விடாமுயற்சிக்கு கிடைத்த அழகி கிரீடம்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 33 Second

வி.எல்.சி.சி ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டி பிப்ரவரி 2021ல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாயின. அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மானசி வாரணாசி 2020 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்று, 2021 உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிகா ஷியோகாண்ட் மிஸ் கிராண்ட் இந்தியா 2020 பட்டத்தை வென்றார். இதற்கிடையே மிஸ் கிராண்ட் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மான்யா சிங், சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறார்.

19 வயதாகும் மான்யா சிங், மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் பல தடைகளைத் தாண்டி கலந்துகொண்டு, இரண்டாவது இடம்பிடித்துச் சாதித்தார். மகளின் கனவிற்காக ஒரு குடும்பமே பல தியாகங்களும், உழைப்பும் செய்திருப்பதுதான் மக்கள் இவரின் வெற்றியினை கொண்டாடக் காரணம்.

மான்யா மிகவும் வறுமையான குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தவர். தந்தை ஆட்டோ டிரைவராக 15 மணி நேரம் வேலை செய்தும், தாய் முடிதிருத்தும் சலூனில் வேலை செய்தும் குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளனர். மான்யாவும், 15 வயதானதும் படிப்பிற்கு நடுவே பல பகுதி நேர வேலைகள் செய்து குடும்பத்திற்கு உதவியுள்ளார். இப்படி வறுமையில் வளர்ந்த மான்யாவிற்கு அழகிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கனவை நினைத்துப் பார்க்கவே பெரும் துணிச்சல் தேவைப்பட்டுள்ளது.

‘‘பதிநான்கு வயதில் முதல் முறையாகத் தொலைக்காட்சியில் அழகுப் போட்டி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் கலந்து கொண்ட பெண்கள் துணிச்சலாகப் பல சமூக கருத்துகளை முன்வைத்தது என்னை மிகவும் ஈர்த்தது. எப்படியாவது அந்த போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது.

பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும், கடைசியில் திருமணமாகிப் புகுந்த வீட்டிற்குச் செல்வதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாக நினைக்கும் சமூக அமைப்பில் வளர்ந்ததால், இக்கனவைப் பலர் ஆதரிக்கவில்லை. என் பெற்றோர்கள் முதலில் தயங்கினாலும், என் மன உறுதியைக் கண்டு சம்மதித்தனர்” எனக் கூறும் மான்யா, ‘‘தொடர்ந்து முயற்சி செய், உனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்” எனத் தன் தந்தை கூறிய வார்த்தைகள்தான் தனக்குப் பெரிய பலமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

மான்யா, தன் கனவை நிறைவேற்றக் கடுமையான உழைப்பு தேவை என்பதை புரிந்துகொண்டார். கிராமத்தை விட்டு வெளியேறினால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என, ஒரு நாள் மும்பைக்கு ரயில் ஏறினார். மும்பையில் வந்திறங்கியவர் ரயில் நிலையம் அருகில் இருந்த பீட்சா உணவகத்திற்கு நேராக சென்று தனக்கு ஒரு வேலை தருமாறு கேட்டுள்ளார். பகுதி நேர வேலையும், தற்காலிகமான தங்குமிடமும் கிடைத்தது. மகளைப் பிரிந்திருக்க முடியாத குடும்பத்தினர், மறுநாளே கிராமத்தை விட்டு மும்பைக்கு வந்திறங்கினர்.

மும்பையில் செட்டிலானதால், வருமானத்திற்கு மான்யாவின் தந்தை ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துள்ளார். அதில் கிடைத்த வருமானத்தில் மான்யாவையும் அவர் தம்பியையும் பள்ளியில் சேர்த்துள்ளார். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் சேரும் சமயம், மான்யா முழுமையாக மாடலிங் துறையில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால் அதற்கு செலவு அதிகமாகும் என்பதால், இரவு கால் சென்டரில் வேலை செய்தார். வேலை முடித்து நேராக கல்லூரி வகுப்புகள்… மாலையில் மாடலிங், ஆடிஷன் என உணவும், ஓய்வும் இல்லாமல் மான்யா உழைத்து மாடலிங்கிற்காக ஒரு தொகையை சேர்க்க ஆரம்பித்தார்.

