அன்றாட சேமிப்பிற்கு என்ன வழி? (மகளிர் பக்கம்)
விலைவாசி ஏற்றம் நாள் தோறும் ராக்கெட் போல வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை நாம் கண்கூடா பார்த்து வருகிறோம். ஆனால் இந்த விலையேற்றத்திற்கான பாதிப்பினை எதிர்கொள்பவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சேமிக்க வேண்டும் என்ற திட்டத்தினை கையாள தவறுகிறார்கள்.
இது போன்ற சிறிய முன்னேற்பாடுகள் இல்லாத போது அவர்கள் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும் போது, தங்களின் வாழ்க்கையினை நகர்த்துவதை மிகவும் கடினமாக எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்காக நாம் ஷேர், மியூச்வல் பண்ட் போன்றவற்றில் பெரிய தொகையினை சேமிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் மூலம் எதிர்காலப் பணத் தட்டுப்பாடுகளைத் தீர்க்கும் சேமிப்பாக உருவாக்க முடியும். இதைச் செய்ய புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பொறுப்பாக இருந்தாலே போதும்.
திட்டம்
எந்த செயல் செய்ய முற்பட்டாலும், அதனை திட்டமிடல் வேண்டும். இது பணத்தைச் சேமிக்க முதன்மையான வழி. உங்கள் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர செலவுகளைத் திட்டமிடுவது அவசியம். எதற்காக எவ்வளவு செலவு செய்ய போகிறீர்கள் என்பதை நீங்கள் முன்பாகவே முடிவு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, அந்த செலவு மிகவும் அவசியமா என்று யோசித்து செயல்பட வேண்டும். இதன் மூலம் உங்களின் அன்றாட செலவினை மிகவும் கவனமாக செய்ய உதவுவது மட்டுமல்லாமல் தினசரி செலவுகளை கட்டுக்குள் பார்த்துக்கொள்ள முடியும்.
கிரெடிட் கார்ட்
நீங்க கிரெடிட் கார்டுல செலவு செய்வதில் நாயகரா ? அப்ப தயவுசெஞ்சு அதை வீட்டிலேயே வச்சுட்டுப் போங்க. கிரெடிட் கார்டு பாக்கெட்டில் இருந்தால் கடையில பாக்குறதயெல்லாம் வாங்கத் தோணும். கை சும்மா இருக்காது. அந்த கடன் அட்டையை பயன்படுத்தி எல்லாத்தையும் வாங்கணும்னு மனசு துடிக்கும். அதே சமயம் இந்த அட்டையினை மிகவும் கவனமாக பயன்படுத்தினால், கண்டிப்பாக நீங்கள் இதன் மூலமாகவும் லாபம் பார்க்க முடியும்.
மின்சார கட்டணம்
மின்சாரக் கட்டணம் உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, கரன்ட் பில்ல கட்டித்தான் ஆகவேண்டும். பில்லை குறைத்துக் கட்ட முடியாது. ஆனால் மின்சாரம் பயன் படுத்தும் அளவை பார்த்துப் பண்ணலாம். புத்திசாலியாய் இருந்து மின்சாரத்தைச் சேமித்துக் கட்டணத்தில் ஒரு சிறிய பகுதியைக் குறைக்கலாம். அறைகளில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் ஏசியை, மின் விசிறியை நிறுத்தலாம். வாஷிங் மெஷினில் டிரையரை பயன்படுத்துவதை தவிர்த்து துணிகளை வெயிலில் உலர்த்தலாம். நாம் இது போல சில சில வேலைகளை பார்த்துச் செய்தா மின்சார கட்டணத்திலும் சிக்கனம் பிடிக்க முடியும்.
சமையல்
நாள் தோறும் இரு முறை மட்டுமே சமையல் செய்யுங்கள். ஒரு நாள் முழுவதும் சமையலறையிலேயே நேரத்தை கழிக்காதீர்கள். அதாவது காலை மற்றும் மதிய உணவையும் சேர்த்தே செய்யுங்கள். ஒரு நாளில் இருமுறை சமைப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் மற்றும் எரிவாயு செலவையும் குறைக்கலாம். இப்போது பல உணவகங்கள் நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்தே உணவினை வழங்குகிறார்கள். அதற்கு ஆசைப்படாமல், உங்கள் மதிய உணவை வீட்டிலிருந்தே அலுவலகம் எடுத்துச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வெளியில் வாங்கும் உணவு வீட்டில் செய்வதைக் காட்டிலும் அதிகச் செலவாகும். உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
தண்ணீர்
கேன் தண்ணீரை தவிர்த்து ஆர்.ஓ என்ற வாட்டர் ப்யூரிபையரை பயன்படுத்துங்கள். இது கேன்களில் வரும் தண்ணீரை விடச் சுகாதாரமானது. அதே நேரம் தண்ணீருக்காக மட்டுமே மாதா மாதம் செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
ஆன்லைனில் கவனம்
கொரோனா தொற்றுக்கு பிறகு சாதாரண லஞ்ச் பேக் வாங்க வேண்டும் என்றாலும் ஆன்லைனில் வாங்குவது பழக்கமாக மாறிவிட்டது. கண்கவர் வண்ணங்களில் உங்களை கவரும் போது, அதில் மயங்கி ஆர்டர் செய்துவிடுகிறோம். இவை செல்போன்களில் ஆப்பாகவும் இருப்பதால், வாங்க வேண்டும் என்ற எண்ணத்தினை தூண்டும். அவசியம் என்பதை மட்டுமே வாங்குவது நல்லது.
