இது பெண்களின் தாண்டவ் !! (மகளிர் பக்கம்)
நீரிழிவு பிரச்னை இந்தியா முழுக்க பரவி வருகிறது. இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. இந்த நோய் யாரை வேண்டும் என்றாலும், எந்த வயதிலும் பாதிப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்கள் ஆண்களை விட உடல் பருமன் பிரச்னையால் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். அது குறித்து அவர்கள் பெரிய அளவில் கவலைப்பட்டாலும், அதற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
இந்தியா முழுக்க ஆய்வு செய்தால் 10% பெண்கள் தான் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள் என்று சொல்லலாம். விளைவு உடல் பருமன் அதனால் ஏற்படக்கூடிய நீரிழிவு பிரச்னை குறித்து விழிப்புணர்வு அவசியம். நான் தான் வீட்டில் எல்லா வேலையும் செய்கிறேனே என்று சொல்லும் பெண்களுக்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம் என்கிறார் மெட்ராஸ் நீரிழிவு ஆய்வு மையத்தின், துணைத் தலைவர் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் அஞ்சனா.
‘‘என்னுடைய அப்பா, அம்மா இருவருமே டயபெட்டீஸ் ஸ்பெஷலிஸ்ட். அப்பா நீரிழிவு நிபுணர் என்றால் அம்மா, அதனால் ஏற்படும் கண் பாதிப்பு குறித்த நிபுணர். சின்ன வயசில் இருந்தே மருத்துவமனை, நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்ததால், எனக்கும் என் பெற்றோர் போல் டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர்களைப் போல் பல உயிர்களை காக்க வேண்டும் என்று விரும்பினேன்.
இப்போது அம்மா இல்லை என்றாலும், அப்பாவின் வழிகாட்டலால் நானும் நீரிழிவு நிபுணராகி எங்களின் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறேன். பெண்களுக்கு ஏற்படும் நீரழிவு நோய் குறித்து நான் ஆய்வு செய்த போது, அவர்களுக்கு இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டாலும் சரி இல்லை என்றாலும் சரி அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். காரணம் ஒரு பெண்ணுடைய உடலில் பல வித மாற்றங்களை சந்திக்கிறது. வயதிற்கு வந்த நாள் முதல் திருமணம், குழந்தைகள் என அவளின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதில் சில பெண்கள் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள். விளைவு கருவுறும் போது ஜெஸ்டெஷனல் நீரிழிவு நோயின் பாதிப்பு ஏற்படும்.
இதனால் குழந்தைக்கு மட்டுமில்லாமல் பெண்களின் எதிர்காலத்திலும் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். அப்போது தான் அவர்களால் வாழ்க்கை முழுதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதனால், உடற்பயிற்சி மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை குறைத்து எப்போதும் ஆக்டிவ்வாக இருக்க செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான உடற்பயிற்சி செஷன் நடத்த திட்டமிட்டேன்.
ஆரம்பத்தில் ஆண், பெண் என இருவரும் ஆர்வத்துடன் வந்தாங்க. ஒரு வாரத்தில் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வருவதை நிறுத்த ஆரம்பிச்சாங்க. காரணம் ஆண்களுடன் சேர்ந்து செய்வது, உடற்பயிற்சிக்கான உடைகள் அணிவது… அவங்களுக்கு ஒரு வித அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஒரு மாற்று கொடுக்க யோசித்த ேபாது தான் தாண்டவ் உருவானது. இது முழுக்க நடனப் பயிற்சி. இந்த பயிற்சியினை தேர்வு செய்ய முக்கிய காரணம், பெண்கள் நடனமாடுவதை சமூகத்தில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பரதம், வெஸ்டர்ன், குச்சுப்பிடி என்று எந்த வகை நடனமாக இருந்தாலும், அதற்கு தடை கிடையாது. இரண்டாவது, தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய முடியாது. மூன்றாவது, அவங்களுக்கான சிறிய நேரத்தில் உடற்பயிற்சி செய்யணும். இவை எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருந்தது தாண்டவ் நடனப் பயிற்சி.
