வழுவழு கைகள்… வாளிப்பான கால்கள்…!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 24 Second

ஹோம்லி பெடிக்யூர் – மெனிக்யூர்

பெண்கள் பெரும்பாலும்  தங்கள் அழகுப் பராமரிப்பில் முகம், தலைமுடிக்கு அடுத்தபடியாக கவனம் செலுத்துவது கை மற்றும் கால்களுக்குதான். அந்த வகையில் கைகள் மற்றும் கால்களை அழகாகப் பராமரிக்க உதவுகிறது  பெடிக்யூர் – மெனிக்யூர். இதைச் செய்ய அழகு நிலையங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையாகச் செய்துகொள்ளலாம்.

 பெடிக்யூர்

தேவையானவை

நெயில் பாலிஷ் ரிமூவர்
காட்டன்  
ஒரு வாளி வெதுவெதுப்பான நீர்
எலுமிச்சை, ஷாம்பு, கல் உப்பு
நெயில் கட்டர், மெருகேற்ற உதவும் கல் அல்லது நார்
மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெய்.

செய்முறை: முதலில் கால் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும். அதிலும் அந்த ரிமூவர் ஆல்கஹால் மற்றும் அசிட்டோன் இல்லாததாக இருக்க வேண்டும். பின்னர், ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் கல் உப்பு, சிறிது ஷாம்பு மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.  பின்னர், மெருகேற்ற உதவும் கல் அல்லது நார் கொண்டு பாதங்களை மென்மையாகத் தேய்த்துவிட வேண்டும்.

இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும். அடுத்து நெயில் கட்டர் கொண்டு கால் விரலில் உள்ள நகங்களை வெட்டி நீக்கி விட்டு, நகங்களின் முனைகளைத் தேய்த்துவிடுங்கள். இதனால் கால்விரல் நகங்கள் சீராகக் காணப்படும். இறுதியில் கால்களை ஒருமுறை நீரில் கழுவி, பின் துணியால் துடைத்து உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயைத் தடவ, பாதங்கள் பொலிவோடும், சுத்தமாகவும், வறட்சியின்றியும் காட்சியளிக்கும்.

குறிப்பு: மாய்ஸ்சுரைசர் தடவிய பின் கால்களுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டால், பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு விரைவில் மறைவதைக் காணலாம்.

மெனிக்யூர்

மெனிக்யூர் என்பது கைகளை அழகுபடுத்துவது மட்டுமல்ல,  கைகளை, கைவிரல்களை, விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி கையில் உள்ள இறந்த செல்களை நீக்கி கைகளுக்கு புத்துணர்ச்சி கொடுப்பது எனலாம். மெனிக்யூர் செய்வதன் மூலம் கையி்ல்  உள்ள சுருக்கங்கள் நீங்கி அழகாக தெரியும். வீட்டிலேயே எளிமையாக மெனிக்யூர் செய்வது எப்படியெனப் பார்க்கலாம்.

தேவையானவை

நெயில் பாலிஷ் ரிமூவர்
நெயில் கட்டர்
டூத் பிரஷ்
வெதுவெதுப்பான தண்ணீர் – தேவைக்கேற்ப
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
ரோஜா இதழ்கள்  –  கைப்பிடியளவு
கடலைமாவு, காபி தூள் மற்றும் அரிசி மாவு – தலா  1 தேக்கரண்டி
தயிர், பால் மற்றும் எலுமிச்சைச்சாறு – தலா 2 தேக்கரண்டி.

செய்முறை: முதலில்  கைவிரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்கி விட வேண்டும். பின்னர், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப நகங்களை வெட்டி ஷேப் செய்து கொள்ள வேண்டும். பின்னர், விரல் நகங்களில்  சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு,  ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் தாங்கள் பயன்படுத்தும் ஷாம்பு ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்கள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பிறகு தங்களுடைய இரண்டு கைகளையும் 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் வைத்திருக்கவும்.  பின்னர், கைவிரல் நகங்களை ஒரு டூத் பிரஷை கொண்டு சிறிது நேரம் தேய்த்து சுத்தம் செய்யவும். பின்னர், ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். இதில் 1 ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் காபி தூள், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், இந்த கலவையை கை விரல்களில் தடவி  5 நிமிடம் நன்கு மசாஜ் செய்து பின்னர் கைகளை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம்  கைவிரல் நகங்களில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கி நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

அடுத்ததாக கைகளை அழகுபடுத்த பேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்:
ஒரு மிக்சி ஜாரில் , ஒரு கையளவு பன்னீர் ரோஜா இதழ்கள் , சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து  எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு இந்த பேஸ்டை தங்களுடைய இரண்டு கைகள் முழுவதும் நன்றாக அப்ளை செய்து குறைந்தது 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து, பின்பு கைகளை கழுவி விடவும். இவ்வாறு செய்வதினால் தங்களுடைய கைகள் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும், மிகவும் அழகாகவும் காணப்படும். இந்த பேக்கை முகத்திற்கும் பயன்படுத்தலாம்.இந்த  பெடிக்யூர் – மெனிக்யூரை வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் கைகள் கருமையாவதை தடுக்கும். மற்றும் குதிகால் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!(அவ்வப்போது கிளாமர்)
Next post கவனம்… க்ரியாட்டினின்… டீடெய்ல் ரிப்போர்ட்! (மருத்துவம்)