நலம் காக்கும் சிறுதானியங்கள்!(மருத்துவம்)
தினை (ஃபாக்ஸ்டெயில் மில்லட்)
தினை சிறுதானியம் 8000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களின் பிரதான உணவாக இருந்தது. நீண்ட காலமாக, உணவு பழக்கத்தில் இல்லாத தினைகள் இப்போது மீண்டும் பழக்கத்தில் வந்துள்ளன. தினை ஒரு சூடான காலநிலையில் வளரும் புல் வகை. இதனை நெல்லுடன் ஒப்பிடுகையில் சாகுபடிக்கு மிகக் குறைந்த நீரே தேவைப்படுகிறது. இந்த சிறிய விதைகள் சுமார் 2 மிமீ அளவுள்ள மெல்லிய, மிருதுவான மேலோடு மூடப்பட்டிருக்கும். வெளிர் மஞ்சள்-பழுப்பு, துருப்பிடித்த கருப்பு நிறத்தில் இருக்கும். இது வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் பயிரிடப்படும் வருடாந்திர பயிராகும். தினை, கம்புக்கு அடுத்தபடியாக உலகில் மிகவும் பரவலாக வளர்க்கப்படும் இரண்டாவது இனமாகும்.
தினை சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?
தினையை தண்ணீரில் சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பால் சேர்த்து மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்கள் சமைக்கவும். சமைக்க எளிதானது மற்றும் பல்வேறு இந்திய சமையல் உணவிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இது பொதுவாக காலை உணவுக்கான கஞ்சியாக சமைக்கப்படுகிறது. ரொட்டிகள், மஃபின்களிலும் சேர்க்கலாம். சூப், கறிகள் அல்லது சூடான தானிய சாலட்களுக்கு ஒரு அடிப்படையாகவும் பயன்படுத்தப்படலாம்.
தினையில் உள்ள ஊட்டச்சத்து
வைட்டமின் பி 12 நிறைந்த இந்த சிறிய விதைகள் உங்களுக்கு தினசரி போதுமான அளவு புரதம், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை வழங்குகின்றன. லைசின், தயமின், இரும்பு மற்றும் நியாசின் ஆகியவற்றின் ஏராளமான அளவைத் தவிர, இது ஏராளமான கால்சியத்தையும் வழங்குகிறது.
ஊட்டச்சத்து மதிப்பு
கார்போஹைட்ரேட்டுகள்- 60.1 (கிராம்)
புரதம் – 12.3 (கிராம்)
கொழுப்பு – 4.30 (கிராம்)
ஆற்றல் – 331 (கிலோ கலோரி)
ஃபைபர் – 6.7 (கிராம்)
கால்சியம் – 31.0 (மிகி)
பாஸ்பரஸ் – 188 (மிகி)
மெக்னீசியம் – 81 (மிகி)
துத்தநாகம் – 2.4 (மிகி)
இரும்பு – 2.8 (மிகி)
தயமின் – 0.59 (மிகி)
நியாசின் – 3.2 (மிகி)
ஃபோலிக் அமிலம் – 15.0(மிகி)
பலன்கள்
*தினை பாஸ்பரஸின் வளமான மூலமாகும். இது ஆற்றல் உற்பத்திக்கான ஒரு முக்கியமான கனிமம். நமது உடலில் உள்ள ATP-யின் ஒரு முக்கிய அங்கமாகும்.
*இதில் லைசின் மற்றும் மெத்தியோனைன் (அமினோ அமிலங்கள்) இருப்பதால், அவை கொலாஜன் உருவாவதற்கு உதவுகின்றன. சுருக்கங்களின் தோற்றத்தை மெதுவாக்க உதவுகிறது.
*இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. பிற தானியங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக உள்ளது.
*தினையில் இருக்கும் நார்ச்சத்து நிறைந்த உணர்வைத் தருகிறது, இது அதிகப்படியான உணவு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.*இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், தசைப்பிடிப்பைக் குறைக்க உதவுகிறது.
*கால்சியம் நிறைந்து இருக்கின்றன.
