நல்லாசிரியர் விருதை முதல்வரின் கரங்களில் பெற்றேன்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 42 Second

மொத்தமாக 37 ஆண்டுகளை சிறப்புக் குழந்தைகளோடு செலவழித்திருக்கிறேன் என நம்மைத் திணறடித்த ஜெயந்தி, பெரும்பாலான நேரங்களும் சிறப்புக் குழந்தைகளைத் தன் மடியில் இருத்தியே, குழந்தைகளோடு குழந்தையாய் காட்சி தருகிறார். அதற்கான அங்கீகாரமாக, தமிழக முதல்வரின் கரங்களால், “சிறப்புக் குழந்தைகளுக்கான நல்லாசிரியர் விருது” சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர்-3 அன்று ஆசிரியர் ஜெயந்திக்கு கிடைத்திருக்கிறது. சென்னையின் சிறந்த 50 பெண்மணிகளில் ஒருவராகவும் தேர்வாகியுள்ள ஜெயந்தியிடம் பேசியபோது…

எனக்கு ஊர் கும்பகோணம். +2 வரை அங்குதான் படிப்பு. சகோதரர்களுக்கு சென்னையில் வேலை கிடைக்க குடும்பத்தோடு சென்னைக்கு மாறினோம். அப்போது எனக்கு வயது 18தான். அடுத்தது நாம் காலேஜ் படிக்கணும். படித்து முடித்து வேலைக்கு போகணும் என்கிற சிந்தனைகள் வராத குழந்தைத்தனமான இயல்பில் வேலைக்கு போக வேண்டும் என்கிற நோக்கம் மட்டும் இருந்தது. பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலை காலியாக இருப்பதாக குடும்ப நண்பர் சொல்ல அம்மாவுடன் பள்ளிக்கு வந்தேன். நான் வந்திருப்பது ஒரு சிறப்புப் பள்ளி. அங்கிருக்கும் குழந்தைகள் சிறப்புக் குழந்தைகள் என்ற புரிதல் கூட எனக்கு அப்போது இல்லை. இருந்தாலும் சென்னை மயிலாப்பூரில்இயங்கிவரும் சிறப்புக் குழந்தைகளுக்கான கிளார்க் பள்ளியில் (Clarke School) பணியில் சேர்ந்தேன். அது 1984ம் வருடம்.

அதன் பிறகுதான் சிறப்புக் குழந்தைகள் குறித்த புரிதலே எனக்குள் வர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை ரசிக்கத் தொடங்கி, என்னையும் அறியாமல் குழந்தைகளிடத்தில் நெருங்க  ஆரம்பித்திருந்தேன். பணியாற்றிக்கொண்டே பள்ளி வளாகத்திற்குள் நடைபெறுகிற பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்று குழந்தைகளோடு நேரம் செலவழித்தேன். பள்ளியில் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான ஓராண்டு பட்டய பயிற்சி இருந்தது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்து நிறைவு செய்ததுடன், அடுத்ததாக  அறிவுசார் குறைபாடு (mentally retarded) குழந்தைகளுக்கான ஓராண்டு பட்டயப் படிப்பையும் அங்கேயே படித்து நிறைவு செய்தேன். தொடர்ச்சியாக சென்னை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.ஸி. சைக்காலஜி, எம்.எஸ்.ஸி. கவுன்சிலிங் சைக்காலஜியும் படித்து முடித்தேன்.

16 வருடங்கள் அறிவுசார் குறைபாடுக் குழந்தைகளுடன் தொடர்ந்து பயணித்ததில், பள்ளியும், குழந்தைகளுமே என் உலகமாகிப் போனார்கள். சிறப்புக் குழந்தைகள் விஷயத்தில் நான் முனைப்போடு செயல்படுவதைக் கவனித்த என் அம்மா, இந்த வேலையே உனக்கு வேண்டாம். விட்டுவிடு என அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார். இந்த நிலையில் எனக்குத் திருமணம் முடிவானது. என்னைப் பார்க்காமல், என் குரலை கேட்காமல் குழந்தைகள் சோர்வடைவதை  என்னால் உணர முடிந்தது. குழந்தைகள் அருகாமையில் இல்லாத விடுமுறை நாட்களில் நான் சோர்வடைய ஆரம்பித்தேன். குழந்தைகள் இல்லா உலகை கற்பனை செய்து பார்க்க என்னால் முடியவில்லை. வாழ்க்கை முழுதும் இந்தக் குழந்தைகளுக்காகவே இருக்க வேண்டும் என்கிற எண்ணமே அதிகமாய் இருந்தது.

