வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!(மருத்துவம்)
வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு, கற்பூரவள்ளி என மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடிகள் அணிவகுக்கும்.
இவையெல்லாம் முன்பு இருந்த வீடுகளின் அமைப்பு. தற்போது நிலைமையே தலைகீழ். புறாக்கூண்டு அமைப்பில் வீடுகள் மாறிவிட்டன. இந்த நிலையில் மேலே சொன்ன மாதிரி செடி, கொடிகளை எங்கே, எப்படி, வளர்ப்பது? என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எங்களுக்குக் கேட்காமல் இல்லை. அதற்காகவே வீடுகளில் வளர்க்கக்கூடிய மூலிகைகள் பற்றியும், அவற்றின் மருத்துவப் பயன்கள் குறித்தும் சித்த மருத்துவர் சேகர் விவரிக்கிறார்.கற்றாழையின் சதைப்பகுதியை 10 கிராம் அளவுக்கு சுத்தம் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.
* செம்பருத்தி
வீட்டுத்தோட்டத்தில் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய மூலிகைகளில் செம்பருத்திக்கு என்றும் முதன்மையான இடம் உண்டு. பார்ப்பவர் மனதைத் தனது வசீகர அழகால் சுண்டி இழுக்கும் தன்மை கொண்ட இந்தச் செடி Hibiscus rosa-Sinensis என்ற தாவரவியல் பெயரால் குறிப்பிடப்படுகிறது. தன்னகத்தே எண்ணற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. நம்முடைய சிரசு தொடங்கி, அடிப்பாதம் வரை பாதுகாக்க வல்ல இச்செடியின் மருத்துவப் பயன்களில் இரண்டினை மட்டும் உதாரணத்துக்குக் காண்போம்.
* நமது உடல் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல், நூறு சதவீதம் ஆரோக்கியத்துடன் திகழ்வதற்கு ரத்த ஓட்டம் தடையில்லாமல் இருப்பது அவசியம். அதற்கு இந்த தாவரத்தின் பூக்கள் உறுதுணையாக இருக்கின்றன. ஐந்து செம்பருத்தி மலர்களை, சுத்தமான 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை நான்கில் ஒரு பங்காக சுண்ட செய்து, காலை மாலை என இரண்டு வேளையும் அருந்தி வர, குருதியோட்டம் குறைவின்றி நடைபெறும்.
* ஐந்து செம்பருத்தி பூக்களை 50 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, நன்றாக ஊற விடவும். அதன் பின்னர், இளஞ்சூடாகும் வரை அதனை கொதிக்க விடவும். தினமும் இந்த எண்ணெயைத் தலைமுடியில் தேய்த்து வர, கறுகறுவென அடர்த்தியாக வளரும்.
கீழாநெல்லி
நமது பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில், மஞ்சள் காமாலை(Jaundice) நோயை முற்றிலும் குணப்படுத்தும் அரிய மருந்தாக இந்த மூலிகை பயன்படுத்தப்படுகின்றது. இதன் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் சேர்த்து வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்(நெல்லிக்காய் அளவு) மஞ்சள் காமாலை வந்த சுவடு தெரியாமல் குணமாகும்.
அதேபோன்று கீழாநெல்லி இலையை சுத்தமான பசும்பாலுடன் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு 3 நாட்கள் தொடர்ந்து உண்ண பித்தம் நீங்கும். அறிந்தும், அறியப்படாமலும் உள்ள கீழாநெல்லியின் தாவரவியல் பெயர் Phyllanthus Amarus என்பதாகும்.
கற்பூரவள்ளி
வீடுகளில் சின்னச்சின்ன தொட்டிகளில் வளர்க்க ஏதுவானது இந்த மூலிகை. Coleus aromaticus என்ற தாவரவியல் பெயரால் குறிக்கப்படுகிறது. இவற்றின் இலைகளை நீராவியில் வேகவைத்து,
அதில் இருந்து வெளிவரும் சாற்றை 5 மில்லி லிட்டர் அளவிற்கு குடித்து வர, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் மார்புசளி நீங்கும். மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளின் மார்பில் கற்பூரவள்ளி இலையின் சாற்றை தடவ, உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கற்றாழை
‘கண் திருஷ்டிக்காக வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று கற்றாழை…’ என்பதுதான் பெரும்பாலானோர் எண்ணமாக உள்ளது. இதைக் கடந்து, இம்மூலிகையும் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பது அறியப்படாமலே இருக்கிறது. Aloe Barbadensis என தாவரவியலில் அழைக்கப்படும் இத்தாவரம், உடற்சூட்டைக் குறைத்து தூக்கமின்மையைச் சரி செய்ய வல்லது.
