திடீர் பக்கவாதம் ஒரு ரெட் அலெர்ட்!(மருத்துவம்)
காலையில் எழுந்து, பல்துலக்கி, டைனிங் டேபிளில் அமர்ந்த எழுபது வயதுகாரர் ஒருவர் திடீரென்று ஒரு மாதிரி வெறுமையாய் விழித்து; இடது கை, இடது கால் சுவாதீனமற்று நாற்காலியிலிருந்து சரிந்தார். சிறிது நேரம் ஒன்றும் புரியாமல், அப்படியே எழுந்திருக்க முயன்றார். இடது பக்க உடம்பு ஒத்துழைக்காததால், மீண்டும் தரையில் சாய்ந்தார். ஓடிவந்த உறவினர்கள், கைத்தாங்கலாக அவரைப் படுக்கையில் படுக்க வைத்தனர். அவருக்கு வாய் குளறியது. நன்றாக நடமாடிக்கொண்டிருந்தவர் சில நொடிகளில் பக்கவாதத்தில் முடங்கிப் போனார். இதை திடீர் பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம்.
பக்கவாதம் (ஸ்ட்ரோக்)
பக்கவாதம் என்பது மனித உடலின் ஒரு பக்கம் – இடது அல்லது வலது பக்க முகம், கை, கால் – செயலிழப்பது என்று கூறலாம். இது பொதுவாக வயதானவர்களுக்கு வரும் நரம்பு மண்டலம் சார்ந்த ஒரு நோய். நன்றாக ஓடி, ஆடி வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவர், திடீரென ஒரு பக்கம் கை, கால் செயலிழப்பதால், படுத்த படுக்கையாகிவிடும் அபாயம் இருக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்களினால், அவற்றில் ஏற்படும் அடைப்புகளோ அல்லது அவை கிழிந்து அதிலிருந்து வரும் ரத்தக் கசிவுகளோ மூளையின் சில பகுதிகளைச் செயலிழக்கச் செய்வதால் ஏற்படும் திடீர் விபத்து இது.
ஸ்ட்ரோக் பொதுவாக வயதானவர்களுக்கு வரும் ஒரு நரம்பு நோய் – ‘ப்ரெய்ன் அட்டாக்’, ‘செரிப்ரோ வாஸ்குலர் ஆக்சிடென்ட்’ (Cerebro vascular accident) எனப் பலவிதமாக அழைக்கப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதாவது கோளாறோ – அடைப்போ அல்லது ரத்தக் குழாயில் ரத்தக் கசிவோ ஏற்படுவதால் – ஆக்சிஜன் சக்தி கிடைக்காமல், மூளையின் செல்கள் செயலிழக்கின்றன. அதனால் அந்த மூளைப் பகுதியின் கண்ட்ரோலில் உள்ள உடல் உறுப்புகளான கை, கால், முகம், பேச்சுறுப்புகள் செயலிழக்கின்றன (PARALYSIS) சற்றும் எதிர்பாராத தருணத்தில், திடீரென்று வந்துவிடுவது இந்த நோயின் மோசமான அபாயங்களில் ஒன்று.
பக்கவாதம் யாருக்கு, எதனால் வருகிறது?
பிறந்த குழந்தை முதல், கூன் விழுந்த கிழவர் வரை எல்லா வயதினருக்கும், யாருக்கு வேண்டுமானாலும் ஸ்ட்ரோக் வரலாம். வயதிற்கேற்ப காரணம் மட்டும் வேறுபடும். ரத்தக் குழாய்களையோ, ரத்தத்தின் பகுதிகளையோ பாதிக்கும் எந்த நோயும் ஸ்ட்ரோக் வரக் காரணமாகலாம். அதிகமாகப் புகை பிடிப்பவர்களின் ரத்தக் குழாய்கள் சுருங்கிப், புண்ணாகின்றன . இது ரத்தம் உறைவதை அதிகப்படுத்துகின்றது.
மேலும் ‘ஹோமோசிஸ்டீன்’ – அமினோ ஆசிட் அதிகமாகி உட்சுவர்களைப் பாதிக்கின்றன. அதனால் ரத்தம் உறைந்து, இரத்தக் கட்டிகள் ஒருவருடைய மூளையில் உள்ள ரத்தக் குழாய்கள் அடைத்துவிட நேர்ந்தால், ஸ்ட்ரோக் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. குழந்தைகளுக்கு ரத்தத்தில் மாற்றங்கள் (பரம்பரை வியாதிகள்), ரத்தக்குழாய்களின் குறைபாடுகள், இதய வால்வுகள் பாதிப்பு எனப் பல காரணங்களினால் ஸ்ட்ரோக் வரலாம். விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை தடுக்கி விழுந்து பக்கவாதம் வருவதும் உண்டு.
