3D டிசைனில் பட்டுப் புடவைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 0 Second

சமூகத்தின் பிரதிபலிப்பாக நாம் காணும் யாவையும் பட்டுப் புடவைகளில் கொண்டு வந்திருக்கின்றனர் சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சுகலப்பட்டியை சேர்ந்த மீனாட்சி சில்க்ஸ் கடையினர். 1980ம் ஆண்டு கோவிந்தன் என்பவரால் சிறு கடையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பல நாடுகளுக்கு பஞ்சுகலப்பட்டியிலிருந்து பட்டு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. அப்பா தொடங்கிய தொழிலை தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார் எம்.பி.ஏ பட்டதாரியான கோபி கோவிந்தன்.

‘‘எங்களோட நோக்கமே பாரம்பரியமான முறையில கைத்தறியில் நெய்ற பட்டுப் புடவைகளை மக்களுக்கு கொடுக்கணும் என்பதுதான். எங்க தறியில் இருந்து ஒரு பட்டுப்புடவை கூட குறைந்த தரத்துடன் வெளியே போகாது’’ என்று பேச ஆரம்பிக்கிறார் கோபி. ‘‘என்னுடைய அப்பா கோவிந்தன். அவர்தான் இந்த பட்டுக் கடையின் முன்னோடி.

1980ல் அவர் இந்த கடையை ஆரம்பிக்கும் முன் கைத்தறி வேலைதான் செய்து கொண்டு இருந்தார். அந்தக் காலத்தில் கைத்தறியில் ஒரு சேலையை நெய்வது குறித்து கற்றுக் கொள்ள குறைந்தபட்சம் இரண்டு வருஷமாகும். ஆனா இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தால், இரண்டே மாசத்தில் கற்றுக் கொள்ளும் அளவிற்கு இயந்திரங்கள் வந்துவிட்டது.

அதே சமயம் அப்பா காலத்தில் கையால நெய்யும் பட்டுக்கு ரொம்பவே டிமாண்ட் இருந்துச்சு. அதுதான் அப்பாவை தனியாக தொழில் துவங்க ஊன்றுகோலாக இருந்தது. இரண்டு கைத்தறியோட ஆரம்பிச்ச எங்க கடை இன்று 700 கைத்தறி இயந்திரங்கள் மற்றும் ஆயிரம் பேர் வேலை செய்திட்டு இருக்காங்க. பஞ்சுகலப்பட்டி பகுதி மக்களின் பிரதான வேலையே கைத்தறி நெசவுதான்’’ என்றவரிடம் ஒரு பட்டு எப்படி தயாராகிறது என்று கேட்டதற்கு, ‘‘பட்டு தயாராக 32 விதமான வேலைகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு பட்டும் தயாராகும் முன்பு அந்த பட்டிற்கான நிறத்தையும் அந்த பட்டில் கொடுக்கக்கூடிய டிசைன்களையும் முடிவு செய்ய வேண்டும். அதற்காக தனிப்பட்ட டிசைனிங் குழு இருப்பாங்க. அவங்க புடவையின் நிறம் என்ன மற்றும் அதில் அமைக்கப்படும் டிசைன்களை 3D முறையில் தயாரிப்பார்கள்.

அதன் பிறகு டிசைனின் வடிவங்களை கண் பார்வை இல்லாதவர்கள் பயன்படுத்தும் பிரெய்லி முறை அட்டைகளை போல சிறு சிறு ஓட்டைகளை அதில் இட்டு நெசவாளர்களிடம் கொடுத்துவிடுவார்கள். வெள்ளை நிறத்தில் இருக்கும் பட்டு நூலிற்கு டிசைனிற்கு ஏற்ப சாயம் மாற்றும் ‘டையிங்’ செய்யப்பட்டு பட்டு நூலினை காய வைப்பார்கள். நூல் காய்ந்தவுடன் அதனை எடுத்து தறியில் கோர்ப்பார்கள். பட்டுநூல் மிகவும் லேசாக இருக்கும் என்பதால் ஒரு நூலாக கோர்க்காமல், மூன்று நூல்களை ஒன்று சேர்த்து ஒரு நூலாக தறியில் கோர்ப்பார்கள். கைத்தறியில் ஈடுபடும் நெசவாளர்கள் ‘நாடா’ என்னும் ராக்கெட் போன்று இருக்கும் ஒரு பொருளை வைத்திருப்பார்கள்.

அதில் டையிங் செய்யப்பட்ட வண்ண நூல்களை பொருத்தி வடதும் இடதுமாக நகர்த்தி கொண்டு நூல் ராட்டையை இயக்குவார்கள். கையில் பட்டினை நெய்யும் போது கைகளால் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் பட்டுத் துணி கிழியாமல் பல நாட்கள் உறுதியாக இருக்கும். அதுவே மெஷின்களில் இந்த மாதிரி பட்டுப் புடவைகளை நெய்யும் போது மெஷின் கொடுக்கும் அழுத்தத்தினால் பட்டின் இலகு தன்மை பாதிக்கப்படும்.