கற்றாழையின் சதைப்பகுதியை 10 கிராம் அளவுக்கு சுத்தம் செய்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் சூடு குறையும். சருமநலன் காக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்துக்கும் கற்றாழை பெரிதும் பயன்படும். ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும் குணம் கொண்டது என்பதால் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்ற பழைய பாடல் ஒன்று கற்றாழையின் பெருமை பேசுகிறது. (குமரி என்ற வார்த்தைக்கு பெண் என்பதைப்போலவே கற்றாழை என்ற பொருளும் உண்டு.)
தூதுவளை
எல்லா இடங்களிலும் எளிதில் பயிராகும் ஒரு மூலிகைச் செடி இது. Solanum trilobaotum என்பது தூதுவளையின் தாவரவியல் பெயர். இம்மூலிகையின் இலையுடன் சிறிதளவு நெய் சேர்த்து வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நெஞ்சில் உள்ள கோழை வெளியேறி உடனடி நிவாரணம் கிடைக்கும். மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் திறன் கொண்டது.
துவையலாகவும், குழம்பாகவும் இதன் இலைகளை சமையலுக்குப் பயன்படுத்தலாம். நுண்கிருமிகளை எதிர்க்கிறது என்பதும், நோய் எதிர்ப்பு சக்தியை தூதுவளை அதிகரிக்கிறது என்பதும் அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நொச்சி
‘கொசுவை பக்கத்தில் அண்ட விடாத செடி’ என்ற பெருமை கொண்டது. கொசுக்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடியும் கூட. சுவாசம் தொடர்பான பல நோய்களுக்கும், வலிகளுக்கும் நல்ல நிவாரணமாகப் பயன்படுகிறது. Vitox negundo என்ற தாவரவியல் பெயரால் குறிக்கப்படுகிறது.
நொச்சி இலைகளைத் தலை அடியில் வைத்து உறங்க தலைவலி குணமாகும். இதன் இலைகளை ஆமணக்கு நெய் ஊற்றி வதக்கி, வலிக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்க, சிறிது நேரத்திலேயே வலி மறையும்.
ஆடாதொடை
ஆடு தின்னாத இலை என்கிற அர்த்தத்தில் ‘ஆடு தொடாத இலை’ என்று குறிப்பிடப்படும் செடி இது. வேலியோரங்களில் சாதாரணமாக முளைத்துக் கிடக்கும். Justicia Adhatoda என்கிற தாவரவியல் பெயர் கொண்டது. இலை, வேர், பூ, பட்டை என இச்செடியின் ஒவ்வொரு பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது என்பதால் அரிய வகை மூலிகை என்று பெருமையாகவும் குறிப்பிடுவர்.
இதனுடைய 2 இலைகளை 4 மிளகுடன் சேர்த்து மென்றால் குரல் கமறல் சரியாகும். இனிய குரல் வளத்துக்கு உத்தரவாதம் தரும் மூலிகை என்றும் சொல்லலாம். இந்த இலையின் சாறை தினமும் 5 மில்லி என்கிற அளவில் 6 தடவை குடிக்க, ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருக்கும் இந்த காலத்தில், ரத்தத்தட்டணுக்களை அதிகரிக்கும் இந்த மூலிகையின் முக்கியத்துவமும் பல மடங்கு அதிகரிக்கிறது.
கரிசாலை
கரிசலாங்கண்ணியின் சுருக்கப் பெயர்தான் கரிசாலை. இதனுடைய தாவரவியல் பெயர் Eclipta Prostrota என்பதாகும். இதில் வெள்ளை மஞ்சள் என இரண்டு வகைகள் இருக்கின்றன. அவற்றில் மஞ்சள் கரிசலாங்கண்ணியில்தான் சத்துக்கள் அதிகம்.
இதனுடைய இலையை சாறு எடுத்து, நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூச, முடி நன்றாக கறுத்து வளரும். தெளிவான பார்வைக்கும், கல்லீரலின் நலன் காக்கவும், சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கரிசலாங்கண்ணி பயன்படும் விதம் அபாரமானது.
கருந்துளசி
நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது சளி, மூக்கடைப்பு மற்றும் தலைவலி. Ocimum Sanctum என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இம்மூலிகைச் செடி, மேலே சொல்லப்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
கருந்துளசியின் இலைகளை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, நீராவியில் வேக வைக்கவும். அதில் இருந்து வெளியேறும் சாறை 10 மில்லி என அருந்தி வர, நெஞ்சில் உள்ள கோழை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும்.
