ஆரோக்கியமான குடும்பம்=ஆரோக்கிய சமூகம்! (மகளிர் பக்கம்)
ஆக்ராவைச் சேர்ந்த இலா ஆஸ்தானா திருமணமாகி இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் என்பதால் அழகான தமிழில் பேசுகிறார். திருமணம் மற்றும் குடும்ப நல ஆலோசனைக்கான பயிற்சியை முறையாக சிங்கப்பூரில் பெற்று இந்தியாவில் குடும்ப அமைப்பு, திருமண வாழ்க்கை மற்றும் உறவுகளை எப்படி அணுகுவது போன்ற சிக்கலான விஷயங்களை புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். இலா ஆஸ்தானாவிடம், ஆரோக்கியமான குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக பேச அணுகினோம்.
‘‘பொதுவாக மக்கள் இந்த படிப்பை படித்தால் நன்றாக சம்பாதிக்கலாம் அல்லது இந்த திறமையை வளர்த்துக்கொண்டால் உங்கள் பணியில் உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும் என்று சொன்னால், உடனே எவ்வளவு செலவானாலும் அதை கற்றுக்கொள்கின்றனர். ஆனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்த, குடும்ப வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அல்லது எதிர்பார்ப்புகளை எப்படி அணுகலாம், எப்படி சமாளிக்கலாம் என்று அதன் முக்கியத்துவத்தை யாராவது எடுத்துரைத்தால் அதை காதில் கூட வாங்க மறுக்கிறார்கள்.
ஒருவருக்கு ஆரோக்கியமான குடும்பமும், தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடம் நல்ல உறவும் இருந்தால் தான் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், அந்த வெற்றியை சந்தோஷமாக கொண்டாட முடியும், அப்போதுதான் இந்த சமூகமும் வளர்ச்சி அடையும்” என்கிறார் இலா.
“நான் ஒரு ஜர்னலிசம் மாணவி. என் குடும்பத்தில் சில கசப்பான உறவுகளால் பல இன்னல்களுக்கு ஆளாகினேன். அதனால், எனக்கு வரப் போகும் வாழ்க்கை துணை என்னை நன்கு புரிந்தவராக இருக்க வேண்டும். நானும் என்னுடைய கணவரும் எங்கள் குடும்பத்தை ஆரோக்கியமான சூழ்நிலையுடன் வைத்திருக்க வேண்டும் என்று மிகவும் தீவிரமாய் இருந்தேன். நான் நினைத்தது போலவே எனக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைந்தது. என்னுடைய குடும்ப வாழ்க்கை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாறியது.
ஒரு ஆரோக்கியமற்ற குடும்ப சூழ்நிலையில் இருந்து ஒரு ஆரோக்கியமான குடும்பத்தை நான் எனக்காக உருவாக்கிக் கொண்ட போது, அது என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, எனக்கு எவ்வளவு பெரிய மன தைரியத்தையும், மன அமைதியையும் கொடுத்தது என்பதை என்னால் உணர முடிந்தது.
ஒரு ஆரோக்கியான குடும்ப சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்குவார்கள். அதே சூழலில் இருக்கும் இளைஞர்கள் தங்கள் வேலையிலும் தொழிலிலும் வெற்றி அடைவார்கள். எனக்கு கிடைத்த இந்த அழகான வாழ்க்கை என்னைப்போல ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய கவனம் திருமணம் மற்றும் குடும்ப நல ஆலோசனைப் பக்கம் திரும்பியது. NHCA சிங்கப்பூர் பயிற்சி மையத்தில் முறையான பயிற்சி சான்றிதழ் பெற்று இந்தியாவில் திருமணம் மற்றும் குடும்ப நல ஆலோசகராக இயங்கி வருகிறேன். கொரோனா ஊரடங்கு சமயத்தில் முதல் முறையாக குடும்பத்தினர் அனைவரும் ஒரே வீட்டில் ஒருவருடன் மற்றவர் உரையாடியே ஆக வேண்டும் அல்லது ஒன்றாக வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இது வரை எனக்கு நேரமில்லை, வேலை இருக்கிறது என்ற காரணம் சொல்லி தள்ளிப்போட்டு வந்த பிரச்சனைகள் எல்லாம் கண் முன்னால் விரியத் தொடங்க, பலரும் முதல் முறையாக அந்த பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம், எப்படி சமாளிக்கலாம் என்ற தீர்வை நோக்கிய திசையில் நகர்ந்தனர்.
