10 நிமிடத்தில் சிறுதானிய உணவுகளை சமைக்கலாம்!(மகளிர் பக்கம்)
‘நம்முடைய பாரம்பரிய உணவிற்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட டிமாண்ட் உண்டு. ஆனாலும் மக்கள் துரித உணவகத்தைதான் தேடிப் போறாங்க. அந்த மோகத்தை குறைக்க நம்முடைய பாரம்பரிய உணவினை எளிதில் சமைக்கக்கூடிய ரெடிமேட் உணவுப் பொருளாக மாற்றினால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்’’ என்கிறார் மெய்தமிழ்
நேச்சுரல்ஸ் உணவு அங்காடியின் நிறுவனர் சுபா மோகன்.
‘‘நான் சென்னைவாசி. எம்.ஏ முடிச்சிட்டு ஒரு தனியார் கல்லூரியில் அசிஸ்டன்ட் பேராசிரியராக வேலை பார்த்து வந்தேன். அதன் பிறகு திருமணமானதால், என்னால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. என் கணவர் ஊடகத்துறையில் வேலை பார்த்து வருவதால், ஏதாவது ஒரு தொழில் செய்யலாம்ன்னு சொல்ல… எனக்கும் அது சரின்னு பட்டது. இப்போது, பல பெண்கள் சொந்தமா பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதையே நாமும் செய்யாமல் புதிதாக செய்ய திட்டமிட்டேன். மேலும் அன்றாடம் மக்களுக்கு தேவைப்படும் பொருளாக இருக்கணும்ன்னு சிந்தித்தேன். அப்படி தேவைப்படும் பொருள் என்றால் அது உணவுப் பொருள் என்பதால் அதில் என் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன். குறிப்பாக நான் கொடுக்கும் உணவின் தரம் மிகவும் உயர்தரமாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமா இருந்தேன்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உணவுக்கான தேவை பல மடங்காக உள்ளது. அதனால் முதலில் ஓட்ஸ் கொண்டு புதுமையான உணவுகளை வழங்கலாம்ன்னு சில ஆய்வுகளை மேற்கொண்டோம். ஆனால் ஓட்ஸ் குறித்து பல உணவுகள் இருப்பதால், அது வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். அந்த சமயத்தில் தான் சிறு தானிய உணவுகள் குறித்த யோசனை ஏற்பட்டது. சிறு தானியங்கள் நம்முடைய பாரம்பரிய உணவுமட்டுமில்லாமல், எல்லா நேரங்களிலும் விளையக்கூடிய உணவு.
அதனால் சிறு தானிய உணவு பொருட்களைக் கொண்டு ஒரு தொழில் பண்ணலான்னு முடிவு பண்ணோம். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அது குறித்து நமக்கு அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு சிறுதானியம் அதன் தன்மை, எவ்வாறு சமைக்கலாம், அதன் பலன் என்பது குறித்து நிறைய படிச்சேன். ஆனால் நான் படிச்ச செய்திகள் எனக்கு பெரிய அளவில் விவரங்களை தரவில்லை. மேலும் என் கணவர் ஊடகத்துறையில் இருப்பதால், அவர் மூலமாக நேரடியாக அதை விளைவிக்கும் விவசாயிகள், வேளாண் துறை பேராசிரியர்கள், சிறுதானியங்களை விற்பனை செய்யும் நிறுவனங்க மற்றும் உணவு துறை சார்ந்தவர்களை சந்தித்து பேசினேன்.
அதில் கிட்டத்தட்ட 65 நிறுவனங்கள் சிறு தானிய உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறார்கள் என்பதை கண்டறிந்தேன். அவர்களிடம் இந்த தொழிலில் உள்ள நிறை குறைகளையும் கேட்டு தெரிந்துக் கொண்டேன். பொதுவாக இந்த உணவுகள் எல்லாம் அப்படியே பேக்கெட்டில் பேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் என்ன மாற்று செய்து கொடுக்கலாம்ன்னு யோசிச்சேன். சிறுதானிய உணவுகளை ரெடிமேட் வகையில் கொடுக்க திட்டமிட்டேன். காரணம் இது போல் யாரும் தற்போது தருவதில்லை. மேலும் மக்களின் விருப்பமும் இதுவாக இருக்கும்ன்னு நினைச்சேன்.
காரணம் இப்போது பெண்களும் வேலைக்கு செல்வதால், வேலைக் கலைப்பில் வீட்டிற்கு வரும் போது உடனடி தயாரிக்கக்கூடிய உணவினை தான் விரும்புகிறார்கள். இல்லை என்றால் மற்ற உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் எப்போதும் சமையல் அறையில் தங்களின் நேரத்தினை செலவு செய்ய விரும்புவதில்லை. இன்று சென்னையில அதிகமான உணவகங்கள் பெருகி இருக்க இது ஒரு முக்கிய காரணம்.