ஆவாரை
‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா’ என்பது சித்த மருத்துவத்தில் மிகவும் பிரபலமான பழமொழி. இந்த பழமொழியிலேயே ஆவாரை என்பது ஆயுள் வளர்க்கும் என்ற பெருமை புரிந்துவிடும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூத்துக்குலுங்கும் ஆவாரையின் பயன்களும் அதேபோல் அழகானவை. நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
இத்தகைய சூழலில் நீரிழிவை எதிர்க்கும் மகத்தான வல்லமை கொண்ட ஆவாரம் பூவின் தேவை மிகவும் அத்தியாவசியமானது. இதை பல ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன.Cassia Qnriculat என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இதனுடைய பூக்களை நிழலில் காய வைத்து, அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை என வெறும் வயிற்றில் 2 கிராம் அளவு சாப்பிட்டு வர குன்மம்(Peptic Ulcer) விரைவில் குணமாகும்.
பிரண்டை
பிரண்டையின் மருத்துவ குணங்கள் அறிந்த நம் முன்னோர்கள், அதனை சட்னியாக செய்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தனர். இவ்வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் பலரிடம் உண்டு. இது பலரும் அறிந்த மூலிகைகளில் ஒன்றும் கூட. Cissus quadrangularis என்பது இதன் தாவரவியல் பெயர். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த செடியின் தோலைச் சீவிவிட்டு, உள்ளே காணப்படும் சதைப்பகுதியுடன் தேவையான அளவு புளி சேர்த்து வேக வைக்கவும்.
இந்தக் கலவையை வாரத்தில் இரண்டு தடவை சாப்பிட்டு வர எலும்புகள் வலிமை பெறும். நாக்கின் சுவையின்மை நீங்கும். அன்றாட உணவில் இம்மூலிகையைச் சேர்த்துக்கொண்டால், பல்வேறு பிணிகளால் நலிவுற்ற உடல் இழந்த ஆற்றலை மீண்டும் பெறும். நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் விஸ்வரூபமெடுத்து வரும் சூழலில் ஆவாரம் பூவின் தேவை மிகவும் அத்தியாவசியமானது.
பவழமல்லி
இரவில் மலர்ந்து மணம் பரப்பும் மலர் இது. குளிர்காலத்தில் இம்மலரை அதிகம் பார்க்கலாம். இம்மூலிகையின் தாவரவியல் பெயர் Nyctranthes arlortrishs என்பதாகும். பாரிஜாதம் என்ற பெயராலும் குறிப்பிடப்படும் இந்த மலர், தேவலோகத்தில் இருந்து கிருஷ்ணரால் வரவழைக்கப்பட்டது என்ற புராணக்கதைகள் உண்டு.
இதன் இலையைச் சாறாகப் பிழிந்து 5 மில்லி கிராம் என காலை, முற்பகல், மதியம், பிற்பகல், மாலை, இரவு என்று 6 வேளை அருந்தி வந்தால் ரத்த தட்டணுக்கள் குறைபாடு நீங்கும். வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்!டெங்கு காய்ச்சலால் ஏற்படும் ரத்தத்தட்டணுக்கள் இழப்பை சரி செய்யும் திறன் ஆடாதொடை இலைக்கு உண்டு.
நிலவேம்பு
டெங்கு, பன்றிக்காய்ச்சல் என பல காய்ச்சல்கள் வந்தபோது அலோபதி மருத்துவமே குழம்பி நின்றது. அந்த இக்கட்டான சூழலில் பலருக்கும் நம்பிக்கை தந்து பிரபலமானதே நிலவேம்பு. இப்போது வரையிலும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான மிகச்சிறந்த மருந்தாக இதன் கஷாயம் அரசாங்கத்தாலே கொடுக்கப்பட்டு வருகிறது என்றால் இதன் அவசியம் எல்லோருக்கும் புரியும்.
Andrographis Panioulata என்ற தாவரவியல் பெயரால் குறிக்கப்படுகிறது நிலவேம்பு. இம்மூலிகைகளின் இலைகளை நிழலில் உலர்த்தி, வெந்நீரில் ஊற வைத்து தினமும் 2 கிராம் காலை மற்றும் மாலையில் உண்டு வந்தால் உடல் வலி குணமாகும். கொசுக்களால் புதிய காய்ச்சல்கள் அதிகரித்து வரும் காலத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடியும் கூட!