கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
* தேனுடன் கதலி வாழைப்பழத்தை நன்றாக மசித்து சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அதனை இணைத்து பிசைந்தால் நல்ல டேஸ்டான சப்பாத்தி கிடைக்கும்.
– பி.கவிதா, சிதம்பரம்.
* பொரித்த அப்பளங்கள் நமத்துப்போய் மீந்துவிட்டால் துண்டு துண்டாக கிழித்து வெறும் வாணலியில் வறுத்து சிறிது தேங்காய், கறிவேப்பிலை, புளி, பச்சை மிளகாய் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் அப்பளத் துவையல் ரெடி.
* அரிசி மாவு மூன்று கப், பொட்டுக்கடலை மாவு ஒரு கப் சேர்த்து தேன்குழல் தயார் செய்து பாருங்கள். புதுவிதமான தேன்குழல் ரெடி.
– கவிதா பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
* பருப்புத் துவையல் அரைக்கும்போது கடைசியில் பச்சைப்பூண்டு நான்கு பல் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்.
* எந்த சுண்டல் செய்தாலும், இறக்கி வைத்து சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்துவிட்டால், சுண்டல் அதிக சுவையாக இருக்கும். செரிமானம் ஆகும்.
– கே.சாந்தி, சென்னை.
* வெயில் காலத்தில் பருப்பு வேகும்போது ஒரு ஸ்பூன் சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். மலச்சிக்கல் ஏற்படாது.
* சௌசௌ போலவே பப்பாளிக்காயிலும் கூட்டு, பொரியல், சாம்பார், மோர்க்குழம்பு செய்து சாப்பிடலாம்.
– கே.சாயிஹாதன், சென்னை.
* இது மாம்பழ சீசன். நன்றாக முதிர்ந்த பழமாகாத மாங்காயை சுத்தம் செய்து தோலுடன் தேங்காய் துருவல் போல் துருவி நான்கு, ஐந்து நாட்களுக்கு வெயிலில் காய வைத்து எடுத்து மிக்ஸியில் போட்டு மாவு போல் பொடித்துக்கொள்ளவும். அதை எடுத்து ஜல்லடையில் போட்டு சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்கவும். சமயத்தில் புளி போடாமல் சமையல் செய்யும்போது இந்த மாங்காய் பவுடரைப் போட்டு சமைத்துப் பாருங்கள். ஒரு வித்தியாசமான ருசியை உணர்வீர்கள்.
– எம். ஸ்ரீவித்யா, கோவை.
* பாகற்காய், கோவைக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை வட்ட வட்டமாக நறுக்கி இரண்டு கரண்டி அரிசி மாவு, ஒரு கரண்டி கடலை மாவு, ஒரு கரண்டி சோள மாவு, உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றுடன் கலந்து பிசிறி சிறிது நேரம் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான கரகரப்பான வறுவல் ரெடி. எண்ணெயும் குடிக்காது.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
* இளசான தேங்காயை துருவினால் அது கொத்து கொத்தாக விழும். இந்த மாதிரி தேங்காயை உடைத்து ஃபிரிட்ஜில் சில மணி நேரமாவது வைத்திருந்து பின் துருவினால் அது பூப்பூவாக விழும்.
* பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவும், ஒரு டீஸ்பூன் ரவையும் சேர்த்து பிசைந்தால் பூரி உப்பலாக வரும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
* கால் கிலோ கோதுமை மாவில் இரண்டு தக்காளியை தோல் நீக்கி, மிக்ஸியில் போட்டு, சிறிது கொத்து மல்லித்தழைகளும் போட்டு, உப்புடன் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அடித்து பிசைந்து பூரி செய்தால், உப்பலாக நன்றாகப் பொரிந்து அபார சுவையுடன் சூப்பராக இருக்கும்.
* பிரட்டை டோஸ்ட் செய்யும்போது பால் பவுடரை சிறிது வெந்நீரில் கரைத்து பிரட்டின் மேல் ஊற்றிச் செய்தால் (நெய் இல்லாமலேயே) டேஸ்ட் சூப்பராக இருக்கும்.
* வற்றல் குழம்பு செய்யும்போது ஒரு துண்டு சுக்கு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைத்து, கொதிக்க வைத்து இறக்கி, வெங்காய வடகத்தை நெய் விட்டுத் தாளித்துக் கொட்டினால் வீடே மணக்கும்.
– அமுதா அசோக்ராஜா, திருச்சி.
* வீட்டைத் துடைக்கும்போது ‘மாப்’பின் பிளாஸ்டிக் கைப்பிடி நீள அளவுக்கு ஸ்பான்ஞ் அல்லது துணியை நுழைத்து வைத்தால் எளிதில் உடையாது.
* பாட்டிலின் மூடி அழுந்தப் படிந்து திறக்க முடியாமலிருந்தால் வெந்நீரில் துணியை நனைத்து திறந்தால் எளிதில் திறந்து கொள்ளும்.
* சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு கப் புழுங்கலரிசியை சேர்த்து அரைக்க, பொடி சேர்த்து செய்யும் சாம்பார் குழைவாக, கெட்டியாக இருப்பதுடன் பருப்பு அதிகம் சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
– மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.
கொழுப்பை குறைக்கும் கடுகு சாதம்!
உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி கடுகுக்கு உண்டு. இப்போது இந்த கடுகை வைத்து சுவையான சாதம் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
உதிரியாக வேகவைத்த சாதம் – 2 கப்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 2 டீஸ்பூன்,
புளி – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
பச்சை மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்,
வெல்லம் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை
தேங்காய்த் துருவல், கடுகு, புளி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் மஞ்சள்தூள் சேர்த்துக் கிளற வேண்டும். கடைசியாக அதனுடன் வேகவைத்த சாதம், அரைத்தப் பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறினால், சுவையான கடுகு சாதம் தயார்!