மாமியாரின் 2வது கணவரால் தொல்லை!! (மகளிர் பக்கம்)
அன்புடன் தோழிக்கு,
எனக்கு வயது 28. கல்லூரி படித்து முடித்ததும் திருமணம் நடந்தது. எனது திருமணம் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம். எங்கள் மாமியார் வீட்டில் 3 பிள்ளைகள். என் கணவர் பெரியவர். அடுத்து 2 பெண்கள். எங்கள் திருமணம் நடப்பதற்கு முன்பு அவரது சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனால் நான் திருமணமாகி சென்ற போது மாமனார், மாமியார் மட்டும்தான் இருந்தனர். என்னை முதலில் பெண் பார்க்க என் மாமனார், மாமியார்தான் வந்தனர். அவர்கள் ஓகே சொன்னப் பிறகுதான் என் கணவர் வந்து பார்த்தார். பெண் பார்ப்பது முதல் திருமணம் வரை எல்லாவற்றிலும் சாங்கியம், சம்பிரதாயங்களை பார்த்தனர். அவர்கள் வீட்டிலும் அப்படித்தான் எல்லாம் முறைப்படி செய்வார்கள்.
அதுமட்டுமல்ல அவர்கள் வீட்டில் எல்லோரும் நெருக்கமாக இருப்பார்கள். அதிலும் எனது மாமனாரும், மாமியாரும் ரொம்ப பிரியமாக இருப்பார்கள். ஆதர்ச தம்பதிகள் என்று சொல்வார்களே அது அவர்களுக்குதான் பொருந்தும். அத்தனை இணக்கமாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மாமனாருக்கு தரகர் தொழில். வீடு, நிலம் வாங்கி விற்கும் தொழிலை பெரியளவில் செய்து வந்ததால் பெரும்பாலும் பயணத்திலேயே இருப்பார்.
வாரம் ஒருமுறை தான் வருவார். பல நேரங்களில் பகலில் வந்து அவசர, அவசரமாக சாப்பிட்டு விட்டு போய் விடுவார். அப்படி வரும் நேரங்களில் அவருக்கு சாப்பாடு போடுவது முதல் எல்லா வேலைகளையும் மாமியார்தான் செய்வார். தண்ணீர் கொடுப்பது கூட அவர்தான். என்னை மட்டுமல்ல, அவரது பெண்களையும் கூட செய்ய அனுமதிக்க மாட்டார். தன் கணவருக்கு பார்த்து, பார்த்து எல்லாவற்றையும் செய்வார்.
இந்நிலையில் எனக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அதற்காக அம்மா வீட்டுக்கு சென்று விட்டு சுமார் 7, 8 மாதங்கள் கழித்து வந்தேன். வந்த சில மாதங்களில் குழந்தைக்கு பிறந்தநாள் வந்தது. அதனால் அதற்கு முன்பு குல தெய்வத்திற்கு படையல், குழந்தைக்கு மொட்டையும் போட்டு சாமி கூம்பிட வேண்டும் என்று மாமியார் சொன்னார்கள்.அதனால் நாங்கள் கணவரின் சொந்த ஊருக்கு சென்றோம். மாமியார், நாத்தனார்கள் ஆகியோருடன் என் பெற்றோரும் வந்திருந்தனர். ஆனால் மாமனார் வரவில்லை. கேட்டதற்கு வேலை விஷயமாக வெளியூர் போயிருக்கிறார், சாமி கும்பிடுவதற்குள் வந்து விடுவார் என்று மாமியார் சொன்னார்.
அந்த ஊரில் சொந்த வீடு இருக்கிறது. அந்த வீட்டில்தான் தங்கினோம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் சொந்தக்காரர்கள் என்று சொன்னார்கள். ஆனால் யாரும் சரியாக பேசவில்லை. அதிலும் என் மாமியாரிடம் யாரும் பேசவேயில்லை. சாமி கும்பிடும் போதும் பங்காளிகளும் வரவில்லை. இத்தனைக்கும் அன்று விடுமுறை நாள்தான். போதாதற்கு கடைசி வரை மாமனார் வரவில்லை. இதெல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. ஊருக்கு வந்த பிறகு ஒருநாள் குழந்தைக்காக, அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது கணவரின் சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு உறவுக்காரர் பெண்மணி அங்கு வந்திருந்தார். அவரிடம் சாதாரணமாக பேசிய போதுதான் அவர் என் கணவரின் சொந்த பெரியம்மா என்று தெரிந்தது.
