ஹெல்த்தி சிறுதானிய ரெசிப்பிகள் 3 ..!! (மருத்துவம்)
வரகரிசி புலாவ்
தேவையானவை
வரகரிசி – இரண்டு கப்
பீன்ஸ், கேரட், பட்டாணி,
உருளைக்கிழங்கு – (நீளவாட்டில்
நறுக்கியது) இரண்டு கப்.
கிரேவிக்கு
தக்காளி -1
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி – சிறிது
கரம் மசாலா பவுடர் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – முக்கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் அல்லது நெய் – ஒன்றரை கப்.
தாளிதம் செய்ய
ஏலக்காய், கிராம்பு, பட்டை,
சீரகம், மிளகு – தேவைக்கேற்ப.
செய்முறை: வரகரிசியைக் கழுவி, ஒன்றுக்கு ஒரு கப் வீதம் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கொத்துமல்லி, கரம் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, சீரகம், கிராம்பு, பட்டை, சீரகம், மிளகு தாளிதம் செய்து அரைத்த மசாலா விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கெட்டிப்பட்டவுடன் உதிரியாக வடித்த வரகரிசி சாதத்தை சேர்த்து கிளறி விடவும். சுவையான வரகரிசி புலாவ் தயார். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
பலன்கள்: வரகரிசி இதயத்துக்கு பலம் தரும். குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை வரகரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதயத்தின் நலம் மேம்படும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு. வரகரிசியில் புரத சத்து அதிகம் உள்ளது.
தினை பெசரட்டு
தேவையானவை
தினை – 1 கப்
துவரம் பருப்பு – கால் கப்
பயத்தம் பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் -2
இஞ்சி – சிறிது
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – 2 கொத்து.
செய்முறை: தினை, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் தோசைகளாக சுட்டு எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டெடுக்கவும். சுவையான தேங்காய் புளி சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை.
பலன்கள்: தினை, புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவு. தினை தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்க உதவுகிறது. தினையில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். தொடர்ந்து சாப்பிடுவதனால் பார்வை தெளிவடையும்.
மில்லட்ஸ் கிச்சடி
தேவையானவை:
சாமை – அரை கப்வரகரிசி – அரை கப்
ஜவ்வரிசி – கால் கப்
கொண்டைக்கடலை – கால் கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 4 சிறியது.
தாளிதம் செய்ய
பிரிஞ்சி இலை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி – சிறிது.
செய்முறை: வரகரிசி, சாமை, ஜவ்வரிசி மூன்றையும் ரவையாக மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து தனியாக வேக வைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதங்கியதும், அரிசி ரவைக் கலவையை கலந்து, அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு கலந்து மூடி 2 விசில் விட்டு எடுக்கவும். கிச்சடியுடன் கருவடாம் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
பலன்கள்: சாமையில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து, புரதம் நிறைந்துள்ளது. தளர்ச்சியைப் போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது. கொண்டைக்கடலை செலினியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளதால் வரகரிசி போலவே இதயத்திற்கு நன்மை பயக்கிறது. ஜவ்வரிசியில் கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதனால் எலும்பின் ஆரோக்கியம் மேம்படுகிறது.