பிடித்த விஷயத்தை தொழிலாக மாற்றினால் வெற்றி நிச்சயம்!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 0 Second

பெண்கள் வாழ்க்கையில் பூக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் நாகரீக காலத்தில் வாழ்ந்து வந்தாலும், பெண்களுக்கு தலையில் பூ சூட்டிக் கொள்ளும் மோகம் இன்றும் குறையவில்லை. மாடர்ன் பெண்ணாக தலையில் பூ வைக்காமல் லூஸ் ஹேரில் சுற்றுக் கொண்டு இருந்தாலும், திருமணம், வளைகாப்பு போன்ற விசேஷ நாட்களில் அவர்கள் வாழ்க்கையிலும் ஜடை அலங்காரம் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

குறிப்பாக திருமணத்தின் போது, தங்களின் உடைக்கு ஏற்ப மேட்சிங் ஜடை அலங்காரம் செய்வதில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். பெண்களுக்கு பூக்கள் மேல் இருக்கும் காதல் மற்றும் மோகத்தை தன்னுடைய வியாபாரமாக மாற்றி அமைத்துள்ளார் ஜீவா கிருஷ்ணமூர்த்தி. இவர் ‘பார்ட்டி பெட்டல்ஸ்’ என்ற பெயரில் அழகான ஜடை மற்றும் பார்ட்டிகளுக்கு பூ அலங்காரங்கள் செய்து வருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் கிருஷ்ணகிரி. திருமணமாகி சென்னைக்கு வந்துட்டேன். எங்க ஊரில் விதவிதமான பல வண்ண பூக்கள் கிடைக்கும். அதனால் தினமும் எனக்கு பிடித்த பூக்களை வாங்கி நானே தொடுத்து தலையில் சூடிக் கொள்வேன். சில சமயம் என்னுடைய உடையின் நிறத்திற்கு ஏற்பவும் பூக்களை வாங்கி வைத்துக் கொள்வேன். ஆனால் சென்னைக்கு வந்த பிறகு நான் வசித்து வந்த ஏரியாவில் பூக்கள் என்பதே இல்லை என்று சொல்லணும். தினமும் மலர் சூடி பழக்கப்பட்ட எனக்கு இது ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஆரம்பத்தில் தலையில் பூ வைக்க முடியாமல் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. அதன் பிறகு நான் ஊருக்கு போகும் போது எல்லாம் எனக்கு பிடித்தமான பூக்களை எல்லாம் வாங்கி வந்திடுவேன்.

அதனை தொடுத்து தினமும் சூட்டிக் கொள்வேன். நான் விதவிதமாக மலர்கள் வைப்பதை பார்த்து தங்களுக்கும் செய்து தர முடியுமான்னு கேட்டாங்க. அவர்களுக்கு பூக்கள் தொடுத்து தருவதில்லாமல், அவர்கள் குழந்தைகளின் பிறந்தநாள் முதல் அவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு அலங்கார ஜடைகளை தைத்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அவர்கள் மூலமாகவும் பலர் என்னிடம் ஜடை அலங்காரம் செய்து தரச்சொல்லிக் கேட்டனர். நானும் பிசியானேன். பலர் என்னிடம் இதையே தொழிலாக மாற்றி அமைக்கலாமேன்னு கேட்டாங்க. அப்படித்தான் ‘பார்ட்டி பெட்டல்ஸ்’ உருவானது.

இன்றைய தலைமுறை பெண்கள் தங்கள் கேசத்தில் பலவிதமான எக்ஸ்பெரிமென்ட் செய்ய நினைக்கிறார்கள். முடியினை சின்னதாக கத்தரித்துக் கொள்வது முதல் ஸ்ட்ரீக்ஸ், ஹேர்கலரிங் என தங்களின் எண்ணத்திற்கு ஏற்ப முடியின் அமைப்பையும் மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் திருமணம் மற்றும் வளைக்காப்பு என்று வந்துவிட்டால், அப்படியே நம்முடைய பாரம்பரியத்திற்கு மாறிவிடுகிறார்கள். சவுரி வைத்து நீளமான ஜடை பின்னிக் கொண்டு அதில் அழகான பூ அலங்காரம் செய்ய விரும்புகிறார்கள். பட்டுப்புடவைக்கு பாரம்பரிய முறையிலும், அதே போல் ரிசப்ஷன் மற்றும் பார்ட்டிகளுக்கு ஏற்ப மாடர்னாகவும் அவர்களின் கேசத்தில் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்து தருகிறேன்” என்கிறார் ஜீவா.

