நியூஸ் பைட்ஸ்!!(மருத்துவம்)
பார்வை இல்லாதவருக்கு உதவும் ரேடியோ சேனல்
அமெரிக்காவில் உள்ள நியூ ஓர்லியன்ஸ் நகரில் இயங்கி வரும் ஒரு வானொலி நிலையம் பார்வையற்றோருக்கு தேவையான தகவல்களை ஒலிபரப்பு செய்து வருகிறது. தன்னார்வ தொண்டு மூலம் நடத்தப்படும் இந்த வானொலி நிலையத்திற்கு தினமும் சமூக ஆர்வலர்கள் வந்து அன்றைய முக்கிய செய்திகளுடன், குழந்தைகளுக்கான கதைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதுடன், பார்வையற்றோரின் தனிமையை போக்கி அவர்களுக்கு ஒரு நல்ல துணையாகவும் செயல்படுவதாக தெரிவிக்கின்றனர்.
விமானி உரிமம் மறுப்பு, நீதிமன்றத்தை நாடியுள்ள திருநர்
கேரளாவைச் சேர்ந்த 23 வயதான ஆடம் ஹாரி இந்தியாவில் கமர்ஷியல் விமானங்களின் பைலட்டாக வேண்டும் என்ற கனவில் 2019ல் கேரள அரசாங்கம் மூலம் ராஜீவ் காந்தி அகாடமி ஃபார் ஏவியேஷன் டெக்னாலஜியில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை பெற்றார். 2020ல் அதற்கான மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, ஆடம் நிராகரிக்கப்பட்டார். இதற்கு அவர் உட்கொள்ளும் ஹார்மோன் தெரபியை அந்த அமைப்பு காரணம் காட்டியுள்ளது. இதனால் மருத்துவரின் அறிவுரையை கேட்காமல் ஹார்மோன் தெரபியை நிறுத்திய பின்னரும், அவரது கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. லண்டன், அமெரிக்கா என பிற நாடுகளில் ஆடம் விமானியாக தகுதியானவர் என்ற போது இந்தியாவில் மட்டும் இப்படி திருநர்களுக்கு எதிரான பாகுபாட்டை கண்டித்து இந்த போராட்டத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பெண்கள், குழந்தைகள் சுகாதார பாதுகாப்பில் புதிய சாதனை
தெலுங்கானா அரசு அங்கன்வாடி மையம் மூலம் 4.72 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கும், 17.63 லட்சம் குழந்தை பெற்ற தாய்களுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு பயனாளருக்கும் நாளொன்றுக்கு 24.77 ரூபாய் மதிப்புள்ள உதவிகளை வழங்கி வருகிறது. இத்திட்டம் மூலம் 6 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கென சத்தான உணவுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நடவடிக்கையால் பிரசவத்தின் போது பெண்களின் இறப்பு சதவீதமானது 56 சதவீதமாக, பிறக்கும் குழந்தைகளின் இறப்பு சதவீத எண்ணிக்கையானது 23 ஆகவும் குறைந்து விட்டிருக்கிறது என கூறப்படுகிறது. இது தேசிய சராசரி இறப்பு எண்ணிக்கையில் இருந்து குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மாநிலமாகவும் தெலுங்கானா திகழ்கிறது.
குப்பையை நிலத்திற்கு கொண்டு வரும் ஷார்க் ரோபோ
கடலில் சேரும் குப்பையை தடுக்கும் விதத்தில், நீரில் நீந்தி சென்று அங்கிருக்கும் குப்பைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் நிலப்பரப்புக்கே வரும் புதிய ரோபோவை டட்ச் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த ரோபோ ஷார்க் 350 கிலோ குப்பைகளை ஒரே நேரத்தில் நிலத்திற்கு கொண்டு வரும் தன்மையைக் கொண்டது.