X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!(அவ்வப்போது கிளாமர்)
ஓர் இளம் தம்பதிகள் முதலிரவுக்குள் நுழைகிறார்கள். தாம்பத்யம் குறித்து எத்தனையோ கற்பனைகள், ஆசைகள் இருவரின் மனதிலும் பட்டாம்பூச்சிகளாய் படபடக்கின்றன. மனதில் குறுகுறுப்பும் தவிப்பும் மெல்லிய பதற்றமும் இருவருக்குமே இருக்கின்றன. ஆசையாசையாய் பேசி, மெல்லத் தழுவி, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, அடுத்தடுத்த கட்டத்துக்கு வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
நாணத்தில் சிவந்திருக்கும் பெண்மையின் நளினத்தை ரசித்தபடியே அவள் மீது படர்கிறான். படபடப்பும் எதிர்பார்ப்புமாய் அந்த முக்கிய வைபவத்துக்கு காத்திருக்கிறாள். திடீரென ‘ஆ…‘வென அலறுகிறான். ஆணுறுப்பு எங்கும் ரத்தம். அவளும் பதறுகிறாள். ஒரு கணம் என்ன நடக்கிறதென்றே இருவருக்கும் புரியவில்லை. அவள் பெண்மைக்குள் நுழைய முயற்சித்தபோது அவன் ஆணுறுப்பின் முன் தோல் கிழிந்து ரத்தம் பெருகுகிறது. இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதென யாருமே முன்பின் அவனிடம் சொல்லியிருக்கவில்லை. அவளுக்கும் தெரியவில்லை. அடித்துப் பிடித்து மருத்துவரிடம் ஓடுகிறார்கள். மருத்துவர் ‘திருமணத்துக்கு முன்பே ஏன் வந்து பரிசோதிக்கவில்லை’ என்று கடிந்தபடியே சிகிச்சையளிக்கிறார்.
உண்மையில் என்ன நடந்தது? முதன் முதலாய் உடலுறவு கொள்ளும்போது எல்லா ஆண்களுக்கும் இப்படி முன் தோல் கிழியுமா? இல்லை எல்லோருக்கும் கிழியாது. ஆனால், சிலருக்கு இப்படி நடக்க வாய்ப்புள்ளது. ஆணுறுப்பின் மூடிய முன் தோலை சற்றே பின் தள்ளினால் மொட்டு போன்ற முன்பகுதி தென்படும். அதன் அடிப்பாகத்தில் மூடிய முன் தோல் ஆணுறுப்போடு இணைந்திருக்கும் பகுதி ஒன்றிருக்கும்.
இதனை, ஃப்ரெனுலம் (Frenulum) என்பார்கள். இந்த ஃப்ரெனுலம் சிலருக்கு உடலுறவின் போது அறுபட்டு உதிரம் வரக்கூடும். இதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. முரட்டுத்தனமாய் உடலுறவில் ஈடுபடும்போது இது கிழியக்கூடும். உடலுறவின்போது பெண்ணுறுப்பில் உயவு நீர் (Lubrication) போதுமான அளவுக்கு சுரந்தால்தான், இருவருக்குமே உராய்வின் எரிச்சலோ வலியோ இல்லாமல் இன்பமாக உடலுறவில் ஈடுபட முடியும்.
பெண்ணுக்கு இந்த உயவு நீர் சுரக்க வேண்டுமானால், பெண் உடலை முயக்கத்துக்குத் தயாராக்க வேண்டியது அவசியம். ஃபோர்ப்ளே எனப்படும் முன் விளையாட்டுகள், கொஞ்சல்கள், தடவல்கள் போன்ற ரொமான்டிக் செயல்பாடுகள் மூலம் பெண் உடலை போகத்துக்குத் தயாராக்கினால் உயவு நன்றாகச் சுரந்து உறவுக்குத் தயாராகும் பெண் உடல். இல்லாவிடில், முரட்டுத்தனமாக, கடினமாக ஈடுபட வேண்டியிருக்கும். இதனால் சிலருக்கு ஃப்ரெனுலம் கிழிபடக்கூடும்.
மேலும், சிலருக்குப் பிறவிக்கோளாறாகவோ, ஏதேனும் தொற்றுகளாலோ முன் தோலை பின்பக்கம் இழுக்க முடியாத நிலை இருக்கும். இந்த நிலையை பைமோசிஸ் (Phimosis) என்பார்கள். இவர்கள் முதன் முதலாய் உடலுறவு கொள்ள முற்படும்போது முன் தோல் கிழிந்து உதிரம் கொட்ட வாய்ப்பிருக்கிறது. உதடு, நாவு, பிறப்புறுப்பு போன்றவற்றில் ரத்தக் குழாய்கள் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு அடிபட்டால் ரத்தப் பெருக்கு சற்று அதிகமாகவே இருக்கும். அதனால்தான் பலர் பதறிவிடுகிறார்கள்.