2000ம் ஆண்டில் செவித்திறன் குறை தவிர்த்து, deaf blind with multiple disabilities (dbmd) என்கிற ஒரு பிரிவையும் பள்ளியில் தொடங்கியதுடன், குழந்தைகளிடத்தில் நான் காட்டும் அர்ப்பணிப்பு உணர்வை கவனித்த என் பள்ளியின் தாளாளர் அந்த துறையையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை எனக்கு வழங்கினார். இந்தப் பிரிவுக்கு வரும் குழந்தைகளை பாதுகாப்பதும், வழிநடத்துவதும் சுலபமில்லை. அர்ப்பணிப்பு உணர்வும், ஆழ்ந்த அன்பும் இருந்தால் மட்டுமே இவர்களுக்கு ஆசிரியராக சேவை செய்ய முடியும். எனக்கு வழங்கிய பொறுப்பை துணிந்து ஏற்றேன். இப்போது சைன் லாங்வேஜ், விஷுவல் சைன் லாங்வேஜ். பிரைய்லி என 21 வருடமாக இந்தக் குழந்தைகளோடுதான் பயணிக்கிறேன்.

கோவிட் பரவலுக்குப் பிறகான சிறப்புக் குழந்தைகளின் பள்ளி வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது என்றவர், பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் இந்தக் குழந்தைகள் ரொம்பவே பாதிக்கப்பட்டனர். ஆன்லைன் வழியாக அம்மா மடியில் குழந்தையை உட்கார வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் இயக்கத்தைத் தூண்டினோம் என்றவர், எல்லா செயல்பாட்டுக்கும் காரணம் அன்பு ஒன்றுதான். அன்பைத் தாண்டி பெரிதாக வேறொன்றும் இவ்வுலகில் இல்லை.

அன்பினால் முடியாதது எதுவுமே இல்லை என அழுத்தமாகச் சொல்லி புன்னகைக்கிறார்.நான் இந்த பணிக்குள் வந்த இந்த 37 ஆண்டுகளில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு. டெக்னாலஜிகள் வளர்ந்திருக்கு. விளைவு மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் நிறைய பயன்பாட்டில் இருக்கிறது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் இந்தக் குழந்தைகளுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை செய்கிறார்கள் என்கிறார் அனுபவ வார்த்தைகளை உதிர்த்து.

குழந்தைப்பேறு என்பது யார் கைகளிலும் இல்லைதான். ஒருவேளை இப்படியான குழந்தைகள் பிறந்துவிட்டால் மனம் தளர வேண்டாம்  எனப்  பெற்றோருக்கு வேண்டுகோள் வைக்கும் ஜெயந்தி, உங்க குழந்தை மாற்றுத் திறனாளிக் குழந்தையா? முதலில் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நேரத்தை விரையம் செய்யாமல், மருத்துவர் மற்றும் பயிற்சியாளர்களின்(therapist) சரியான அறிவுரையில், முறையான பயிற்சிகளை ஒரே இடத்தில் தொடர்ந்து கொடுக்க ஆரம்பியுங்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவு பண்ணுங்கள் என அறிவுறுத்துகிறார்.

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது அத்தனை சுலபமில்லைதான். ஆனால் இது ஒரு கடல். இந்தக் கடலுக்குள் நீந்திக் கடக்க பொறுமையும், நிதானமும் முக்கியம். கிட்டதட்ட 64 விதமான சின்ட்ரோம்கள் கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில், 30 முதல் 40 விதமான சின்ட்ரோம் உள்ள குழந்தைகளோடு
பழகிவிட்டேன். மிகச் சமீபத்தில் ஹன்டர் சின்ட்ரோம் பாதிப்படைந்த குழந்தைகள் இருவர் மாணவர்களாக என்னிடம் வந்திருக்கிறார்கள்.

சிறப்புக் குழந்தைகளுடனான எனது பங்களிப்பிற்காக  2016ல் எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரியில் டாக்டர் முத்துலெட்சுமி விருது எனக்குக் கிடைத்தது. 36 ஆண்டுகள் கழித்து இப்போது தமிழக முதல்வர் கையால் விருதும் அங்கீகாரமும் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என்றவாறு புன்னகைத்து விடைபெற்றார்.

கிளார்க் ஸ்கூல்

டாக்டர் லீலாவதி பேட்ரிக், அவரது சகோதரர் மற்றும் டாக்டர் நாகராஜன் என மூவரும் இணைந்து ஆரம்பத்தில் காதுகேளாதோருக்கான பள்ளியாக மட்டுமே பதிவாகி 53 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பழமையான பள்ளி இது. நெதர்லாந்து நாட்டில் கிளார்க் (clarke) என்கிற பெயரில் பள்ளி ஒன்று செயல்படுவதால், சென்னை பள்ளிக்கும் அதே பெயர் வைக்கப்பட்டது. இதில் செவித்திறன் குறையுள்ள மாணவர்களுக்கு +2 வரை வகுப்புகள் உள்ளன. தற்போது அனைத்துவித பாதிப்புகளை (dbmd) கொண்ட குழந்தைகளுக்கான பள்ளியாகவும் செயல்படுகிறது. சைன் லாங்வேஜ், பிரெய்லி, பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, சிமுலேஷன் தெரபி என பல்வேறுவிதமான தெரபிகளும் இங்கு இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்!(அவ்வப்போது கிளாமர்)
Next post எனக்கு 130 குழந்தைகள்!(மகளிர் பக்கம்)