கவுன்சலிங் ரூம்!!(மருத்துவம்)

Read Time:8 Minute, 38 Second

என் வயது 43. எனக்கு திடீரென கடந்த சில நாட்களாக நாக்கு வீங்கி உள்ளதைப் போல உணர்கிறேன். மூச்சுவிட சற்று சிரமமாக அசெளகர்யமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பும் இதே போல ஏற்பட்டது. பிறகு, அது தானாகவே சரியாகிவிட்டது. எதனால் இப்படி ஏற்படுகிறது?

  • தீபா சிவராமன், திருவைத்தலம்.

நாக்கு வீங்குவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. சிலர் காலை பல் துலக்கிய பின், நாக்கை வழிக்கும் போது நகங்களால் அழுத்தமாகப் பிராண்டிக் கொள்வார்கள். இதனால் எடீமா (Edema) எனும் உட்புற திரவம் கசியும் பிரச்னை ஏற்பட்டு நாக்கு வீங்கக்கூடும். முதல் நாள் இரவு உண்ட ஆல்கஹால், சோம்பு, சீரகம் போன்ற மசாலா பொருட்கள், புதிய மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களாலும் நாக்கு வீக்கம் ஏற்படும்.

சிலருக்கு, உயர் ரத்த அழுத்தம், இதய செயல் இழப்பு போன்ற தீவிர பிரச்னைகளுக்குத் தரப்படும் ஏஸ் இன்ஹிபிட்டர் (Ace inhibitor) எனப்படும் லிஸினோபிரில் (Lisinopril) போன்றவற்றை எடுத்துக்கொள்வதாலும் நாக்கு வீக்கம் ஏற்படக்கூடும். ஏதாவது உணவால் ஒவ்வாமை பிரச்னை இருந்தாலும் சிலருக்கு நாக்கு வீக்கம் ஏற்படும். இதைத் தவிர, வைட்டமின் பி12 போதாமை இருந்தாலும் குளோசிடிஸ் (Glossitis) எனும் நாக்கு வீக்கப் பிரச்னை அரிதாக சிலருக்கு ஏற்படும்.

ஆனால், இது ஒரே நாளில் திடீரென ஏற்படும் பிரச்னை அல்ல. எனவே, ஒரு பொது மருத்துவரை உடனடியாக அணுகி உங்கள் பிரச்னை, உடல் நலம் போன்றவற்றை முழுமையாக விளக்கி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக, எதனால் இந்தப் பிரச்னை வருகிறது எனக் கண்டறிந்தால், சில எளிய மாத்திரை மருந்துகளாலேயே இதை முழுமையாகக் குணப்படுத்த
முடியும்.

என் வயது 30. கடந்த ஒரு மாத காலமாக தினமும் காலையில் எழுந்ததும் சுமார் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் தலை வலி ஏற்படுகிறது. இடது புருவத்துக்கு மேற்புறம் முதல் இடது தாடைக்கு உட்புறம் பின்னந் தலை வரை வலி இருக்கிறது. எதனால், இப்படி ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?

  • ரமேஷ் சரவணன், இராமநாதபுரம்.

நீங்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு டென்ஷன் தலைவலி உள்ளது என்று தோன்றுகிறது. டென்ஷன் தலைவலி எல்லா வயதினருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் பதின் பருவத்தினருக்கும் இளையோருக்கும் மிக அதிகமாக ஏற்படுகிறது. சிலருக்கு நெற்றி, மேல் தாடை மட்டுயின்றி கழுத்து, தோள்பட்டை வரை கூட வலி பரவும். சிலருக்கு தினசரி என்றில்லாது வாரம்தோறும்கூட வரும். ஒரு நாள் முழுதும் நீடிக்கும். டென்ஷன் தலைவலி என்பது நரம்புகளோடும் மூளையோடும் தொடர்புடையது அல்ல என்று நம்பப்படுகிறது. அது, நெற்றி, மேல்தாடை, கழுத்துப்புறத் தசைகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகிறது.

டென்ஷன் தலைவலிக்கு ஸ்ட்ரெஸ், பதற்றம், கழுத்து மற்றும் தலைக் காயம், கண் பாதிப்பு, பற்கள் பாதிப்பு போன்ற காரணங்களால் ஏற்படக்கூடும். மதுப்பழக்கம், காஃபின் உள்ள உணவுகள், சளி மற்றும் ஃப்ளூ, சைனஸ் பாதிப்பு போன்றவையும் டென்ஷன் தலைவலியை ஏற்படுத்தும். தொடர்ந்து மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் தியானம், உடற்பயிற்சி என மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் இந்தப் பிரச்னையை ஓரளவு கட்டுப்படுத்தலாம். சுய மருத்துவம் செய்யாமல் உடனே, மருத்துவரை அணுகி ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.

எனக்கு அக்குளில் அக்கி எனப்படும் சிறு சிறு கொப்புளங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கிறது. பிறகு, மீண்டும் இது ஏற்படுகிறது. இந்த அக்கி ஏன் ஏற்படுகிறது? இதற்கு நிரந்தரத் தீர்வு உண்டா?

  • நம்பிராஜன், மானாமதுரை.

அக்குளில் ஏற்படும் அக்கியை ஷிங்கில்ஸ் அல்லது ஹெர்பிஸ் ஜோஸ்டர் என அழைப்பார்கள். சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் நரம்பு மண்டல அணுக்களுக்குள் தங்கி சிறிது காலம் கழித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது மறு உயிர்ப்பு பெற்று இந்தப் பிரச்னையை ஏற்படுத்து கின்றன. வைரஸ் கிருமிகள் மறு உயிர்ப்பு பெறும்போது உடலின் ஒரு பகுதியில் மட்டும் வலி போன்ற உணர்வு ஏற்படும்.

முதுகு நரம்புகளில் இருந்து வைரஸ் ஒரு நரம்பு வழியாக வெளிப்படுவதால் இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலி சில நாட்கள் நீடிக்கும். பின்னர், தோலில் சீழுடன் சிறு சிறு கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். தோல் கொப்புளங்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடித்துப்பரவும். இவை சில நாட்களில் காய்ந்து பொருக்குகளாகி உதிரும். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம். இந்தக் கொப்புளங்கள் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை. எனவே, இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்கள் விலகி இருக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் சின்னம்மை மரணத்தையே ஏற்படுத்த வல்லவை. இந்தக் கொப்புளங்களுக்கு ஈரமான குளிர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதற்கு அலுமினியம் அசிடேட் கலவையைப் பயன்படுத்தலாம். கொப்புளங்களை நன்கு கழுவ வேண்டும். அவற்றை கட்டுப்போட்டு மறைக்கக் கூடாது. காலமைன் லோஷன் கிரீம்களைப் பூசலாம். வலி இருக்கிறது என்றால் டாக்டரின் பரிந்துரையின் பேரில் வலி நீக்கும் மாத்திரைகள் மற்றும் களிம்புகளைத் தடவலாம்.

வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துப் பூசுவதாலும் இவை கட்டுப்படுகின்றன. இந்தக் கட்டிகள் முகத்தில் குறிப்பாக கண்களுக்கு அருகே தோன்றினால் உடனே மருத்துவர் உதவியை நாட வேண்டும். கவனிக்காமல் விட்டால் பார்வை இழப்புகூட ஏற்படக்கூடும். வலி நீக்கி மருந்துகள், மனச் சோர்வுக்கான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை கூட தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்குத் தர வேண்டியது இருக்கும். அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிராணனே பிரதானம்!! (மருத்துவம்)
Next post செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!(அவ்வப்போது கிளாமர்)