பொதுவாக, கிட்டதட்ட எல்லோருக்கும் ஆணுறுப்பின் முன்புறத் தோலைப் பின்னால் தள்ள இயலும். அப்படித்தள்ளும்போது, முன்புறம் உள்ள மொட்டுபோன்ற பகுதிக்கும், ஆணுறுப்பின் தண்டுப்பகுதிக்கும் நடுவே சிறு அகழி போன்ற பள்ளம் இருப்பதைப் பார்க்கலாம்.இதனை, கொரோனல் சல்கஸ் (Coronal Sulcus) என்பார்கள். இந்தப் பகுதியில் ஸ்மெக்மா (Smegma) என்ற திரவம் சுரக்கும். சற்றே பிசுபிசுப்பான கழிவு திரவம் இது. இதில், பாக்டீரியா இருப்பதால் சற்று கெட்ட வாடையுடன் இருக்கும். எனவே, குளிக்கும் போது இந்தப் பகுதியை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். முன் தோலை சற்றே பின்தள்ளி விட்டு அங்கு நன்றாகக் கழுவினால்தான் அந்தப் பகுதி சுத்தமாகும்.
நம் சமூகம் பாலியல் மற்றும் பாலுறுப்பு தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதில் சுணக்கம் காட்டும் சமூகம் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆணுறுப்பைச் சுத்தம் செய்வது தொடர்பாய் சொல்லித் தருவது இல்லை. இதனால் பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பல ஆண்டுகளாக அதனை முறையாக சுத்தம் செய்யாமல் விடும்போது அந்தப் பகுதியில் உருவாகும் தொற்றாலோ அதன் பிசுபிசுப்பான தன்மையினாலோ ஆணுறுப்பின் முன் தோலைப் பின்னால் தள்ளவே இயலாத நிலை சிலருக்கு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது முன் தோல் திடீரென கிழிவது நிகழக்கூடும்.
நமது பள்ளிகள், கல்லூரிகளில் நடக்கும் மருத்துவப் பரிசோதனைகளிலும் இந்தப் பரிசோதனைகள் நடைபெறுவதே இல்லை. இதுவும் நம் சமூகத்தில் நிலவிவரும் பாலியல் தொடர்பான ஒதுக்குதல் மனநிலையிலிருந்தே உருவாகிறது. இது குறித்த விழிப்புணர்வு நம் சமூகத்துக்கு அவசியம். ஒவ்வொரு ஆணும் திருமணத்துக்கு முன்பு ஒருமுறை மருத்துவரை அணுகி, மருத்துவ விஞ்ஞானரீதியாக பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது. இப்படிச் செய்தால், நள்ளிரவில் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குப் போகும் விபத்துகள் எல்லாம் நடக்காது.
சில சமூகங்களில் முன் தோலை நீக்கும் சடங்கு மதரீதியாகவே செய்விக்கப்படுகிறது. அது அவர்களின் மதக் கடமை அல்லது சடங்குகளில் ஒன்று. இப்படிச் செய்யப்படுவதன் மூலம், ஆணுறுப்பின் கொரோனல் சல்கஸ் பகுதியில் சுரக்கும் ஸ்மெக்மா கழிவு அதிக மெனக்கெடல் இல்லாமலேயே சுத்தமாகிறது. உண்மையில் இது ஒரு விஞ்ஞானப்பூர்வமான ஏற்பாடுதான். ஆனால், இந்த முன் தோலை நீக்குதல் (Circumcision) எனும் சுன்னத் தொடர்பாய் பலவிதமான மூட நம்பிக்கைகளும் நம் சமூகங்களில் உலவிக் கொண்டிருப்பதை இங்கு சொல்ல வேண்டும்.
அதாவது, முன் தோலை நீக்குவதன் மூலம் ஆண்களுக்கு விந்துமுந்துதல் போன்ற பிரச்சனைகள் வராது என்ற மூட நம்பிக்கையுள்ளது. இதில் உண்மையில்லை. முன் தோலை நீக்குவதற்கும் விந்துமுந்துதல் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு ஒரு மூட நம்பிக்கை மட்டுமே. மேலும் இதனால் பால்வினை நோய்கள் வராது என்ற நம்பிக்கையும் உள்ளது. இதுவும் மருத்துவரீதியில் தவறான
கருத்துதான்.
கடவுள் கொடுத்த உறுப்பை நாம் திருத்தக்கூடாது என்றொரு தவறான சிந்தனையும் நம் சமூகங்களில் உள்ளது. இதுவும் தவறு. நம் உடலுறுப்புகளைக் கொடுத்த கடவுள்தான், நமக்கு சிந்திப்பதற்கான அறிவையும் கொடுத்திருக்கிறார். எனவே, நமக்கு ஓர் உறுப்பால் பிரச்சனை இருக்கும் என்றால் சிகிச்சை மூலம் அதனை திருத்தியமைப்பதில் தவறே இல்லை.