பொழுதுபோக்காக ஆரம்பித்த இந்த மலர் அலங்காரம்… இப்போது வருமானம் ஈட்டித் தரக்கூடிய ஒரு தொழிலாக மாறிவிட்டது. நிச்சயதார்த்தம், முகூர்த்தம், ரிசப்ஷன், பிறந்தநாள், பார்ட்டி என ஒவ்வொரு நிகழ்வுக்கும் மற்றும் உடைகளுக்கு ஏற்ப ஜடை ரகங்களைத் தயார் செய்து தருகிறார். ‘‘எனக்கு செயற்கை பூக்கள் மேல் அதிக ஈடுபாடு கிடையாது. காரணம் இயற்கை பூக்களில் உள்ள அந்த ஃப்ரஷ்னெசை செயற்கை பூக்களில் உணரமுடியாது.

மேலும் புடவையின் நிறம் மற்றும் டிசைனுக்கு ஏற்ப ஜடை அலங்காரம் செய்வது தான் என்னுடைய சிறப்பம்சம். சில சமயம் புடவையின் நிறத்திற்கு மேட்ச் செய்ய முடியாமல் போகும். அப்போ து பலர் அந்த நிறத்திற்கு ஏற்ற செயற்கை பூக்களை வைத்து சமாளிக்க சொல்வார்கள். நான் இயற்கை பூக்களின் மீது விரும்பிய நிறங்களை தெளித்து விடுவேன். இது பார்க்க இன்னும் அழகாக இருக்கும்.

பூக்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளரின் தலையில் சூடும் வரை ஃப்ரஷ்ஷாக இருக்கணும். சில சமயம் புடவைக்கு ஏற்ப மேட்சிங் ஜடை தயாரிக்க அதிக நேரமாகும். அந்த சமயத்தில் பூக்கள் வெளியே இருக்கும் என்பதால் சீக்கிரம் வாடிவிட வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் விரைவாக செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சில நாட்கள் இரவு முழுவதும் கண் விழித்து கட்டினால் தான் மறுநாள் காலை முகூர்த்தத்திற்கு ஃப்ரஷ்ஷான மலர்களைத் தர முடியும்” என்று கூறும் ஜீவாவிடம் 1000 ரூபாய் முதல் தலையலங்கார பூக்கள் உள்ளதாம்.
“முன்பெல்லாம் மட்டையில் ஜடை தைத்து கொடுத்திடுவார்கள்.

அதை அப்படியே முடியில் பிக்ஸ் செய்ய வேண்டும். ஆனால் நவீன பெண்கள் புதுவிதமான அலங்காரங்களை விரும்புகிறார்கள். அப்படி உருவானதுதான் முந்திரி ஜடை அலங்காரம். இதில் மலர்களுடன் முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் சேர்க்கப்பட்டிருக்கும். சில அலங்காரங்களில் பொம்மைகளையும் பயன்படுத்துகிறேன். என்னைக்கேட்டால் பெண்கள் வெளியில் சென்று வேலை பார்ப்பதைவிட, இது போன்ற தங்களுக்கு விருப்பமான துறையில் வித்தியாசமாக சிந்தித்து தொழில் தொடங்குவது நல்லது.

வீட்டையும் பார்த்துக் கொள்ள முடியும், வருமானத்தையும் பெருக்க முடியும். வருடத்தில் முகூர்த்தம் இருக்கும் மாதங்களில் மட்டும் தான் ஆர்டர் வரும். மற்ற நாட்கள் சும்மா இருக்க முடியாது என்பதால், அந்த நேரத்தில் ஜடை அலங்காரம் குறித்து பயிற்சி அளிக்கிறேன். இதன் மூலம் பல பெண்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடிகிறது. படித்த படிப்பிற்குதான் வேலை செய்ய வேண்டும் என்றில்லை. நமக்கு பிடித்தமான விஷயத்தைக் கூட திறமையால் ஒரு தொழிலாக மாற்றி அமைக்க முடியும்’’ என்கிறார் ஜீவா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post மணப்பெண் ஜடை அலங்காரம்!! (மகளிர் பக்கம்)