மருத்துவம்
சின்னச் சின்ன விஷயத்திற்கு டாக்டரை அணுகாமல் வீட்டில் இருந்தபடியே பாட்டி வைத்தியம் செய்து கொள்ளலாம். இப்போது சாதாரண தலைவலி என்றாலே ஒரு நீளமான லிஸ்டில் ஆய்வுகளை எழுதிக் கொடுக்கிறார்கள். அதற்கு பதில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி பிடித்தாலே தலைவலி இருக்கும் இடம் தெரியாமல் பறந்திடும். அதே சமயம் உடல் ஆரோக்கியம் மேல் அலட்சியமாக இருப்பதும் தவறு.
காய்கறி
வீட்டிலேயே இடம் இருந்தால் காய்கறியை விளைவிக்கலாம். காய்கறிகளின் விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம். அதனால் மொட்டை மாடியில் இடம் இருந்தால் அங்கு புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், கீரை போன்ற சின்ன காய்கறிகளை முதலில் வளர்க்கலாம். அதன் பிறகு மற்ற காய்கறியும் வளர்க்கலாம். ஃபிரஷ் காய்கறி… செலவும் மிச்சம்.
மொபைல் பிளான்
நவ நாகரிக உலகத்தில் செல் இல்லாதவன் செல்லா காசு ஆகிவிடுவான். இன்றைய தேதிக்கு நாள்தோறும் உணவு இருக்கோ இல்லையோ, மொபைல் கனெக்ஷன் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடத் தேவையாகிவிட்டது. காசு செலவாகுமென்று மொபைல் உபயோகத்தைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால், புத்திசாலித்தனமாக நமக்கு தேவையான பிளான்களை
தேடலாம்.
வாகனம்
தனி நபராக வெளியில் செல்லும் பொழுது கார் மற்றும் பைக்கிற்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். இது மிகவும் செலவு குறைவு. இன்றைய கால கட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் ஏற்றமாகவே இருக்கிறது. பொது சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து ஓடுவதால் மாசு கட்டுப்பாடும் அதிகம். செலவை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
உண்டியல்
உண்டியல், குழந்தைகளுக்கு மட்டுமில்லை… பெரியவங்களுக்கும் பொருந்தும். அப்பப்ப கிடைக்கிற காசுகளை அதில் போட்டு வைக்கலாம். எப்ப கடைக்கு போனாலும், கையில் கண்டிப்பாக சில்லறை இருக்கும். அதை அப்படியே செலவு செய்யாமல் உண்டியலில் போட்டு வைத்தால் அவசர காலத்தில் உதவும்.
வாங்கும் தருணம்
சில முக்கிய பொருட்கள் பண்டிகைக் காலங்களில் வாங்கலாம். பணத்தைச் சேமிக்க இதுவும் நல்லதொரு வழி. காரணம் அந்த சமயத்தில் நல்ல தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும்.
போதை வஸ்துக்கள்
சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு கண்ணிற்குத் தெரியாமல் 100 முதல் 200 ரூபாய் வரை செலவாகும். மது இன்னும் விலை அதிகம் என்பதுடன் இவை எல்லாம் உடலுக்குத் தீங்கானது. இது போன்ற பழக்கங்களை நிறுத்துவதன் மூலம் அடுத்த 15 வருடங்களில் பல ஆயிரக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
ஈ.எம்.ஐ கட்டணங்கள்
நடுத்தர மக்கள் பெரும்பாலும் ஈ.எம்.ஐயில் தான் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அப்படி செலுத்தும் கட்டணத்தை தவறாமல் செலுத்துங்கள். மீறினால் ஒரு பெரிய அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு முறை தவறினால் ஒரு பெரிய அபராதமும் மறுபடியும் அதே தவறை செய்தால் அபராதம் இரு மடங்காகும்.
இல்லம்
சிறிய நகரத்தில் வசிப்பதால் உங்களின் செலவுகள் மிகவும் குறையும். உங்கள் வேலை இதற்கு சரியாக இருந்தால் சிறிய நகரத்திற்கு வீட்டை மாற்றிக் கொள்ளுங்கள். பொருளின் விலையும் குறைவானதாக இருப்பதுடன் சேமிக்கவும் முடியும்.