X க்ளினிக்…சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:13 Minute, 45 Second

ஒரு வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அங்கு மூன்று வயதுக் குழந்தை ஒருவன் துறுதுறுவென விளையாண்டுகொண்டிருந்தான். குழந்தையைப் பார்த்த உறவினர்கள் அதன் அழகில் மயங்கி கொஞ்சினார்கள். திடீரென குழந்தை ஓர் ஓரமாய் போய் அமர்ந்து தன் பிறப்புறுப்பைக் கையில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். உறவினர்கள் பரிகாசமாகவும் அசெளகர்யமாகவும் சிரிக்கிறார்கள். குழந்தையின் தாய் தந்தைக்கோ அவமானமாகப் போய்விட்டது. “ஏய் என்ன இது கெட்ட பழக்கம். நிறுத்து” என அப்போதே மிரட்டினார்கள். விருந்தினர்கள் சென்ற பின்பு குழந்தையின் பாட்டி பெற்றோரிடம் ”குழந்தையை இப்படியா இங்கிதம் தெரியாமல் இல்லாமல் வளர்ப்பதுது” என்று திட்டினார்கள்.

இந்தக் குழந்தை செய்தது தவறுதானே டாக்டர் என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆனால், இதை மருத்துவ உலகம் வேறு மாதிரி நோக்குகிறது. அந்த வயதில் அக்குழந்தை அப்படிச் செய்வது இயல்புதான். நாம் அதனைப் புரிந்துகொண்டு அதனை நல்வழிப்படுத்துவதுதான் முறை. அதாவது, பொது இடத்தில் இப்படிச் செய்யக் கூடாது என அக்குழந்தைக்குச் சொல்லித் தரலாம். அதைவிடுத்து அப்படிச் செய்வதே தவறு என்று சொல்லும்போது குழந்தைப் பருவத்திலேயே பாலுறுப்பு மீதும் பாலியல் மீதும் ஒரு விலக்கமும் பாவம் என்ற குற்றவுணர்வு எண்ணமும் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இது பின்னாட்களில் தாம்பத்யத்தில் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

சரி, குழந்தை ஏன் அப்படிச் செய்கிறது. குழந்தைகளுக்கு பாலுணர்வு உண்டா? அதை எப்படிப் புரிந்துகொள்வது. சில வருடங்களுக்கு முன்பு நான் குழந்தைகளின் பாலுணர்வு தொடர்பாய் பேசத் தொடங்கியபோது அதை சிலர் விமர்சித்தார்கள். குழந்தைகளுக்கு பாலுணர்வு எல்லாம் இருக்காது என்று சொன்னார்கள். ஆனால், நவீன மருத்துவம் இதனை வேறு விதமாகப் பார்க்கிறது. உளப்பகுப்பியலின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் ஃப்ராய்டு இதைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார். “நான் குழந்தைகளின் பாலியலைப் பற்றிப் பேசவில்லை. மாறாக, பாலியலின் குழந்தைப் பருவத்தைப் பற்றிப் பேசுகிறேன்” என்கிறார்.

குழந்தைகளின் பாலுணர்வில் ஐந்து நிலைகள் இருப்பதாக ஃப்ராய்டு குறிப்பிடுகிறார். வாயுணர்ச்சி (Oral), குதவுணர்ச்சி (Anal), பாலுறுப்புணர்ச்சி (Phallic), பிற்பகுதி (Latent), பாலுணர்ச்சி (Genital) என ஐந்து நிலைகள் இருப்பதாகச் சொல்கிறார். இவை என்னென்ன என்று விரிவாகப் பார்ப்போம்.

வாயுணர்ச்சி (Oral): குழந்தை பிறந்தது முதல் ஒரு வயது வரை குழந்தையின் விழைவு என்பது தாய்ப்பாலுக் கானதாகவே இருக்கும். பாலை உறிஞ்சிக் குடிப்பதில் ஒருவித சுகவுணர்வைக் கண்டடைகிறது. மேலும், தாய்ப் பால் என்றில்லை எல்லா பொருட்களையும் ருசியின் வழியாகவே புரிந்துகொள்ள முயலும். அதனால்தான் இந்தக் காலக்கட்டத்தில் எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட முயலும். அது அப்பொருளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சிதான். இந்த நிலையில் குழந்தைக்கு இருப்பது பாலுணர்வே அல்ல. அது வாயுணர்வு அல்லது ருசியுணர்வுதான். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு குழந்தையிடம் தான் என்ற அகம் (Ego) உருவாகிறது என்கிறார் ஃப்ராய்டு.

