ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி… ஒழுங்காக்கும் ‘நச்’ டிப்ஸ்! (மகளிர் பக்கம்)
மாதவிடாய் சுழற்சி… எல்லோர் வீட்டிலும், எல்லா பெண்களும் சந்திக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், மாதவிடாய் பிரச்சினை என்று வரும்போது இந்த நவீன காலத்தில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள். அதிலும், இன்றைக்கு 30 முதல் 40 வயதுக்குள் இருக்கும் நம் அம்மாக்களிடம் கேட்டால் ‘எல்லா மாதமும் வரும். மூன்று நாளில் நின்றுவிடும்’ என்பார்கள். ஆனால் நமக்கு…? எனவே, ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட என்ன காரணம்? எப்படி அதனை சரி செய்வது? அதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கென்ன? போன்ற பலவற்றையும் இங்கே பார்க்கலாம்.
மாதவிடாய் சுழற்சி…
*பெண்களுக்கு சினைப்பை (கருமுட்டை பை) இரண்டு இருக்கும். அதிலிருந்து முட்டை (முதிர்ந்த) கருப்பையை அடைய சினைப்பை குழாய்கள் இரண்டு இருக்கும். இதுதான் கருவறை உறுப்புகள் அமைப்பு.
*பூப்படைந்த பின் ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை கருப்பைக்கு வரும். இது இரண்டில் எந்த சினைப்பையிருந்தும் வரலாம். வந்து கருவறையில்
ஆணின் விந்துடன் சேர்ந்து கருவாக உருவாகலாம். அவ்வாறு உருவாகவில்லை என்றால் இந்த முதிர்ந்த கருமுட்டை உடலை விட்டு வெளியேற உதிரப்போக்கு ஏற்படும். இதுவே மாதவிடாய் சுழற்சி.
ஒழுங்கற்ற மாதவிடாய்…
*மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் வயது, உடல் ஆரோக்கியம், உறுப்புகளின் ஆரோக்கியம் போன்ற அனைத்தையும் சார்ந்து இருந்தாலும் முதலும் அதிகமுமாக சார்ந்திருப்பது ஹார்மோன்களைத்தான்.
*பெண்களின் முக்கிய ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் பதினான்கு நாட்கள் சுரக்கும். பின் புரொஜெஸ்ட்ரான் பதினான்கு நாட்கள் சுரக்கும். கணக்குப்போட்டால் 28 நாட்கள் முடிகிறதா? முடிவில் மாதவிடாய் (உதிரப்போக்கு) ஏற்படும். இருப்பினும் எல்லோருக்கும் இதேபோல் அச்சுஅடித்த மாதிரி இருக்காது. நாட்கள் முன்பின் இருக்கலாம். மொத்தத்தில் 21 முதல் 35 நாட்களுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு விடவேண்டும். இதுவே இயற்கை. இதற்கு மேல் கீழ் போனால் சிக்கல்தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
*பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்க வேண்டும். அதற்குமேல் நீடித்தால் இயல்பற்ற சுழற்சி என்று அறிகுறி.
*ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் வருவது.
*மாதக் கணக்கில் வராமல் இருப்பது.
*அதிகமான உதிரம் வெளியேறுவது. அதாவது, ஒரு நாளைக்கு நான்கு நாப்கின்களுக்கு மேல் தேவைப்படும் சூழல் உண்டாவது.
*குறைவான அளவில் வெளியேறுவது. அதாவது, ஒரு நாப்கினுக்கு மேல் ஒரு நாளைக்கு தேவைப்படாதது.
*சிலருக்கு ஒருநாள் உதிரப்போக்கு இருக்கும். பின் இரண்டு நாட்கள் இருக்காது. பின் திரும்பவும் இரண்டு நாட்கள் இருக்கும்.
*பூப்படைந்த ஆரம்ப வருடங்களில் சுழற்சி சீராய் இருக்காது. அதாவது, தாமதமாய் வரலாம். இது இயல்புதான். ஆனால் போகப் போக சீராய் மாற வேண்டும்.
*அதேபோல மாதவிடாய் சுழற்சி நின்றுபோகும் (Menopause) நேரத்தில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு இருக்கலாம். இது இயல்பே.
காரணங்கள்…
ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது ஒரு நோயல்ல. இதுவோர் அறிகுறியே என்பதை தெரிந்துகொள்வோம்.
*சினைப்பை நீர்க்கட்டிகள் (பி.சி.ஓ.டி).
*ஹார்மோன்கள் சமச்சீர்மை. முக்கியமாக பெண் உறுப்புகளுக்கு தேவையான Estrogen, Progesterone ஹார்மோன்களின் அளவு மாறுபாடுகள்.
*அதிக உடற்பருமன்.
*அதிக கொழுப்பின் அளவு.
*தைராய்டு சுரப்பிப் பிரச்சினைகள். இதில் முக்கியமாக ‘குறைவான தைராய்டு சுரப்பது’ ஆபத்தை விளைவிக்கும்.
