ஆரோக்கிய சுண்டல்கள்!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 18 Second

சுண்டல் என்றாலே நம்முடைய மனத்திரையில் வருவது கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை தான். இதைத் தான் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். சத்தானது என்றாலும், அதையே சாப்பிடும் போது, குழந்தைகளுக்கும் சலிப்பு தட்டிவிடும். இதில் சில மாற்றங்கள் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். புரதச் சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கும் நல்லது. மேலும் இந்த காலக்கட்டத்தில் ஆரோக்கியமான உணவே மருந்து என்பதால், புது விதமான வித்தியாசமான, சத்தான சுண்டல்களை தோழியருக்காக படைத்துள்ளார் சமையல் கலைஞர் குப்பம்மாள்.

டிரை ஃப்ரூட்ஸ் சுண்டல்

தேவையானவை:

முளைக்கட்டிய பச்சைப் பயறு – 1 கப்,
நறுக்கிய பாதாம்,
பிஸ்தா,
முந்திரி,
உலர் திராட்சை தலா – 2  டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
பேரீச்சை நறுக்கியது – ½ கப்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

முளைக்கட்டிய பச்சைப் பருப்பை உப்புச் சேர்த்து தண்ணீர் தெளித்து ஆவியில் வேகவைத்து, வெந்தபின் இறக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் வெந்த பச்சைப்பயறு, முந்திரி, திராட்சை, பாதாம், நறுக்கிய பேரீச்சைத் துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே தேங்காத் துருவலை தூவி அலங்கரிக்கவும். சத்தான, சுவையான “டிரை ஃப்ரூட்ஸ் சுண்டல்” ரெடி.

கறுப்பு உளுந்து சுண்டல்

தேவையானவை:

கறுப்பு முழு உளுந்து – 1 கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
சீரகம்,
கடுகு தலா – ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்கா துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கறுப்பு உளுந்தை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறவைத்த கறுப்பு உளுந்தை குக்கரில் வேகவைத்து, தண்ணீரை வடித்து விடவும். இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பும் சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனைப் போனதும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான, சத்தான நவராத்திரிக்கான ‘கறுப்பு உளுந்து சுண்டல்’ ரெடி.

குறிப்பு: அந்தச் சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் இது.

மக்காச்சோள சுண்டல்

தேவையானவை:

மக்காச் சோளம் – 1 கப்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
சீரகம்,
பெருங்காயத் தூள் – தலா ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.
எண்ணெய்,
உப்பு – தேவைக்கேற்ப.

அரைக்க :

இஞ்சி சிறிய துண்டு,
பச்சை மிளகாய்,
பூண்டுப்பல் தலா – 3,
சோம்பு ¼ டீஸ்பூன்.

செய்முறை:

மக்காச் சோளத்தை 10 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியப்பின் குக்கரில் நன்றாக வேகவைத்து இறக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானது கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் தாளித்து பின் வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்புச் சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து நன்கு வதக்கவும். 2 நிமிடம் கழித்து தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

பட்டர் பீன்ஸ் சுண்டல்

தேவையானவை:

உரித்து வேகவைத்த பட்டர் பீன்ஸ் – 1 கப்,
சோம்பு – ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் தாளித்து வெந்த பட்டர் பீன்ஸ், கரம் மசாலாத் தூள், உப்பும் ேசர்த்து கிளறி தேங்காய் துருவல் தூவி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு கொத்தமல்லித் தழை தூவலாம்.
மக்ரோனி, வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை:

வேகவைத்த மக்ரோனி – 2 கப்,
வேக வைத்த வேர்க்கடலை – 1/2 கப்,
பச்சை மிளகாய் நறுக்கியது – 2,
வெங்காயம் நறுக்கியது – ½ கப்,
தேங்காய் துருவல் – ¼ கப்,
கடுகு,
உளுத்தம் பருப்பு – ¼ டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவைக்கேற்ப.
கொத்தமல்லி,
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலைத் தாளித்து பின் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கியப் பின் வேகவைத்த  மக்ரோனியைப் போட்டு உப்புச் சேர்த்து நன்றாக வதக்கவும். இறக்கும் சமயத்தில் வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: மக்ரோனியை தண்ணீரில் வேகவைக்கும்போது தண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு வேகவைக்கவும். அப்போது தான் மக்ரோனி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

