னென்ன வெரைட்டிகள் உள்ளன என பகிர்ந்தார்.
‘‘கிரீம், பவுடர், ஜெல், ரோல் ஆன், ஸ்டிக், ஹைலைட் கிளாஸ் என இதில் பல வெரைட்டிகள் உள்ளன. இதில் ஹைலைட் கிளாஸ் என்பது நாம் பயன்படுத்தும் லிப் கிளாஸ் போலவே இருக்கும். இதுல ஜெல் ஹைலைட்டர்களை மட்டும் பெரும்பாலும் அதிகளவு பயன்படுத்துவது கிடையாது. இவற்றில் பல வகை இருந்தாலும் அதனை சருமத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். ‘‘எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு பவுடர் ஹைலைட்டர் மட்டும்தான் பயன்படுத்தணும். காரணம் ஏற்கனவே அவங்க முகத்தில் எண்ணெய் பசை அதிகமா இருக்கும். அதனால் மேற்கொண்டு கிரீம் அல்லது ஜெல் மாதிரியான ஹைலைட்டர்கள் பயன்படுத்தும்போது அவர்கள் சருமத்தில் மேலும் எண்ணெய் பசைத்தன்மை அதிகமாக தெரியும். குறிப்பா மேக்கப் செய்து கொள்வதே முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய் பசையை குறைத்து காட்டத்தான்.
இதில் தவறான பொருட்களை பயன்படுத்தினால், மேக்கப் போட்டதற்கான அர்த்தமே இருக்காது. அதனால் எண்ணெய் பசை சருமத்தில் கூடுமானவரை எண்ணெய் பசையை கட்டுப்படுத்தவே மேக்கப் செய்ய வேண்டும். அதேசமயம் பளபளக்கும் சருமத்தையும் மேக்கப்பில் கொண்டுவரவேண்டும். வறண்ட சருமத்திற்கு கிரீம் அல்லது ஜெல் ஹைலைட்டர் பயன்படுத்தலாம். பருக்கள் அல்லது சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் கூடுமானவரை பவுடர் ஹைலைட்டரே பயன்படுத்துவது நல்லது. காரணம் பவுடர்கள் சருமத்திற்கு மேலேயே இருக்கும் என்பதால் சருமத் துவாரங்களில் அதிகம் இறங்கி பிரச்சனையை உண்டாக்காது. கிரீம், ஜெல் எனில் சருமத்துடன் நேரடியாக வேலை செய்யும்.
மேக்கப்பின் முதன்மையான பிரைமர்… காண்டோர் எல்லாம் செய்த பிறகு கடைசியாக குளோ கொடுப்பதே ஹைலைட்டரின் வேலை’’ என்னும் சங்கீதா ஹைலைட்டர் போட்டுக் கொள்ளும் போது என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதையும் பகிர்ந்தார். ‘‘ஹைலைட்டரை நேரடியாக எப்போதும் சருமத்தில் போடக்கூடாது. ஒருவேளை எனக்கு இந்த ஃபவுண்டேஷன், காஸ்மெட்டிக்ஸ், காம்பேக்ட் பவுடர் இதெல்லாம் பிடிக்காது எனில் ஸ்ட்ரோப் கிரீம் பயன்படுத்தலாம். இந்த கிரீம் தரமான பிராண்டுகளில் கிடைக்கிறது. ஹைலைட்டரே பயன்படுத்தவில்லை என்றாலும் இந்த கிரீம் மட்டுமே பயன்படுத்தினால் போதும். சருமத்தை பிரகாசமாக காட்டும் இந்த ஸ்ட்ரோப் கிரீம்கள்.
‘‘ஹைலைட்டர் பொறுத்தவரை கோல்டன், சில்வர், காப்பர், முத்து, இப்படியான மெட்டல் நிறங்களின் அடிப்படையில்தான் இருக்கும். தமன்னா, ஹன்சிகா மாதிரி அதிகம் சிவப்பான சருமம் கொண்டவர்கள் சில்வர் அல்லது முத்து அடிப்படையிலான ஹைலைட்டர் பயன்படுத்தலாம். அதேபோல் மாநிறம் அல்லது டஸ்கி சருமம் கொண்டவர்கள் கோல்டன் அல்லது காப்பர் நிறம் பயன்படுத்தலாம். இதைத்தாண்டி நம் சருமம் என்ன நிறமோ அதன் அடிப்படையில் ஹைலைட்டர்களை நம் சரும நிறத்தை விட ஒரு பாயிண்ட் அளவிற்கு பிரைட் நிறத்தில் பயன்படுத்தணும். மாடல்கள், நடிகைகள் முகம் மட்டும் இல்லாம கழுத்து எலும்பு, கை, கால்கள் இப்படி உடலின் எந்தெந்தப் பகுதிகள் பளிச்சென்று தெரியணுமோ அங்கே எல்லாம் பயன்படுத்துவது வழக்கம்.
எக்காரணம் கொண்டும் ஹைலைட்டரை நேரடியாக முகத்தில் போட்டுக் கொள்ளவே கூடாது. குறைந்தபட்சம் சன்ஸ்கிரீன் அல்லது மேக்கப் பிரெப் எனப்படும் கிரீம்களை பயன்படுத்திய பிறகு தான் ஹைலைட்டர் பயன்படுத்த வேண்டும். காரணம் ஹைலைட்டர்களில் கண்ணுக்கு தெரியாத மெல்லிய துகள்கள் அதிகமாகவே இருக்கும். இவை சருமத்தில் உள்ள துவாரங்களில் நுழைஞ்சு பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அதே சமயம் தரமான பிராண்டுகளை தேர்வு செய்வது அவசியம். இதன் விலை ரூபாய் 250 துவங்கி… ரூபாய் 4,000 , ரூ 5,000 வரையிலும் கூட கிடைக்கிறது. இயற்கையாகவே சருமம் பளபளக்க நிறைய பழங்களும், அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். மேலும் சருமத்தை உள்ளிருந்து பளபளப்பாக்கும் நீர் காய்கறிகளையும் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.