குதவுணர்ச்சி (Anal): பொதுவாக, இரண்டு முதல் மூன்று வயது வரை குழந்தைகள் இந்தக் கட்டத்தில் இருப்பார்கள். அதாவது, மலம் கழிக்கும்போது அதனை விடுவது மற்றும் வெளியே வர விடாமல் பிடித்துக்கொள்வதுமான செயல்கள் வழியாக ஒரு விளையாட்டையும் ஒரு சுகமான அவஸ்தை மற்றும் சுகத்தையும் கண்டறிவார்கள். இந்தப் பருவம்தான் குதவுணர்வுக் காலகட்டம். உறுப்புணர்ச்சி (Phallic): மூன்று வயது முதல் இந்தக் கட்டம் தொடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் சிறுவர்கள், சிறுமிகள் இருவருக்குமே பாலுறுப்புகள் மேல் ஆர்வம் உருவாகிறது. ஃப்ராய்டு குறிப்பாக ஆணுறுப்பு மேல் இரு பாலருக்குமே ஆர்வம் உருவாகிறது என்கிறார். “நமக்கு ஏன் இப்படி இருக்கிறது.

நம் தங்கைக்கு, அக்காவுக்கு வேறு மாதிரி இருக்கிறது?” என்ற சந்தேகம் ஆண் குழந்தைக்கு உருவாகிறது. ஏதாவது தவறு செய்தால் இதை வெட்டி விடுவார்கள் என்று அக்குழந்தை அஞ்சும். இதனை குறியறுத்தல் பயம் (Castration Fear) என்று சொல்கிறார்கள். அதே சமயம், பெண் குழந்தைகளுக்கு தங்களுக்கு ஏன் ஆண் குழந்தைகள் போல் ஆணுறுப்பு இல்லை என்று தோன்றும். ஃப்ராய்டு இதனை ஆணுறுப்புப் பொறாமை (Penis Envy) என்கிறார். பெண் குழந்தைகள் தாங்கள் ஏதோ தவறு செய்ததால்தான் ஏற்கெனவே உறுப்பறுக்கப்பட்டிருக்கிறோம் என்றும் இவ்வயதில் நினைக்கிறது.

இந்தக் காலக்கட்டதில் பாலுறுப்பு தொடர்பாகவும் பாலியல் தொடர்பாகவும் பலவிதமான கேள்விகளும் குழப்பங்களும் குழந்தைகளுக்கு உருவாகின்றன. இவை பின்னாட்களில் சில குழந்தைகளின் உளவியலில் ஆழமான தாக்கத்தை உருவாக்கி அவர்களின் பாலியல் வாழ்வையே கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. அவற்றில் மருத்துவ உலகம், குறிப்பாக, உளவியல் குறிப்பிடும் இரு விஷயங்கள் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ், எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்.

இவ்விரண்டு கலைச் சொற்களுமே கிரேக்கப் புராணத்தின் தொன்மங்களோடு தொடர்புடையவை. ஈடிபஸ் என்றொரு அரசன் தன் அம்மாவை விவரம் தெரியாமல் மணந்துகொண்டதால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகி அழிவான். அதே போல் எலெக்ட்ரா என்ற புராண பாத்திரம் தன் அப்பாவோடு உறவு கொண்டதால் சிக்கலுக்கு ஆளாகும். இவ்விரு தொன்மங்களையும் எடுத்துக் கொண்டு, ஃப்ராய்டு நவீன உளப் பகுப்பாய்வின் அடிப்படையில் பாலியல் சிக்கல்களை அலசுகிறார்.

பேலியக் காலக்கட்டத்தில் எல்லா குழந்தைகளுக்குமே அவரவர் எதிர்பாலின பெற்றோர் மீது ஈர்ப்பு உருவாகும். ஆண் குழந்தைகள் என்றால் அம்மா மீதும், பெண் குழந்தைகள் என்றால் அப்பா மீதும் நாட்டம் உருவாகும். பிறகு அந்தக் காலக்கட்டத்தைக் கடக்கும்போது, இயல்பாக அதனை மறந்துவிட்டு, அடுத்த காலக் கட்டத்துக்கான மனநிலைக்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், சில குழந்தைகளுக்கு இது முறையாக உளவியல் வளர்ச்சி நிலை அடையாது.

அவர்கள் வளர்ந்த பிறகும் ஆழ்மனதில் இந்தப் பாலியல் வேட்கையும் மேல் மனதில் இது குறித்த ஆழமான குற்றவுணர்வும் கொண்டிருப்பார்கள்.   இவர்களுக்குத் திருமணம் ஆனால் மனைவியோடு இணை சேர முடியாமல் தவிப்பார்கள். உதாரணமாக, ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் உள்ள ஆணுக்கு தன் மனைவியைப் பார்த்தால், தாயின் நினைவு வரும். உடனே, அவன் ஆழமான குற்றவுணர்வுக்கு ஆளாகி, அவளோடு தாம்பத்யம் கொள்ள இயலாத மன அமைப்பு உருவாகும். இதேதான் எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ் உள்ள பெண்களுக்கும் நிகழும்.

