வீட்டை அலங்கரிக்கும் எம்பிராய்டரி!!(மகளிர் பக்கம்)
எம்பிராய்டரி மிகவும் பொதுவான மற்றும் நீண்டகாலமாக அறியப்பட்ட ஊசி வேலைப்பாடுகளில் ஒன்று. நம் பாட்டி, அம்மா, அத்தை எல்லாரும் வீட்டில் கைக்குட்டைகளில் சின்னதாக பூ டிசைன்களை எம்பிராய்டரி செய்வதை பார்த்து இருப்போம். இதில் இப்போது பல தொழில்நுட்பங்களை புகுத்தி இதனை எளிதாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் செய்ய வழி வகுத்துள்ளது. கைக்குட்டையில் மட்டும் இல்லாமல், குஷன் கவர்கள், சுடிதார்கள் மற்றும் புடவையிலும் நாம் விரும்பும் டிசைன்களை செய்யலாம். இதில் பல டிசைன்கள் உள்ளன என்பதால், அதனை நாம் எளிதாக கற்றுக்கொள்வதற்காகவே இப்போது ஆப்கள் உள்ளன. லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் இதனை கற்றுக் கொண்டால், ஒரு கலையை கற்றுக் கொண்டது போலவும் இருக்கும். அதே சமயம் நம் வீட்டை நாமே அழகுப்படுத்தும் போது, அதில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. அப்புறம் என்ன… ஆப்பை டவுண்லோட் செய்யுங்க… உங்கள் வீட்டை அழகுபடுத்துங்க…
சிம்பிள் ஹாண்ட் எம்பிராய்டரி
எம்பிராய்டரி பழங்கால கலை. இதனை வடிவமைப்பதற்காக பல தரமான இயந்திரங்கள் இருந்தாலும் அதனை கையால் வடிவமைக்கும் போது அதற்கான டிமாண்ட் கொஞ்சம் அதிகம் தான். மேலும் கைகளால் செய்யப்படும் வேலைப்பாட்டில் இருக்கும் திருப்தி இயந்திரங்களில் வராது. எம்பிராய்டரி கைகளால் போடும் போது, அதற்கு சிறப்பு திறன் மற்றும் முழுமையாக அதை பயின்று இருக்க வேண்டும். இதை கற்றுக் கொள்ள அதிக நேரம் எடுக்கும் என்பதால் பொறுமை மிகவும் அவசியம். இந்த ஆப்பில் பலதரப்பட்ட வடிவங்கள் மற்றும் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே எம்பிராய்டரி செய்ய ெதரியும் என்றால், அவர்கள் அந்த டிசைன்களை டவுண்லோட் செய்து செய்யலாம். தெரியாதவர்கள் முதலில் சிம்பிளான டிசைன்களை டவுண்லோட் செய்து அதை பலமுறை பயிற்சி எடுக்கலாம். அல்லது சிம்பிளான டிசைன்களை முதலில் கற்றுக் கொண்டு பிறகு அடுத்த கட்டத்திற்கு பயிற்சி எடுக்கலாம். மேலும் எம்பிராய்டரியை கையால் வடிவமைக்கும் போது, அதன் டிசைன்களில் கொஞ்சம் தவறு ஏற்பட்டாலும் முழு டிசைனையும் அது பாதிக்கும். முறையான பயிற்சி இதற்கு மிகவும் அவசியம்.
EMB கார்ட் எம்பிராய்டரி
ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிராய்டரி டிசைன்கள் இந்த ஆப்பில் கொட்டிக் கிடக்கிறது. இணையம் மூலமாகவே எம்பிராய்டரியினை எவ்வளவு எளிதாக கற்றுக் கொள்ள முடியுமோ அதற்கு ஏற்ற ஆப் தான் EMB கார்ட. இதில் மல்டி டிசைன் எம்பிராய்டரி, கோர்டிங் டிசைன்கள் (corfing designs), சீக்வின் டிசைன் (sequin design) மற்றும் செயின் ஸ்டிச் எம்பிராய்டரி (chain stitch design) என பல வகைகள் உள்ளன. அவை எல்லாம் எவ்வாறு போடலாம் என்று இதில் கற்றுக் கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் இந்த டிசைன்களை புடவைகள், பிளவுஸ்கள், சுடிதார்கள், வீட்டில் உள்ள அலங்கார பொருட்கள் என பலவற்றில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த விவரங்களும் உள்ளன. மேலும் உங்களுக்கு பிடித்த டிசைன்களையும் எவ்வாறு வடிவமைக்கலாம் என்பது குறித்தும் இதில் குறிப்பிட்டுள்ளது.