இவ்வளவு கடைகள் இருந்தும் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகள் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதையெல்லாம் யோசிச்சு தான் சிறு தானிய உணவு வகைகள்ல ரெடிமேட்டா உடனே செய்யக்கூடிய உணவுகள தயார் பண்ணலாம்னு முடிவு செய்தேன். இது பெரிய ஒரு வேலை தான் இருந்தாலும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கொடுத்த திருப்தி ஏற்படும். அதை மனதில் கொண்டு துணிஞ்சு இறங்கினேன்’’ என்றவர் அதற்கு தன்னை எவ்வாறு தயார் செய்து கொண்டார் என்பதை விவரித்தார்.
‘‘சிறுதானியங்கள் அரைக்கவும் அதற்கான உணவு தயாரிக்கவும் சில அரைவு இயந்திரங்கள் தேவை என்பதால் முதலில் அதை வாங்கினோம். ஒரு ெதாழில் துவங்கும் முன் அதற்கான செலவு அதிகமானதால், பலரும் என் கணவருக்கு அட்வைஸ் கொடுத்தாங்க. ஆனால் எனக்கு கண்டிப்பா என்னுடைய பிசினஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்ன்னு நம்பிக்கை இருந்தது. அதன் முதல் கட்டமாக இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை வாங்கினோம்.
அதன் பிறகு ஒவ்வொரு ரெடிமேட் உணவுகளை தயாரிக்க ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட ஒரு வருட கடின உழைப்பு அதற்காக தேவைப்பட்டது. காரணம் ஒரு உணவினை ரெடிமேடாக சமைக்கும் போது சரியான பதம் வரவேண்டும். அதனால் முதலில் நாங்க அதை சமைத்து பார்த்து அதன் பிறகு தான் அதை மார்க்கெட் செய்தோம். மேலும் பல கட்ட சோதனைகள் செய்யப்பட்டு உணவு சம்பந்தமா சான்றிதழ் பெற்று முறையாக ஆரம்பித்தோம்.
சிறு தானியங்களான நாட்டு கம்பு முருங்கை கீரை தோசை மிக்ஸ், சாமை அரிசி நெய் முந்திரி பொங்கல் மிக்ஸ், கேழ்வரகு ரவா தோசை மிக்ஸ், சிறுதானிய சத்து மாவு கஞ்சி மிக்ஸ், தினை அரிசி பாசிபருப்பு பாயசம் மிக்ஸ், குதிரை வாலி பெசரட்டு தோசை மிக்ஸ், முளைக்கட்டிய கேழ்வரகு கஞ்சி மிக்ஸ், கருப்பு கவுனி அரிசி சிறுதானிய சப்பாத்தி மிக்ஸ், சிறுதானிய பருப்பு முறுகல் தோசை மிக்ஸ்… என பல வகைகளில் தோசை மாவு, சப்பாத்தி மாவு, என சிறு தானிய உணவு வகைகள்ல தயார் செஞ்சு விற்பனைக்கு ரெடி பண்ணோம்.
நூடுல்ஸ் எப்படி 10 நிமிடத்தில் செய்வோமே அதே மாதிரி சிறு தானிய உணவு வகைகளையும் பத்தே நிமிடத்தில் சமைத்திடலாம். கஞ்சிக்கு மட்டும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொடுத்து விடுவோம். தோசை மாவுகளில் அனைத்தும் சேர்க்கப்பட்டு வரும். உப்பு மட்டும் சேர்த்து சமைக்க வேண்டும். உணவு பொருட்கள் தயாரானதும், எங்க உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து சாப்பிட சொன்னோம். ரெஸ்பான்ஸ் நல்லாவே இருந்தது. அடுத்து பேக்கிங். அதையும் மக்களை கவரும் வகையில் செய்தோம். கடைசியாக மிகவும் முக்கியமானது பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது. என் கணவரின் நண்பர்கள் சமையல் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிட்டு இருந்தாங்க.
சிலர் குக்கிங் சம்பந்தமான யூடியூப் சேனல்ஸ் நடத்திட்டு இருந்தாங்க. அவங்க எங்களின் உணவு பொருட்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சி செய்துக் கொடுத்தாங்க. நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போது வெளியூர் மட்டுமில்லாமல் வெளிநாட்டிற்கும் இந்த ரெடிமேட் மிக்சினை அனுப்பி வைக்கிறோம். மக்கள் நம் பாரம்பரிய உணவினை மறக்கவில்லை. காலத்திற்கு ஏற்ப அதை எளிதாக மாற்றி கொடுத்தால் கண்டிப்பாக மக்களும் தங்களின் ஆதரவினை தருவார்கள். அதுதான் எங்களின் வெற்றிக்கு காரணம்’’ என்றார் சுபா மோகன்.