‘‘நான் சென்ற பல ஆடிஷன்களில், ஆங்கில உச்சரிப்பு சரியில்லை, சிவப்பான நிறம் இல்லை, அழகாக இல்லை எனப் பல நிராகரிப்புகளையே சந்தித்தேன். பலருக்கு என்னுடைய கனவு கேலியாக இருந்தது. ஆனால் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நான் தவறவிடாமல் வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன். கால் சென்டர் வேலை மூலமாக என் ஆங்கில உச்சரிப்பை வளர்த்துக்கொண்டேன்” என்கிறார்.

‘‘ஆடிஷன் இருக்கும் போது அப்பா தான் ஆட்டோவில் கொண்டு விடுவார். அவருக்கு சவாரி இருக்கும் போது, நான் வீட்டுக்கு நடந்தே வந்திடுவேன். ஆட்டோவுக்கு செலவு செய்யும் பணத்தை மாடலிங் செலவுக்காக மிச்சம் பிடிப்பேன். அது மட்டுமில்லை. பயிற்சியின் போது, அங்கு வருபவர்கள் 10 ஆயிரம் ரூபாய் செலவில் காலணிகள் அணிந்திருப்பார்கள்.

நானும் அணிந்து செல்வேன். 250 ரூபாய்க்கு காலில் விலையுயர்ந்த செருப்பு அணிவது மட்டுமல்ல மாடலிங்… விலை குறைவாக அணிந்தாலும்… போட்டியில் வெற்றி பெற வேண்டும்’’ என்று கூறும் மானியா கல்லூரியில் 85% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது மட்டுமில்லாமல் அந்த ஆண்டின் ‘சிறந்த மாணவர்’ என்ற விருதையும் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால்… மான்யாவின் அப்பாவிற்கு வருமானம் இல்லாமல் போனதால், அனைவரும் சொந்த கிராமத்திற்கே சென்றுவிட்டனர். அங்கு இணையம் வழியே மான்யா தன் பத்துக்கு பத்து அடி வீட்டிலிருந்தே அழகிப்போட்டி குறித்த ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளார்.

‘‘அழகிப் போட்டியில் கலந்துகொண்டு வெல்வதே என்னுடைய ஒரே குறிக்கோள். பலர், ‘நீ சிவப்பாக இல்லையே… எப்படி போட்டியில் பங்கு பெற முடியும்’ என்று கிண்டல் செய்தனர். அழகிப் போட்டியை பொறுத்தவரை தோல் நிறத்தைக் காட்டி பாகுபாடு செய்யமாட்டார்கள். போட்டியில் சிகப்பழகை தாண்டி வெற்றியினை தீர்மானிக்கும் அம்சங்கள் பல உள்ளன. கேள்வி கேட்பவர்களை ெபாருட்படுத்தாமல்… நம் கனவினை அடையும் இலக்கை ேநாக்கிப் பயணிக்க வேண்டும்’’ என்று கூறும் மான்யாவிற்கு தன் பெற்றோர்களின் சொந்த வீடு கனவினை நிறைவேற்ற வேண்டுமாம்.

தான் வென்ற கிரீடத்தை தன் பெற்றோருக்கு அணிந்து அழகு பார்க்கும் மான்யாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘‘என் மகளைப் பல முறை இந்த கல்லூரிக்கு ஆட்டோவில் அழைத்துவந்துள்ளேன். ஆனால் இன்று அவள் தன் கிரீடத்துடன் கம்பீரமாக வந்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை” எனக் குறிப்பிட்டிருந்த மான்யாவின் தந்தை, ‘‘ஒவ்ெவாரு பெண்ணும் தங்கள் கனவை எந்த தடை வந்தாலும், விடாமுயற்சியுடன் தொடர வேண்டும். பெற்றோர்களும் முடிந்தவரை குழந்தைகளின் கனவை ஆதரிக்க முயற்சி செய்ய வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?(அவ்வப்போது கிளாமர்)
Next post ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது: மங்கு மறையுமா?(மகளிர் பக்கம்)