இதனாலேயே கைத்தறியில் செய்யப்படும் பட்டுக்கு கிராக்கி அதிகம். பாவு சரி செய்தல், இழை சிக்கெடுத்தல், கஞ்சி போடுதல், தறியேற்றுதல், சரிகை வடிவமைப்புச் செய்தல் என ஒரு பட்டுப் புடவை தயாராக பல விதமான வேலைப்பாடுகளை செய்ய வேண்டும். ஒரு பட்டுப் புடவையை நல்ல ஜரிகை கொண்டு நெய்வதற்கு குறைந்தது பத்து நாட்கள் ஆகும். கடும் சோதனைகளுக்கு பின்னால் பட்டுப் புடவை கைத்தறி நெசவாளர்களால் செய்யப்பட்டு சந்தைக்கு உங்களின் கைகளுக்கு வரும் போது அதில் பல ஆயிரம் நபரின் கடின உழைப்பும் கலந்திருக்கும்.

சேலம் பகுதிதான் அதிகமாக கைத்தறி நெசவாளர்கள் காணப்படும் பகுதி. பஞ்சுகலப்பட்டியில் இருந்து பல இடங்களுக்கு பட்டுப்புடவைகள் ஏற்றுமதியாகின்றன. புதுவிதமான டிசைன்களை கொடுக்க வேண்டும் என எண்ணிய நாங்கள்மை புடவைகளில் பிரைடல் டிசைன்கள், கார்ட்டூன் டிசைன்கள், 3D வடிவத்தில் நட்சத்திரங்கள், கார், மரம், தாவரங்கள் போன்ற டிசைன்களை வடிவமைத்து வருகிறோம்.

அதே போல புவி வெப்பமயமாதல் குறித்த டிசைன்களையும் புடவைகளில் கொண்டு வந்தோம். தற்போது குஜராத்தில் ஃபேமஸான கலம்காரி டிசைன் வகைகளை நமது பட்டுப் புடவைகளில் டிசைன் செய்திருக்கிறோம். நாம் பார்க்கும் எல்லாவற்றையும் பட்டுப் புடவைகளில் கொண்டு வரலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு காலத்திற்கேற்றார் போல பட்டுப் புடவைகளிலும் டிசைன்களை மாற்றி வருகிறோம். தற்போது கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வருங்கால மக்கள் தங்களை நெசவாளர்கள் என்று கூறிக் கொள்வதை தாழ்வு மானப்பான்மையாக கருதுவதால், யாரும் நெசவாளராக விரும்புவதில்லை. துணிக்கடைகளும் சுத்தமான பட்டு என்ற பெயரில் பாலிஸ்டர் நூலினை கலந்து விடுவதால் சந்தையில் பட்டின் விலை குறைகிறது. 80% பட்டும் 20% மற்ற துணியும் கலந்துதான் பட்டுப் புடவைகளை பலர் குறைந்த விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள். நல்ல தரமான கைத்தறி இருந்தும் மலிவான சீன இயந்திரங்களில் தயாரிக்கப்படும் விசைத்தறி பொருட்களுடன் போட்டியிட முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பது மிகவும் வேதனையை அளிக்கிறது.

உதாரணமாக எந்த ஒரு டிசைனும் இல்லாமல் வெறும் பட்டுப்புடவை தறியில் நெய்வதற்கு மட்டுமே ரூ.6000 ஆகும்.ஒரு கிலோ பட்டு நூலின் விலை ரூ. 4,000, விசைத்தறிகள் பயன்படுத்தும் பாலியஸ்டர் நூலின் விலையே கிலோவிற்கு ரூ.800தான். ஒரு கைத்தறி பட்டுப் புடவை குறைந்த விலையாக 10,000 ரூபாயில் நெய்யலாம். விசைத்தறியில் ரூபாய் 4,000 ஆகும். இது உண்மையான பட்டுப் புடவைதானா என்பதை வாடிக்கையாளர்கள் பார்ப்பதில்லை. இனி வரும் காலங்களில் மக்கள் எங்கள் வேலையின் நேர்த்தியைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

அழகாக இருக்கிறதா… மலிவு விலையில் புடவை கிடைக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள். இந்த மாதிரியான நிலையில் தான் அரசாங்கத்தின் நூல் விலையேற்றமும் எங்களை கடுமையாக பாதித்துள்ளது. சரிந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கி, எங்கள் தொழிலை மேம்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்கிறார் கோபி கோவிந்தன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post ஆரோக்கியமான குடும்பம்=ஆரோக்கிய சமூகம்! (மகளிர் பக்கம்)