தாண்டவ் என்றால் என்ன? பத்து நிமிடம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் இசைக்கு வேகமாக ஆடக்கூடிய ஒரு வகை நடனப் பயிற்சி. இதை பெண்கள் வீட்டில் இருந்து செய்யலாம். அல்லது குழுவாக இணைந்து நடனமாடலாம். இதன் மூலம் அவர்களின் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து மெட்டபாலிசம் அதிகரிக்கும். நல்ல இசையைக் கேட்டால் நம்மை அறியாமல் நம்முடைய உடல் அசைய ஆரம்பிக்கும். அதனால் தாண்டவ் பெண்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டானது. இது வரை 1000 பெண்களுக்கு நாங்க பயிற்சி அளித்திருக்கிறோம். அடுத்து குழந்தை பிறந்த பிறகு அவர்கள் தங்களின் உடல் எடையை குறைத்து, முன்பு இருந்த உடல் அமைப்பிற்கு மாற வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்.
அதற்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நடனத்தை சும்மா இசை போட்டு ஆட முடியாது. அதற்கான முறையான பயிற்சியாளரின் ஆலோசனை அவசியம். காரணம் இது ஹை இன்டென்சிவ் நடனம் என்பதால், ஆரம்பத்தில் வேகமாக ஆடினா உடம்பு தாங்காது. முதல் மூன்று மாசம் பயிற்சி அளித்து, கொஞ்சம் ெகாஞ்சமா வேகத்தை கூட்ட வேண்டும். உடனே வேகமாக ஆடினா இருதயம் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும். இந்த நடனப் பயிற்சி நீரிழிவு நோயாளிக்கு மட்டுமில்லை, எந்த பிரச்னையும் இல்லாத பெண்களும் கடைப்பிடிக்கலாம். இதற்காக ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்களின் இணையத்தில் பயிற்சி குறித்த விவரம் உள்ளது.
அதை பின்பற்றினாலே போதும். சிலர் நேரடியாக பயிற்சி பெற விரும்புவார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வர்க்ஷாப்பும் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதனால் உடல் எடை குறையும். நீரிழிவு பிரச்னை தீரும். உடலில் உள்ள கொழுப்பு கரையும். மெட்டபாலிசம் அதிகரிக்கும். கார்டியோ வாஸ்குலர் பிட்னஸ் என்பதால், இருதயம் பலப்படும். தசை இறுகும். டிமென்ஷியா பிரச்னை நீங்கும். எலும்பு பலப்படும். டிப்ரஷன் குறையும்’’ என்றவர் நீரிழிவு பிரச்னை 15 வயதில் இருந்தே துவங்குவதாக தெரிவித்தார்.
‘‘நீரிழிவு பரம்பரை வியாதி என்றாலும், அது லைஃப் ஸ்டைல் ேநாயாக இப்ப மாறிவிட்டது. இந்த நோய் வந்துவிட்டால், முதலில் பயப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. 70 வயசு வரை சந்தோஷமா தங்களின் வாழ்க்கையினை கழிப்பவர்களும் உள்ளனர். அதற்கு நம்முடைய வாழ்க்கை முறையில் சின்ன மாற்றம் செய்ய வேண்டும். நாம் எந்த ஒரு விஷயம் செய்தாலும், ஒன்று அதை முழுமையாக செய்கிறோம்… இல்லை என்றால் செய்யாமல் விட்டுவிடுகிறோம். நடுநிலையாக எதிலுமே நாம் இருந்ததில்லை. சாப்பாடு, வேலை எதுவாக இருந்தாலும் ஒன்று அதிகமாக சாப்பிடுகிறோம் அல்லது அதிக அளவு மன உளைச்சலை ஏற்றுக் கொள்கிறோம். இது ரொம்ப அதிகமாகி கொண்டிருக்கிறது. அதனால் உடலில் கொழுப்பு அதிகமாகும்.
ரத்த அழுத்தம் உயரும். தாண்டவ் உடல் மட்டுமல்லாமல் மனதளவிலும் மேம்படுத்த உதவும். நீரிழிவு பிரச்னைக்கு முதலில் உடலில் உள்ள கொழுப்பினை கட்டுப்படுத்த வேண்டும். நாம அதை அலட்சியமா விட்டுவிடுவதால், அது மற்ற நோய் அதாவது சிறுநீரக பாதிப்பு, இருதய பாதிப்பு எல்லாவற்றையும் ஏற்படுத்தும். அப்ப நாம் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்றால் எந்த பயனும் இருக்காது. அதனால் அதிக அளவு கொழுப்புள்ள உணவினை தவிர்த்து சமச்சீர் உணவு முறைகளை கடைப்பிடிப்பது அவசியம். பெண்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினாலே அவங்க மட்டுமில்லாமல் அவங்க குடும்பமும் ஆரோக்கியமா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்று ஆலோசனை வழங்கினார் நீரிழிவு நிபுணர் டாக்டர் அஞ்சனா.