உச்சி முதல் உள்ளங்கால் வரை…!! (மகளிர் பக்கம்)
அழகியல் கலை என்பது ரொம்ப சுலபமான விஷயமில்லை. அதுவும் ஓர் அறிவியல். முறையாக அழகியல் கலையைக் கற்பதற்குக் கொஞ்சம் இயற்பியல், கொஞ்சம் வேதியியல், கொஞ்சம் உயிரியல் தெரிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு வரும் முகப்பருவையே எடுத்துக் கொள்வோம். அது ஏன் வருகிறது என்பது பற்றிப் படிக்கும்போது காற்றில் இருக்கும் பாக்டீரியா, அவற்றின் இனப்பெருக்கம் பற்றிப் படிக்க நேர்கிறது. இது உயிரியல். சூரிய ஒளியையும் பிரிசத்தையும் பற்றிப் படிக்கும்போது இயற்பியல். ஓசோன் மற்றும் அரோமா எண்ணெய்களைப் பற்றிப் படிக்கும்போது வேதியியல். எனவே அறிவியலோடு தொடர்பு கொண்டிருக்கும். இந்தக்கலையினை அறிவியல் துணைக்கொண்டு செயலாற்றி வருகிறார் அழகியல் கலை நிபுணர் லதா.
‘‘சொந்த ஊர் சென்னை. ஃபுட் & நியூட்ரிசனில் மாஸ்டர் டிகிரி பண்ணி இருக்கேன். மருத்துவத்துறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்ததைத் தொடர்ந்து கடந்த பதிமூன்று ஆண்டுகளாக TVAK காஸ்மெட்டிக் கிளினிக் என்ற பெயரில் காஸ்மெட்டாலஜி துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் காலத்தில் பெரும்பாலும் யாராலும் தொடர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள முடிவதில்லை.
அவர்களுக்காகவே பேஸ்டர் மெத்தட் என்னும் முறையில் ஒர்க்கவுட் முறையினை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த முறையில் நாம எந்த விதமான கடின உழைப்பும் செய்ய வேண்டிய அவசியமில்லை. உடற்பயிற்சி செய்யும் போது, நம் உடலில் உள்ள கொழுப்பு கறைந்து எனர்ஜியாக மாறும். அதேபோல்தான் இந்த சிகிச்சை முறையிலும் மாறும். இதனால் எந்த பின் விளைவுகளும் ஏற்படாது. மருத்துவர்களும் இந்த சிகிச்சையினை பரிந்துறை செய்கிறார்கள். அதே சமயம் இந்த சிகிச்சை முறையினை பற்றி நன்கு தெரிந்த மருத்துவ நிபுணரிடம் தான் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார் லதா.
‘‘பெண்கள் எப்போதும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தங்களின் புருவத்தை ஷேப் செய்து கொள்கிறார்கள். சருமம் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்று பேசியல் செய்றாங்க, காஸ்மெட்டாலஜி முறையில் அவர்கள் என்ன தேவைக்காக எங்களை அணுகுகிறார்களோ அதை நிரந்தரமாக செய்து கொடுக்கிறோம். அதாவது ஒருவர் தங்களின் சருமம் வெள்ளையாக மாறணும்னு கேட்பாங்க. அவங்களின் முகம் மட்டுமின்றி உடல் முழுவதும் அதற்கான ட்ரீட்மென்ட் கொடுக்கிறோம்.
அதேேபால் புருவம் அடர்த்தியாக ‘மைக்ரோ பிளேடிங்’, உதடு நிறத்தை மாற்ற பிக்மெண்டேஷன், டபுள் சின் என அனைத்து விதமான சிகிச்சையும் உண்டு’’ என்கிற லதா, காஸ்மெட் டாலஜியில் உள்ள சிகிச்சை முறைகளை பற்றி பகிர்ந்தார். ‘‘சரும நிறத்தினை மாற்ற விரும்புபவர்களுக்கு பீல்ஸ், மெஷின் ட்ரீட்மெண்ட், ஊசி போடுவது என மூன்று வகையான முறைகளை கையாள்கிறோம். ‘உங்களை தமன்னா போல் கலராக்கிவிடுவோம்’ என்று பொய்யான உறுதி எல்லாம் கொடுக்க மாட்டோம்.