தோசைக்காய், பாசிப்பருப்பு சுண்டல்

தேவையானவை:

ஊறவைத்த பாசிப்பருப்பு – 2 கப்,
சிறிது சிறிதாக நறுக்கிய தோசைக்காய் – 2 கப்,
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது),
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது),
கடுகு,
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ½ டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – ½ கப்,
உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் ஊறவைத்த பாசிப்பருப்பைப் போட்டு சிறு தீயில் வதக்கவும். பருப்பு அந்த சூட்டிலே வெந்து, பருப்பு கலர் மாறும். பச்சை வாசனை போனபின் தோசைக்காயை சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு விட்டு வதக்கவும். ஒன்றாக வதங்கிய பின் தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: தோசைக்காயில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் வற்றும் வரை வாணலில் வதக்கவும்.

அரிசி மாவு உருண்டை, எள்ளு சுண்டல்

தேவையானவை:

அரிசி மாவு  – 2 கப்,
வறுத்த ஒன்றிரண்டாக பொடித்த எள்ளு – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 3,
வெங்காயம் நறுக்கியது – ½ கப்,
கடுகு,
சீரகம் – ½ டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
இஞ்சி,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது.

செய்முறை:

முதலில் ஒரு  பாத்திரத்தில் அரிசி மாவைப் போட்டு சிறிது உப்பு, எண்ணெய் விட்டு சுடுதண்ணீர் ஊற்றி கெட்டியாகவும், நன்றாகவும் பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு நெல்லிக்காய் அளவு உருட்டி அடுப்பில் இட்லி பானை வைத்து அரிசி மாவு உருண்டைகளை ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து ஆறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்த பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதுச் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் வேக வைத்துள்ள அரிசி மாவு உருண்டைகளைப் போட்டு சிறிது உப்புச் சேர்த்து உருண்டைகளில் எல்லாம் ஒட்டும்படி வதக்கியபின், எள்ளுபொடி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
குறிப்பு: அரிசி மாவுப் பிசையும் போது எண்ணெய் விட்டுப் பிசைவதால் உருண்டைகள் வெந்தபின் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். எள்ளுப் பொடி, இஞ்சி, பூண்டு விழுது சேர்வதால் இந்தஉருண்டைச் சுண்டல் மிக ருசியாகவும் இருக்கும்.

கொரோனாவை விரட்டிடலாம்!

கொரோனா தொற்று ஒரு பக்கம் இருந்தாலும், நாம் எல்லோரும் அன்றாட வாழ்க்கைக்கு பழகி வர ஆரம்பித்துவிட்டோம். இருந்தாலும், இந்த தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில விஷயங்களை அன்றாடம் கடைப்பிடிப்பது அவசியம்.

* சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் நீரைத் தெளிக்கலாம்.
* தினமும் வெது வெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம்.
* வீட்டில் சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை, வெண் கடுகு, ஓமம், பூண்டு தோல் கலந்து புகை போடலாம்.
* வேப்பிலை, யூகலிப்டஸ் தைலம் அல்லது நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் ஆவி பிடிக்கலாம்.
* சிறு தானியங்களான கேழ்வரகு, சாமை, தினை, குதிரை வாலி ஆகியவற்றை உணவாக சமைத்துச் சாப்பிடலாம்.
* பயறு வகைகளான ஜிங்க் சத்துள்ள நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கொண்டைக் கடலை போன்றவற்றை சுண்டலாக மாலையில் சாப்பிடலாம்.
*மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக் கீரைகளை சமைத்து சாப்பிடலாம்.
* கசப்புச் சுவையுள்ள சுண்டைக்காய், பாகற்காய், வேப்பம்பூ ரசம், தூதுவளை ரசம் இவற்றை சாப்பிடலாம்.

விக்கலை போக்கும் புதினா

* புதினாக் கீரையில் உயிர்ச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது.
* அடிக்கடி விக்கல் ஏற்பட்டால் புதினாக் கீரையை சூப் செய்து சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.
* ரத்தத்தைச் சுத்தி செய்வதில் மிகச் சிறந்த பங்காற்றுகிறது.
* சட்னி, ஜூஸ் என்று எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும், இதன் பொது குணங்கள் மாறாது.
* அசைவம் மற்றும் கொழுப்புப் பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் போஷிசன்கள் பலவிதம்….!!(அவ்வப்போது கிளாமர்)
Next post தீபாவளி பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)