எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுண்டு!(மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 44 Second

‘‘எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது உண்டு. தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் கிடையாது. எனவே நேர்மறை சிந்தனையோடு பிரச்சனைகளை அணுக வேண்டும். பிரச்சனைகளை கடந்து போகும்போதுதான் வெற்றி கிடைக்கும்’’ என்கிறார் சரும நிபுணர் ஐஸ்வர்யா செல்வராஜ்.‘‘இன்றைய காலத்தில் இளைய தலைமுறையினர் தான் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள். அவர்கள் எந்த நிலையிலும் மன உறுதியை இழந்து விடக்கூடாது. எதையும் தைரியத்தோடும், நேர்மறையான சிந்தனையோடும் எதிர்கொள்ளும்போது எந்த பிரச்சனையிலும் இருந்து மீண்டு வெற்றி பெற முடியும். அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை அனைவரும் சந்தித்து வரும் சருமப் பிரச்சனை.

மாசற்ற சருமம் என்பது அனைவரின் கனவு. ஆனால் நாம் வாழும் சூழல் மற்றும் உணவுப்பழக்கம் காரணமாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் பல விதமான சருமப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். தொலைக்காட்சியில் முகப்பருவை நீக்கி சினிமா ஸ்டார் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் க்ரீம்கள், விளம்பரங்கள் வருகின்றன. இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை பயன்படுத்தினாலும் எந்த பலனும் கிடைப்பதில்லை.

சில பெண்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல் முடி வளரும். சிலருக்கு வயிற்றில் கொழுப்பு சேர்ந்து தொப்பை அதிகமாக இருக்கும் இப்படி எப்பேர்ப்பட்ட சரும பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான தீர்வினை கண்டிப்பாக கொடுக்க முடியும்’’ என்று சவாலாக கூறுகிறார் ஐஸ்வர்யா செல்வராஜ். சமூக வலைத்தளங்களில் ஃபேஷன் ஐனாகவும், பெண் தொழில் முனைவோர் ஆகவும் வீட்டில் ஒரு நல்ல இல்லத்தரசி மற்றும் தாயாகவும் திகழ்ந்து வரும் இவர் இந்தத் துறையில் அவருக்கான வழிவகுத்துக் கொண்ட பாதையை பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தேன். நான் மருத்துவம் சேர்வதற்கான முக்கிய காரணம் சரும நிபுணராக வேண்டும் என்பது தான். சிறுவயதில் எல்லா பெண்களைப் போல் நானும் சரும பிரச்சனைகளால் அவதிப்பட்டேன். அதற்காக நான் எடுத்துக் கொள்ளாத சிகிச்சைகளே கிடையாது.

சருமம் சம்பந்தப்பட்ட அழகுக் கலை நிறுவனங்கள் முதல் சரும சிகிச்சைக்கான கிளினிக் என்று ஒன்றுவிடாமல் அணுகினேன். ஆனால் என்னுடை பிரச்சனைக்கான பலன் கிடைக்கவில்லை. அப்போதுதான் என்னைப் போல் பல பெண்கள் சருமப் பிரச்சனையால் அவதிப்படுவார்கள் என்று புரிந்தது. மேலும் ஒரு நடிகையோ அல்லது சின்னத்திரையில் வரும் பிரபலங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவர்களின் சருமம் அப்படி பளபளப்பாக இருக்கும்.

இது போன்ற மாசற்ற சருமம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் தேடல் தான் திருமணத்திற்கு பிறகு என்னை தென்கொரியா, துபாய் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றது. அங்கு சென்று எனது சருமப் பராமரிப்புக்கான படிப்புகளை தொடர்ந்தேன். அங்கு நான் அனைத்து பயிற்சியிலும் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றது மட்டுமில்லாமல் சருமப் பராமரிப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் எட்டு வருடங்கள் பணியாற்றினேன். இதன் மூலம் பலரின் சருமப் பிரச்னை குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. மேலும் அதில் எனக்கான அனுபவத்தை நான் வளர்த்துக் கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து அதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, எனது குடும்பத்தாரின் ஆலோசனை பேரில் தனியாக ஒரு சிறிய கிளினிக்கை சென்னையில் என் வீட்டிலேயே தொடங்கினேன். முதலில் எனக்கு தெரிந்த வட்டங்கள், நண்பர்கள், உறவினர்களின் பிரச்சனைக்கு தீர்வு அளித்தேன். அவர்கள் மூலமாக விளம்பரங்கள் இன்றி என்னை தேடி வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள். அப்படித்தான் என்னுடைய ‘ஸ்கின் என்வி’ சருமப் பிரச்சனைக்கு முழுமையான நிறுவனத்தை நிறுவினேன்.

தற்போது பெண்களிடம் ஹார்மோன் மாற்றங்களினால் உடலில் தேவையற்ற இடங்களில் அதிக அளவில் ரோமங்கள் வளர்கின்றன அதனை வலிகள் இன்றி நீக்கும் அல்மா சோப்ரா டைட்டானியம் என்ற லேசர் இயந்திரத்தை முதன் முறையாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினேன். நிறமாலை லேசர் மூலம் முகப் பருக்களுக்கும், வயதான தோற்றத்தை இளமையாக்கும் கருவி மூலம் இந்த பிரச்சனைகள் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன்.

இத்தகைய நவீன கருவிகள் மூலம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு மாசுமருவற்ற அழகான ஜொலிக்கும் சருமத்தினை வழங்க முடிகிறது என்று நினைக்கும் போது மனசுக்கு நிறைவா இருக்கு’’ என்றவர் அன்றாடம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சருமப் பாதுகாப்புக்கு டிப்ஸ் அளித்தார்.‘‘வெளியே வெயிலில் செல்லும்போது மட்டுமில்லாது வீட்டிற்குள் இருந்தாலும் அலுவலகத்தில் இருந்தாலும் சன் ஸ்க்ரீன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளான நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, தயிர், தேன், வாழைப்பழம், அவகடோ போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சருமம் பளபளப்பாக இருக்கும்’’ என்றவர் மும்பையின் ஃபேஷன் ஐகான் டாக்டர் ஆஃப் தி இயர் என்ற விருதினை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாக்கெட் பால் டேட்டா!(மருத்துவம்)
Next post பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்? (மகளிர் பக்கம்)