எனவே, பாலியலில் ஒருவர் விருப்பம் இல்லாது இருந்தால், அவருக்கு இப்படியான உளவியல் சிக்கல்கள் உண்டா என்பதை முறையான மருத்துவக் கவுன்சலிங் மற்றும் பரிசோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும். அப்படி இருந்தால் அதற்கான காக்னெட்டிவ் தெரப்பி தர வேண்டியது இருக்கும்.பிற்பட்ட நிலை (Latency): இந்த நிலையில் குழந்தைகள் எந்தவித பாலியல் நினைவுகளும் இன்றி, பால் பேதமின்றி ஒருவரோடு ஒருவர் விளையாடுவார்கள். நல்ல நண்பர்களாக நன்றாகப் பழகுவார்கள். பொதுவாக, ஐந்து வயது முதல் பத்து வயது வரை இந்த நிலை நீடிக்கும்.

பாலுணர்ச்சி: பத்து முதல் பதிமூன்று வயதில் இந்தப் பருவம் தொடங்கிவிடுகிறது. வளர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கு இருப்பதைப் போன்ற இயல்பான பாலியல் விழைவு இந்தக் காலக்கட்டத்தில்தான் குழந்தைகளுக்கு உருவாகிறது. இந்த விழைவின் மீது சமூகம் உருவாக்கும் பாலியல் தொடர்பான நம்பிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகின்றன.குழந்தைகளின் பாலுணர்வை நாம் புரிந்துகொண்டாலே அவர்களை நல்வழிப்படுத்த இயலும். மேலே முதல் பத்தியில் சொன்ன கதையில் வருவது போல் ஒரு குழந்தை நடந்துகொண்டால், அவனிடம் இணக்கமாகச் சொல்லி புரியவைப்பதுதான் நல்லது. இல்லாவிடில் எதிர்காலத்தில் அந்தக் குழந்தைதான் பாலியல் தொடர்பான தவறான புரிதலில் கஷ்டப்படுவான்.

தொகுப்பு : கலை வளரும்

குழந்தைகளின் பாலியல் விழைவு காலங்கள்

0-18 மாதங்கள்: இந்தக் காலக்கட்டத்தில் தன்னுடைய பாலுறுப்பை ஒரு குழந்தை அறிந்துகொள்கிறது. ஆனால், அது ஜனன உறுப்பு என்பது தெரியாது. தன்னுடைய கை, கால், விரல்கள் போல் அதுவும் தன் உடலின் ஒரு பகுதி என்பது வரைப் புரிந்துவைத்திருக்கும்.18 மாதங்கள் – 3 வயது: பாலுறுப்புகள் சுகத்தைக் கொடுக்கக்கூடியவை என்பதை இந்த வயதில் கண்டுபிடித்துவிடும். எனவே, அதனைத் தொட்டும் தடவியும் பிடித்து விட்டும் நசுக்கியும் விளையாடத் தொடங்கும்.

அதேபோல் ஆண் பெண் பால் பேதமும் இப்போதுதான் உருவாகும்.3-5 வயது: இந்த வயதில் பால் பாகுபாடு பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருக்கும். சில குழந்தைகளுக்கு இடையே பாலியல் விளையாட்டு இருக்கும். (அம்மா அப்பா விளையாட்டு) இந்தக் கட்டத்தில் பாலியல் பற்றிய குறுகுறுப்பு உருவாகும்.5-7 வயது: பாலுறுப்பைப் பொதுவெளியில் குறிப்பாக எதிர்பாலினத்தவரிடம் காட்டுவதில் ஒரு நாட்டம் உருவாகும்.

அதே சமயம் பாலியலைவிடவும் மற்ற விஷயங்களில் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். 8-11 வயது: சக பாலினத்தவரிடம் பாலியல் சம்பந்தமான நகைச்சுவைகளை, ரகசியங்களை, வதந்திகளைப் பகிர்ந்துகொள்வதில் நாட்டம் உருவாகும். பாலுறுப்பு தொடர்பான வசைச் சொற்களைப் பேசுவதிலும் கேட்பதிலும் ஒருவித குறுகுறுப்பு உருவாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!(அவ்வப்போது கிளாமர்)
Next post சாக்லெட்டில் தஞ்சாவூர் பெரிய கோவில்!(மகளிர் பக்கம்)