அதன்பிறகு ஏன் யாரும் கல்யாணத்துக்கு, சாமி கும்பிட வரவில்லை என்று கேட்டேன். தயங்கியவர்… பிறகு சொன்ன விஷயங்கள் எனக்கு ஆச்சர்யமாக மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை. என் மாமனார், அதாவது இப்போது இருக்கும் மாமனார் என் மாமியாரின் 2வது கணவர். கல்யாணமாகி 3 குழந்தைகள் பிறந்த பிறகு இவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மாமியாரின் முதல் கணவர் ஊரை விட்டு போய் விட்டாராம். அதன் பிறகு மாமியாரும், அவரது 2வது கணவருக்கும் வசதியாக போய் விட்டதாம். ஆனால் ஊரில் இருப்பவர்கள் கண்டிக்கவே, பக்கத்தில் இருக்கும் இந்த நகரத்துக்கு வந்து தங்கியுள்ளனர்.
அதற்கு இன்னொரு காரணம் 2வது மாமனாரின் முதல் மனைவியும், பிள்ளைகளும் இதே ஊரில் வசிக்கிறார்கள். அதனால் வந்துப்போக வசதியாக இருக்கும் என்பதால் இந்த முடிவாம். என் கணவர், அவரது தங்கைகளும் சிறிய வயதில் இருந்ததால் என்பதால் அம்மா சொன்னபடி அவரை அப்பா என்று அழைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு நமது அப்பா வேறு ஆள் என்று தெரியும். ஆனால் அக்கம், பக்கத்தினர் சந்தேகப்படுவார்களோ என சங்கடப்பட்டு அம்மா சொல்படி அவரை அப்பா என்று அழைப்பதாக பிறகு ஒருநாள் என் கணவர் சொன்னார். பிரச்னை வந்து தனிக்குடித்தனம் வந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவர், மாமியாரிடமும், பிள்ளைகளிடமும் அன்பாக இருப்பார். என்னிடமும், என் குழந்தையிடமும் நன்றாக நடந்து கொள்வார்.
ஆனால் இந்த விஷயங்கள் தெரிந்த பிறகு அவரிடம் மட்டுமல்ல, என் மாமியாரிடமும் பேச தயக்கமாகி விட்டது. அவர்கள் கேட்டால் மட்டும் பதில் சொல்வேன். என் வீட்டில் விவரங்களை சொன்னதற்கு, ‘குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வது? உன் வீட்டுக்காரர் உன்னிடம் ஒழுங்காக, அன்பாக இருக்கிறானா… அதை மட்டும் பாரு’ என்று சொல்லிவிட்டனர். ஆனால் எனக்குதான் மனம் ஒப்பவில்லை. எனக்கு விவரம் தெரிந்து விட்டது என்று அவர்களும் புரிந்து கொண்டார்கள்.எனக்கு திருமணமாகி இப்போது 7 ஆண்டுகள் ஆகி விட்டன. 2 குழந்தைகள். முதல் பையனை பள்ளியில் சேர்த்திருக்கிறோம். இப்போதும் என் 2வது மாமனார், மாமியார் இருவரிடமும் அவ்வளவாக பேசுவது இல்லை. ‘நாய் வலம் போனால் என்ன இடம் போனால் என்ன நம்மை கடிக்காமல் போனால் போதும்’ என்று எங்களூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
அப்படித்தான் அந்த வீட்டில் நானும் விலகியே இருக்கிறேன்.ஆனால் இப்போது கடிக்க பார்க்கிறது. கொஞ்ச நாட்களாக என் 2வது மாமனாரின் நடவடிக்கைகள் சரியில்லை. அவர் எப்போதும் என் மாமியார் வீட்டில் இருக்கும் போது மட்டும்தான் வருவார். அவர் இல்லாத போது வரவே மாட்டார். வந்தாலும் சாப்பிட்டு விட்டு அவர்களது அறைக்குள் சென்று விடுவார்கள். அரிதாக இரவில் தங்குவார்.இருவரிடமும் செல்போன் இருப்பதால் என் மாமியார் எங்கு இருக்கிறார் என்று கேட்டு தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போதெல்லாம் என் மாமியார் கோவில், ஊருக்கு என்று சென்றிருக்கும் போது வருகிறார். ‘பசிக்கிறது சாப்பாடு போடு’ என்கிறார். எதையாவது விசாரித்துக் கொண்டே இருக்கிறார்.