*அதிக துரித உணவுகள் எடுத்துக்கொள்வது. அதிலும் குறிப்பாக சீன உணவுகளில் சேர்க்கப்படும் விதவிதமான ரசாயன மசாலாக்கள், உப்புகள்.
*மனஅழுத்தம் இருப்பது இயல்பு. ஆனால், அது அளவுகடந்து போகும்போது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்.
*புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் சுழற்சியில் மாற்றங்கள் நிகழலாம்.
*நாமாய் முன்வந்து திடீரென உடல் எடையை குறைப்பது, கூட்டுவது போன்றவற்றை செய்யும்போது சுழற்சியில் மாற்றம் ஏற்படும். அதாவது, இரண்டு வாரத்தில் ஐந்து கிலோ குறைப்பது, ஒரு மாதத்தில் ஐந்து கிலோ ஏற்றுவது போன்று.
*தேவையில்லாத படபடப்பு, டென்சன் ஆகியவையும் காரணம்தான்.
*இரும்புச் சத்து குறைபாடு.
*உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை.
*அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது.
*மது, புகையிலை மற்றும் போதைக்கு அடிமையான பெண்களுக்கு சுழற்சியில் கட்டாயம் பாதிப்பு இருக்கும்.
*அதிக அளவில் ஆபத்து மிக்க ரசாயனங்கள் கொண்ட அழகு சாதனப் பொருட்கள் உபயோகிப்பது என இந்த பட்டியலின் நீளம் இன்னும் அதிகம்.
விளைவுகள்…
*மாறிமாறி இப்படி மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதே பாதிக்கும் அதிகமான பெண்களுக்கு பெரும் மனஅழுத்தத்தை உண்டாக்கும்.
*சுழற்சி சரியாய் அமைய சில பெண்கள் மாத்திரைகளும் மருந்துகளும் எடுத்துக் கொள்வார்கள். அதன் பக்கவிளைவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
*திருமணம் ஆன பெண்கள் கருத்தரிப்பதில் கட்டாயம் சிரமம் ஏற்படும்.
தீர்வுகள்…
*மேல் சொன்னதுபடி சுழற்சி சரியான முறையில் இல்லையென நீங்கள் உறுதி செய்தால் முடிந்த வரை வாழ்க்கை முறையை மாற்றிப் பார்க்கவேண்டும்.
*பின் கருப்பை நல மருத்துவரை அணுகவும். அவர்கள் முழுதும் பரிசோதித்து, வேண்டுமென்றால் மருந்துகள் வழங்குவர்.
*தேவைப்பட்டால் மருத்துவர்கள் ரத்த பரிசோதனை மூலம் ஹார்மோன்களின் அளவை தெரிந்துகொள்ளவும், வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என தெரிந்துகொள்ளவும் ஸ்கேன்கள் எடுக்கச் சொல்வர்.
இயன்முறை மருத்துவம்…
*ஆரோக்கியமான வாழ்வியலின் ஒரு பகுதியாக உடற்பயிற்சியை செய்வது அவசியம். இதனை இயன்முறை மருத்துவர்கள் துணைகொண்டு முறையே செய்ய வேண்டும்.
*ஒவ்வொரு பெண்களும் அவர்களின் வேலை, வயது, தேவை, உடல் எடை, மற்ற உடல் பிரச்சினைகள் என அனைத்தையும் பொருத்தே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எனவே, அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி முழுவதும் பரிசோதனை செய்து, என்னென்ன பயிற்சிகள், எந்த அளவில் தேவை என அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
*இயன்முறை மருத்துவர் தேவையான உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர். அவ்வப்போது பயிற்சியில் மாற்றங்கள் வேண்டுமெனில், தேவைப்படுமெனில் அதனையும் மாற்றுவர்.
வராமல் தடுக்க…
* தினமும் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* உடல் உழைப்பு இல்லாத தொழிலில் இருந்தால் குறைந்தது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும்.
* தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடனம், யோகா, ஜாக்கிங், ரன்னிங் என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
* தினமும் முடியவில்லையெனில் வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்களாவது செய்யலாம்.
* உணவுப் பழக்கத்தில் கட்டாய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அதிக அளவு இரும்புச் சத்து, புரதச் சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கள் எடுத்துக்கொள்வது.
* முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்ப்பது.
* அதிக உணவு சார்ந்த ரசாயனங்கள் கலந்த தின்பண்டங்கள் தவிர்ப்பது.
* நேரத்திற்கு தூங்குவது மற்றும் சாப்பிடுவது.
* புகை, மது மற்றும் போதைப் பொருட்களை முழுமையாக தவிர்ப்பது.
மொத்தத்தில்… சீரான வாழ்க்கை முறையே ஒழுங்கான மாதவிடாய் சுழற்சியை உருவாக்கும் நல்வழி என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொண்டாலே போதும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை முற்றிலும் இல்லாமல் செய்துவிடலாம்.