ஆரோக்கிய நன்மைகள்
*வலுவான எலும்புகள்: இரும்பு மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும் என்பதால் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு, பலவீனமான தசைகள், ரத்த சோகை, அடிக்கடி தசைப்பிடிப்பு, உடையக்கூடிய எலும்புகள், வீக்கம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டுவலி, ஸ்பான்டைலிடிஸ் போன்ற பிற எலும்பு தொடர்பான நாட்பட்ட நிலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு உடலின் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் வழக்கமான உணவில் தினையைச் சேர்க்கவும்.
*நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது: பல்வேறு நரம்பியல் கோளாறுகளைத் தடுக்க ஃபாக்ஸ்டெயில் தினையை உட்கொள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் கடுமையாக பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் பி1 நிறைந்த தானியமாகும். அல்சைமர், பார்கின்சன் போன்ற பல்வேறு நிலைகளின் முன்னேற்றத்தை குறைத்து நரம்பு மண்டலத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக அளவு இரும்பு மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் அறிவாற்றல் செயல்பாட்டைத் தூண்டுகிறது.
*இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: பசையம் இல்லாதது, புரதம் நிறைந்தது மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளது. இது தசை மற்றும் நரம்புகளுக்கு இடையே செய்திகளை அனுப்பும்
அசிடைல்கொலின் உருவாவதற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு பொதுவாக தினை பிரபலமானது. இது இதய செயல்பாடுகளை பாதுகாக்கிறது.
*கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது: லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
*நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது: தினை அரிசிக்கு முற்றிலும் சிறந்த மாற்றாகும். கிளைசெமிக் குறைவாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவுகள், கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் மற்றும் லிப்பிட் அளவை குறைக்கிறது.
*செரிமானத்தை ஊக்குவிக்கிறது: செரிமான பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே தீர்க்கப்படாவிட்டால், அவை நாளடைவில் கடுமையான மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு வழிவகுக்கும். செலியாக் நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான உணவாகும். குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
*நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது: தொற்றுநோய்களின் காலங்களில், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை விட முக்கியமானது எதுவுமில்லை. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகளால் நோய்வாய்ப்பட்டிருந்தால், மறுபடியும் போன வலிமையை மீட்டெடுக்க தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
*சருமத்திற்கு நல்லது: தினையில் கொலாஜன் உருவாவதைத் தூண்டும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்கும். எனவே இது நமக்கு ஆரோக்கியமான, இளமை மற்றும் சுருக்கம் இல்லாத சருமத்தை வழங்குகிறது.
*நினைவாற்றலை அதிகரிக்க: வைட்டமின் பி1 நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற நரம்பு கோளாறுகளை குறைக்க உதவுகிறது. இது மன உறுதி வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது.
பக்க விளைவுகள்
மிதமான அளவில் உட்கொள்ளும் போது தினை பாதுகாப்பானது. இது கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மில்லியன் கணக்கான மக்களால் முக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. இருப்பினும், தினையின் அதிகப்படியான நுகர்வு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். தினைகளில் கோய்ட்ரோஜன் உள்ளது. இது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியில் தலையிடுகிறது மற்றும் தைராய்டு சுரப்பி மூலம் அயோடின் உறிஞ்சுதல் பயன்பாட்டைத் தடுக்கிறது.
அயோடின் குறைபாடு என்பது ஒரு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சனையாகும். இது தைராய்டு சுரப்பியின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது கோய்ட்டர் எனப்படும். வறண்ட சருமம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் மெதுவான சிந்தனையை ஏற்படுத்துகிறது. ஆகையில் அளவாக உட்கொண்டால் எந்த பாதிப்பும் இல்லை.
தினை வெஜ் பாஸ்தா
தேவையானவை: தினை பாஸ்தா – 200 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, குடைமிளகாய் – 1/4 கப், பனீர் – 1/4 கப், மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன், மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கேற்ப, உப்பு – சுவைக்கு ஏற்ப.
செய்முறை: தினை பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் சிறிதளவு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவைத்து தண்ணீரை வடித்து தனியே வைக்கவும். அனைத்து காய்கறிகளையும் சிறியதாக நறுக்கவும். மற்றொரு கடாயில், எண்ணெய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, குடைமிளகாய், பனீர் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும். பிறகு மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்துள்ள பாஸ்தாவை கலவையில் சேர்க்கவும். நன்றாக கலக்கவும். இப்போது தினை
வெஜ் பாஸ்தா பரிமாற தயாராக உள்ளது.