சில நேரங்கில் நான் உட்கார்ந்து துணி துவைத்துக் கொண்டு இருந்தால் எதிரில் வந்து நின்று கொண்டு பேசுகிறார். எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது. அவர் பேசும் பல விஷயங்களை எழுதக் கூட முடியாது. குறைந்தபட்சமாக சொல்வதென்றால், ‘எதுக்கும் கவலைப்படாதே… நா இருக்கிறேன்… பசங்கள நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறேன். எல்லாத்தையும் பாத்துக்கிறேன்…’ என்கிறார். அவரின் செயல்கள் அதிகமாகவே ஒருமுறை என் கணவரிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘அவர் ரொம்ப நல்லவரு … நீதான் அவர தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கிற’ என்றவர், கூடவே என் மாமியாரிடமும் சொல்லிவிட்டார். மாமியாரோ என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார்.
அவராலதான் இன்னைக்கு நாம கவுரவமாக இருக்கிறோம். உன் வீட்டுக்காரன் சம்பளத்துல குடும்பம் நடத்த முடியுமா? அவரு தங்கமானவரு… முதல் பொண்டாட்டிக்கு மனநிலை சரியில்லை. அதனாலதான் பாவம் எனக்கு வாழ்க்கை தந்தாரு. அத வச்சி அவர தப்பா பேசாதே’ என்று பேசிக் கொண்டே இருந்தார்.போதாதற்கு 2வது மாமனாரிடமும் சொல்லிவிட்டார். அவரோ, ‘நா சத்தியமா அப்படி நினைக்கல… மருமகளா இருந்தாலும் நீ எனக்கு பொண்ணு மாதிரி’ என்று சொல்கிறார். நாத்தனார்களோ, ‘அவரு அப்படி இல்ல அண்ணி… எங்ககிட்ட எல்லாம் எவ்வளோ அன்பா இருப்பார் தெரியுமா’ என்று சிபாரிசுக்கு வருகிறார்கள்.எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த அந்த ஆளு இப்போது மீண்டும் தன் திமிரை காட்ட ஆரம்பித்து விட்டார். மாமியார் இல்லாத நேரங்களில் வந்து ஏடாகூடமாக பேசுகிறார். இப்போது யாரிடம் புகார் செய்வது என்று தெரியவில்லை. கணவரிடம் நாசுக்காக சொன்னாலும் புரிந்து கொள்ளவில்லை. தனிக்குடித்தனம் போக அவர் மீது பழி சொல்கிறாயா என்று திட்டுகிறார்.
மாமியாரின் சில நடவடிக்கைகளை பார்த்தால், அவரின் 2வது கணவரின் செயல்களுக்கு அவரும் உடந்தை என்பது போல் எனக்கு தோன்றுகிறது. தினமும் நரக வாழ்க்கையாகி விட்டது. எங்கள் வீட்டில் சொன்னால் ஏற்கனவே குழந்தை பிறந்து விட்டது என்று சொன்னவர்கள், 2 குழந்தையான பிறகு என்னமா என்று கேட்பார்கள். அதனால் என்ன செய்வது என்று புரியவில்லை. என் கணவருக்கு எப்படி புரிய வைப்பது, மற்றவர்களிடம் அந்த ஆளை எப்படி அம்பலப்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கிறேன். நிம்மதியே இல்லை.
யாராவது வீட்டில் இல்லாத நேரம் என்றால், அந்த ஆளு வந்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. அப்படி வந்தால் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விடுகிறேன். அது ஒன்றுதான் என்னால் செய்ய முடிகிறது. வேறு என்ன செய்வது தோழி, நிம்மதியாக வாழ எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள்?
இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,
நீங்கள் இருப்பது உண்மையில் இக்கட்டான சூழ்நிலைதான். பல பெண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இவற்றை சரியாகவும், எச்சரிக்கையாகவும் கையாள வேண்டும். குடும்பம், குழந்தைகள் என பல்வேறு பிரச்னைகளை பெண்கள் சமாளிக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற விஷயங்களை பெரிதுப் படுத்தாமல் ஒதுங்கிப்போய் விடுகின்றனர். வெளியிலும் சொல்வதில்லை. அப்படி வெளியில் சொல்லாமல் இருப்பது நமது மன ஆரோக்கியத்தைதான் பாதிக்கும்.
அது வஞ்சகர்களுக்கும் வசதியாக போய்விடும். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கும் ஆட்களிடையே வாழ்வது வருத்தமாகவும், கோபமாகவும் இருக்கிறது. நீங்களும் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசுவது, முயற்சிப்பது தவறானது மட்டுமல்ல, மூர்க்கத்தனமானது. இப்படித்தான் பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன.
அதனால் அதை நீங்கள் அனுமதிக்காதீர்கள். இந்த சமூகம் பெண்களுக்கு குறைவான வாய்ப்புகளைதான் தருகிறது.மேலும் நிறைய துன்புறுத்தல் வழக்குகளில் பெண்கள் மீதுதான் குற்றம் சாட்டப்படுகின்றன. தங்கள் பிரச்னைகளை பேச வாய்ப்பு தருவதில்லை. இப்போதுதான் பெண்கள் மெல்ல மெல்ல சமூகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை பேச முனைந்திருப்பதும் அந்த வளர்ச்சியின் ஒரு அங்கம்தான். எனினும், இது ஒரு கொடுமையான சூழல். ஏனெனில் உங்கள் 2வது மாமனார் என்று சொல்லப்படும் அந்த மனிதர் செய்யும் அருவெறுப்பான செயல்களை குடும்பத்தில் உள்ள யாரும் நம்பவில்லை.
உண்மையை புரிந்துக் கொள்ள மறுப்பது தெரிகிறது.
அதனால் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிடுகிறேன்.
1) அந்த ஆள் உங்களிடம் வந்து முறைகேடாக பேசுவதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். முடிந்தால் உங்கள் மொபைலில் பதிவு செய்யுங்கள்.
2) நீங்கள் தனியாக இருக்கும்போது அவரை உள்ளே அனுமதிக்காதீர்கள். முடியாவிட்டால் நீங்கள் சொன்னது போல் வெளியில் வந்து விடுங்கள்.
3) நீங்கள் உறுதியாக இருக்கும் வரை உங்களுக்கு யாரும் தீங்கு செய்ய முடியாது.
4) அந்த ஆளிடம் அன்பாக நடந்து கொள்ளாதீர்… அவன் பேசுவது தவறு என்று உணர வையுங்கள். உறுதியாக பேசுங்கள். இந்த ‘குப்பைகளை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று அந்த ஆளிடம் சொல்லுங்கள்.
5) பெண்களாகிய நாம் விரும்பினால் ஆண்களை எதிர்ப்பதற்கான வழிகள் உள்ளன.
6) உரிய ஆதாரத்துடன் நீங்கள் உங்கள் கணவரை நம்ப வைக்க முடியும்.
7) அதற்கு மிகவும் நம்பிக்கையான உறவுகள், நட்புகளின் உதவியை நாடலாம். உதாரணமாக உங்கள் சகோதரி, சகோதரன், தோழி என உதவி செய்ய தயாராக இருப்பவரை அணுகுங்கள். அவர்கள் உதவியுடன் உரிய ஆதாரங்களை திரட்டி அந்த ஆளை அம்பலப்படுத்தலாம்.
பொருளாதார சிக்கல்கள் இருப்பதால், இதுபோன்ற கொடுமைகளை பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் படித்து இருக்கிறீர்கள். யாரையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. அதனால் தயங்காமல், பயப்படாமல் செயல்படுங்கள். பிரச்னையில் இருந்து விடுபடுங்கள். வாழ்த்துகள்.