நாற்பது ஐம்பது வயதுக்குள் ஸ்ட்ரோக் வருவதற்கு டிபி போன்ற நோய்த் தொற்றுகளும் மற்றும் ரத்தக்குழாய் அழற்சிகளும் ( VASCULITIS – COLLAGEN VASCULAR DISEASES ) காரணமாகின்றன.முதியவர்களுக்கு, வயதின் காரணமாக ரத்தக் குழாய்கள் தடித்து, சுருங்கி விடுவதால் (ATERIOSCLEROSIS) பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம்.
பொதுவான காரணங்கள்
1.ரத்த அழுத்தம் (BP)
2.சர்க்கரை நோய் (DIABETES)
3.கொலெஸ்டிரால் (ATHEROSCLEROSIS)
4.புகை பிடித்தல், மது அருந்துதல்
5.உடல் பருமன் (OBESITY)
6.உடற்பயிற்சியின்மை (SEDANTARY LIFE)
7.இதயநோய்கள்
8.தமனிகள், சிரைகள் சார்ந்த நோய்கள் இவையெல்லாம் ஸ்ட்ரோக் வரும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
அறிகுறிகள்
ஒருவருக்கு கட்டுக்குள் இல்லாத ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் ஸ்ட்ரோக் ஏற்பட மிக முக்கியமான காரணங்கள் ஆகும். முறையான பரிசோதனைகள், மருந்துகள் மூலம் இவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.அதுபோன்று சிலருக்கு, ஸ்ட்ரோக்கின் இன்னொரு வகையான TIA என்று சொல்லப்படுகின்ற, சில நிமிடங்களே இருக்கக்கூடிய செயலிழப்புகள் – கை, கால், பேச்சு இவற்றின் பாதிப்பு வரக்கூடும்.
அது அப்போதைக்கு சரியாகி விட்டாலும், இவற்றை பின்னால் வரக்கூடிய ஸ்ட்ரோக்குக்கான எச்சரிக்கையாகக் கருதி TIA வந்தவர்கள், தங்களை முழுமையாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.சிலருக்குப் பார்வைக் கோளாறுகள், மயக்கம், பேச்சில் மாற்றம், வலிப்பு போன்றவையும், ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளாக வரக்கூடும்.
சிகிச்சை முறை
ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட 3 முதல் 6 மணிநேரத்தை – கோல்டன் பீரியட் என்று மருத்துவ உலகில் சொல்கிறோம். எனவே, ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணிநேரத்திற்குள், ரத்தக்குழாயில் எங்கு அடைப்பு இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால், தற்போதுள்ள நவீன மருத்துவ வசதிகளால், மருந்துகள் மூலம் அடைப்பை நீக்க முடியும். தாமதம் செய்வது, நாள் கடத்துவது, நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திவிடக் கூடும். மேலும், மூளையில் பெரிய ரத்தக் குழாய்களில் அடைப்பு (ஒருபக்க மூளையே செயலிழக்கும் அபாயம்), அதிகமான ரத்தக்கசிவு (MASSIVE HEAMORRHAGE) இவைகள் நோயாளியைக் கோமா நிலைக்குத் தள்ளிவிடும் அபாயமும் உண்டு. எனவே, பக்கவாதம் வந்ததும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
பரிசோதனைகள்
ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்புக்கும் ரத்தக் கசிவுக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடும் என்பதால், சிடி, எம்ஆர்ஐ போன்ற ஸ்கேன்கள் மூலம், மூளையில் எந்தக் குழாயில் பாதிப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிய அவசியமாகிறது. அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் இப்போது கிடைக்கின்றன. அதனால், தாமதம் செய்யாமல் மருத்துவர் ஆலோசனையுடன் இந்த பரிசோதனைகள் செய்வது அவசியம்.
தற்காத்துக் கொள்ள…
மேலே சொன்னபடி ஸ்ட்ரோக் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பிளட் பிரஷர், சர்க்கரை, கொலெஸ்டிரால் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். புகை பிடித்தல் கூடாது. தினமும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்வது நல்லது.
சிகிச்சைகள்
பிஸியோதெரபி (இயன்முறை சிகிச்சை) மிகவும் முக்கியமான சிகிச்சை முறை. தசைகளின் விறைப்பைக் குறைக்கவும், சக்தியைக் கூட்டவும் அவசியமானது. பிஸியோதெரபியைத் தவிர்த்தால், தசைகள் கெட்டிப்பட்டு விடும். அதுபோலவே பேச்சுப் பயிற்சியும் முக்கியம்.