முதலில் ஆப்பினை உங்க செல்போனில் டவுண்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கான கணக்கினை துவங்க வேண்டும். அப்போது தான் அதில் உள்ள பல எம்பிராய்டரி டிசைன்களை நீங்கள் பயன்படுத்த முடியும். அடுத்து நீங்கள் விரும்பும் எம்பிராய்டரி டிசைன்களை தரம் பிரித்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதில் ஏதும் சந்தேகம் இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சலில் உங்களின் சந்தேகங்களை எழுதி அனுப்பினால், அதற்கான தீர்வினை உடனடியாக அளிப்பார்கள்.
எம்பிராய்டரி பேட்டர்ன் டிசைன்ஸ்
எம்பிராய்டரி உங்களின் வீட்டை அலங்கரிக்கும் ஒரு உன்னத கலை. மிகச் சிறந்த பொழுபோக்கு மட்டும் இல்லை, உங்களின் நேரமும் பயனுள்ளதாக கழிக்க உதவும். பொதுவாக எம்பிராய்டரி என்றால் பூ, மரம், கிளி, மயில் போன்ற வேலைப்பாடுகள் தான் இருக்கும். ஆனால் இந்த ஆப்பில் மிகவும் உன்னதமான மற்றும் தனித்துவமான டிசைன்கள் உள்ளன. மேலும் படைப்பாற்றலுக்கு எல்லைகளே கிடையாது என்பதால் உங்களின் கற்பனை திறனை இதில் ஓடவிடலாம்.
எம்பிராய்டரி, வண்ண வண்ண நூல்களை கொண்டு விரும்பும் டிசைன்களை பெயின்ட் செய்வது. எம்பிராய்டரி இல்லாத உடைகளே இல்லை என்று சொல்லலாம். இவை பெண்களின் உடைகளில் மட்டுமில்லை.
ஆண்களின் சட்டையில் கஃப் போடும் இடத்தில் சின்னதாக எம்பிராய்டரி செய்யலாம். அதே போல் குழுந்தைகளின் உடைகளிலும் இதனை பயன்படுத்தலாம். நூல் என்பதால், குழந்தைகளின் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. இது போன்ற அனைத்து தரப்பினருக்கும் என்ன பேட்டர்ன் கொண்டு உடையினை அலங்கரிக்கலாம் என்று இந்த ஆப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள சிம்பிள் டிசைன்கள் முதன் முதலில் இதனை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. விரும்பிய டிசைன்களை இலவசமாக டவுண்லோடும் செய்து கொள்ளலாம்.
எம்பிராய்டரி பிளவுஸ் டிசைன்ஸ்
புடவையை விட அதற்கான மேட்சிங் பிளவுஸ் அணிவது தான் இப்போது லேட்டெஸ்ட் டிரண்ட். புடவை சிம்பிளாக இருந்தாலும், பிளவுஸ் கிராண்டாக வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காகவே அவர்கள் சிறப்பாக டிசைன் செய்து கொள்கிறார்கள். எம்பிராய்டரி என்றால் காட்டன் துணியில் மட்டுமே நூல் வேலைப்பாடுகள் செய்வது இல்லை. நெட்டெட், ஷிபான், லேஸ்… பலதரப்பட்ட துணி ரகங்களில் டிசைன் செய்யலாம். பிளவுசின் கை பகுதியில் மட்டும் இல்லாமல், கழுத்து, முதுகு, தோள்பட்டை என விரும்பும் இடங்களில் வடிவமைக்கலாம். இந்த ஆப் மூலம் ஒரு பிளவுசில் எப்படி எல்லாம் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யலாம் என்று எளியவர்களும் தெரிந்து கொள்ளும் படி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரண பிளவுஸ், பார்ட்டி வேர், கல்யாண புடவைகள் என பல டிசைன்கள் இதில் குவிந்துள்ளன. உயர் தரமான புகைப்படங்கள் என்பதால், ஒவ்வொரு டிசைன்களையும் பெரிதுபடுத்தி பார்த்து அதன் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.