ஆனால் சிலர், அந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் உடைந்தும் போயினர். இந்த கொரோனா சமயத்தில் தங்கள் வீட்டில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பலரும் முதல் முறையாக உணர்ந்தனர். அப்போது அவர்களுக்கு இந்த பிரச்சனைகளை தீர்க்க குடும்ப நல ஆலோசகர்களின் உதவி தேவைப்பட்டது. அதைப் புரிந்து கொண்டு, நான்World of Upbringing (வேர்ல்ட் ஆஃப் அப்பிரிங்கிங்) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஆலோசனைகளை வழங்கினேன்.
மக்கள் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சனைகளை பகிர்ந்தனர். அவர்களுக்காக ஆன்லைனில் தெரபியினை அளித்தேன். என்னுடைய சந்திப்புகள்/ ஆலோசனைகள்/ வர்க்ஷாப்புகள் அனைத்திற்கும் நான் அதிக கட்டணம் பெறாத காரணத்தால், பலர் என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றனர். கல்லூரிகள், ஐ.டி நிறுவனங்கள், குடும்பங்கள் என அனைத்து இடங்களில், ஒரு ஆரோக்கியமான குடும்ப அமைப்பை பற்றி விவாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு.
ஆரோக்கியமான குடும்ப அமைப்பு இல்லாமல் போகும் போது, சமூகத்தில் அது மிகப்பெரிய பின் தங்கிய நிலையையும் தேக்கத்தையும் உருவாக்குகிறது. பொருளாதார ரீதியாக நாம் முன்னேறுவது எவ்வளவு அவசியமோ, அதே போல ஒரு தனி மனிதனாக புரிதலுடன் சக மனிதனை நேசிப்பவராக முன்னேறுவதும் முக்கியம். அடுத்து வரும் தலைமுறை தேவையில்லாத உணர்ச்சி பின்னலில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுவதை நாம் சுலபமாக கடந்து சென்று விட முடியாது.
பலரும் திருமண வாழ்க்கை என்றால் என்ன, குடும்ப அமைப்பு என்றால் என்ன என்பது தெரியாமலேயே அந்த வாழ்க்கைக்குள் நுழைகின்றனர். ஆனால் அதில் தங்கள் மீது வந்து விழும் பொறுப்புகள், எதிர்பார்ப்புகளை சந்திக்க முடியாமல், வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் பல மனிதர்கள் துவண்டு போய், இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று சொல்ல யாரும் இல்லாமல் பல வருடங்களை வீணாக்குகின்றனர். இது அடுத்த தலைமுறையினர் மீது நீங்கா வடுவாக இடம்பெறுகிறது.
திருமணத்திற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம், இவ்வளவு நாள் நாம் வாழ்ந்த வாழ்க்கை, திருமண வாழ்க்கை இரண்டும் வேறு என்பது. போகப் போக சரியாகிவிடும் என்று சொல்வது மிகவும் தவறான ஆலோசனை. சலிப்புத்தன்மை எல்லோருக்கும் ஒரே விஷயத்தில் ஒரே மாதிரி இருக்காது. உதாரணத்திற்கு சிலருக்கு வேலை செய்வதை விட, குழந்தைகளை தங்களின் முழு கண்காணிப்பில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
சிலர் குழந்தைகள் மேல் அன்பிருந்தாலும், தங்களுக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், அதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இது அவரவரின் தனிப்பட்ட முடிவு. மற்றவர்கள் குறை சொல்ல முடியாது. ஆனால் வேலையும் சம்பாத்தியமும் இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு பெண்ணை, திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லக் கூடாது என்று வற்புறுத்தும் போது பிரச்சனை உருவாகிறது.
அதனால் ஆண்களும் சரி, பெண்களும் சரி, தங்களுக்கு எந்த மாதிரியான துணை வேண்டும் என்று அவர்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். தங்களுக்கு என்று வரையப்பட்டு இருக்கும் கோட்பாடுகளை வரப் போகும் வாழ்க்கை துணையிடம் எடுத்துக் கூறி அவர்களின் விருப்பங்களையும் தெரிந்து கொண்டு, பிறகு திருமண வாழ்க்கையில் இணைவது குறித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த விஷயங்களை எல்லாம் திருமணத்திற்கு முன்னரே ஆலோசித்தால் தான், இந்த சமூகம் வகுக்கும் கட்டமைப்புகளை தாண்டி, நீங்கள் இருவரும் உங்களின் தேவை என்ன என்பதில் தெளிவாக இருந்து முடிவுகளை எடுக்க முடியும். ஒருவர் உண்மையிலேயே மிகவும் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகள் உங்களுக்கு பொருந்துமா என்பதை முடிவு செய்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள புத்தகங்கள், அனுபவசாலிகள், முறையாக பயின்ற ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியுடன் வாழ்க்கையை கொஞ்சம் சுலபமாக வாழலாம்” என்கிறார் இலா.