ஒருவரின் சரும நிறத்தில் இருந்து இரண்டு ஷேட் தான் அதிகமாக்க முடியும். ஒருவர் எங்களிடம் வரும் போது, அவர்கள் கேட்பதை உடனே செய்துவிட மாட்டோம். இந்த சிகிச்சை முறை, அதற்கான செலவு என அனைத்து குறித்தும் விளக்கமளிப்போம். அதன் பிறகு அவர்கள் விரும்பினால் மட்டுமே சிகிச்சையினை தொடர்வோம். எக்காரணம் கொண்டும் அவர்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம். ஒருவர் தனிப்பட்டு விரும்பினால் மட்டுமே தான் செய்வோம்’’ என்றவர் முடி உதிர்தல், வழுக்கை போன்ற பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை மூலம் நல்ல தீர்வினை காணமுடியும் என்றார்.
‘‘ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களின் மிக முக்கியப் பிரச்னை முடி உதிர்வது. லேசர் மற்றும் பி.ஆர்.பி என்கிற அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். இரண்டாவது செஷனிலேயே அவர்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். முடியை பொறுத்தவரை ரீ க்ரோத்திங், ட்ரான்ஸ்பிளாண்ட், விக் என மூன்று விதமான சிகிச்சை அவரவரின் பிரச்னைக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது. ட்ரான்ஸ்பிளாண்ட், தலையில் பின் பகுதியில் முடி இருந்தால் மட்டுமே அதைக் கொண்டு செய்யமுடியும். முடியாதவர்களுக்கு விக் நல்ல சாய்ஸ். இது நார்மலான விக் மாதிரி இருக்காது. அவர்களின் முடியை கத்தரித்து, தலையின் அளவுக்கு ஏற்ப தயாரித்து தருகிறோம்.
காஸ்மெடிக் ஹேர் ரீ பிளேஸ்மெண்ட் என்ற இந்த சிகிச்சை முறை மூலம் ஜெர்மனியில் இருந்து இந்த விக் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை தலையில் பொறுத்திக் கொண்டு நீச்சல் அடிக்கலாம், ஜிம் பண்ணலாம், எவ்வளவு வேகத்தில் வேண்டுமானாலும் பைக்கில் போகலாம். எதுவும் ஆகாது. அதனை சரியான முறையில் அவ்வப்போது எங்களிடம் வந்து பராமரித்துக் கொள்ள வேண்டும்.
என்றும் இளமையான சருமத் தோற்றத்துடன் இருக்க வேம்பையர் ஃபேஷியல். நம் உடலில் இருக்கும் ரத்தத்தை சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள், பிளாஸ்மா செல்கள் என பிரித்து அதன் வளர்ச்சி காரணிகளை முகத்தில் சிறிய ஊசி மூலம் செலுத்துவோம். இதனை அழகு நிலையத்தில் செய்ய முடியாது. மருத்துவர்கள் மட்டுமே செய்யக்கூடிய சிகிச்சை. தவறாக செய்தால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முகப்பரு ஏற்பட்டு அந்த இடம் குழியாக இருந்தால் பி.ஆர்.பி. முறையில் சரி செய்யலாம். இவ்வாறு ஒவ்ெவாருவரின் தேவைக்கு ஏற்ப காஸ்மெட்டிக் துறையில் சிகிச்சை முறைகள் உள்ளது. அதனை அனுபவம் பெற்ற நிபுணர்களிடம் பெற்றுக் கொண்டால் கண்டிப்பாக அதற்கான பலனை அனுபவிக்க முடியும்’’ என்கிறார் அழகியல் கலை நிபுணர் லதா.