தொப்புள்கொடி.. நம் உயிர்க்கொடி!!(மருத்துவம்)
மனித உடலில் கோடிக்கணக்கில் உயிரணுக்கள் உள்ளன. இதன் முக்கிய பொறுப்பு நம் உடலை செயல்பட வைப்பது. இதயத்தை துடிக்க வைப்பது, மூளையை சிந்திக்க வைப்பது, சிறுநீரகத்தை செயல்பட வைப்பது, பழைய ரத்தம் சுத்திகரிக்க வைப்பது, பழைய தோல் உதிரும் பொழுது புதிய தோல் உண்டாக்குவது போன்ற பல செயல்களை செய்வது தான் இந்த உயிரணுக்களின் வேலை. அதில் ஸ்டெம் செல்களின் முக்கிய பொறுப்பு மனித உடல் இயங்க முக்கிய பங்கு வகிக்கும் உயிரணுக்களை உருவாக்குவது.
நம் உடலில் சிறு அடிப்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்படும் போது, அப்பகுதியில் உயிரணுக்கள் இறக்க நேரிடுகிறது. அந்த சமயத்தில் ஸ்டெம்செல்களை நம் உடலில் செலுத்தும் போது இறந்து போன உயிரணுக்கள் மீண்டும் உயிரோட்டம் பெறுகின்றன. ஸ்டெம்செல்கள் எவ்வாறு உருவாகின்றன, அதனை சேமிக்கும் முறைகள் மற்றும் அதனால் ஏந்த நோயினை குணப்படுத்தலாம் என்று விவரிக்கிறார் மகப்பேறு மருத்துவர் டாக்டர் தீப்தி ஜாமி.
‘‘பொதுவாக ஒரு கரு உருவாகும் போதே அந்த கருவில் இருந்து உருவாகும் ஸ்டெம் செல்லில் இருந்துதான் சிசுவின் உடல் உறுப்புகள் அனைத்துமே உருவாகிறது. கருத்தரிக்கும் போது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் பாலத்தை உண்டாக்குவது தொப்புள் கொடி. 30 முதல் 40 செ.மீ நீளமான இந்த தொப்புள் கொடி மூலமாகத்தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் ஆகாரங்களும் செல்கிறது. இதில் குழந்தையின் ரத்தம் தொப்புள் கொடியில் இருக்கும். குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை வெட்டி விடுவோம்.
இதில் இருக்கும் கெட்டியான திசுக்கள், கொடியின் கெட்டி பகுதி இரண்டிலும் உயிரணுக்கள் இருக்கும். பொதுவாக நாம் இந்த தொப்புள் கொடியை கத்தரித்து குப்பையில் தான் போடுவோம். ஆனால் அதில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களை சேமித்தால், குழந்தையின் வாழ்நாளில் உடலில் எந்த உறுப்பில் குறைபாடு நேர்ந்தாலும் அதை சரிசெய்ய முடியும்.
ஸ்டெம் செல்கள் எந்த உயிரணுக்களாவும் வளரலாம். கல்லீரல், ஸ்பிலீன், ரத்தத்தில் ஏற்படும் புற்றுநோய் போன்ற குறைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் ஸ்டெம் செல்கள் மூலமாக குணப்படுத்தலாம்.
குழந்தை பிறந்து அந்த நஞ்சுக் கொடியை பிரிக்கும் ேபாது, அதிலிருந்து 100 மிலி ரத்தத்தை உடனே சேகரிக்கணும். சேகரிக்கப்பட்ட அந்த ரத்தத்தை ஸ்டெம் செல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிடுவோம். இவ்வாறு சேகரிக்கப்படும் ஸ்டெம்செல்களை பப்ளிக் மற்றும் பிரைவேட் வங்கிகளில் சேமிக்கலாம்.
பப்ளிக் என்பது பொதுவான வங்கி. இங்கு பலத்தரப்பட்ட தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம்செல்கள் இலவசமாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். மேலும் நம் குழந்தையின் ஸ்டெம் செல்கள் நமக்கு மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தப்படும். பிரைவேட் வங்கி என்றால், நம் குழந்தையின் ஸ்டெம்செல்களை நம்முடைய தேவைக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.
இதற்கு வருடம் ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஸ்டெம்செல்கள் குழந்தைக்கோ அல்லது அதன் உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள் ஏன் தாத்தா பாட்டி என ரத்த சம்மந்தப்பட்ட உறவுகள் மட்டுமல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் முன் HLA – Human Leukocyte Antigens டைப்பிங் என்ற ஆய்வு செய்த பிறகு பயன்படுத்தலாம். இது ஒரு விதமான ரத்த பரிசோதனை. அதில் 70% ஒத்துபோனால் மட்டுமே அந்த ஸ்டெம்செல்களை பயன்படுத்த முடியும்.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு தான் அதன் உடலில் உள்ள பிரச்னைகள் தெரிய வரும். சில சமயம் முதல் குழந்தை ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும். அந்த சமயத்தில் மருத்துவர்கள் தாயை இரண்டாவது குழந்தையினை பெற்றுக் கொள்ள சொல்வார்கள். அந்த குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் போது, அதன் தொப்புள் கொடியில் இருந்து சேமிக்கப்படும் ஸ்டெம்செல்களை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செலுத்துவார்கள். இதன் மூலம் அந்த குழந்தைக்கு ரத்த உயிரணுக்கள் புதிதாக தோன்றும்.
இறந்து போன ரத்த உயிரணுக்களை மீண்டும் உயிர் பெற செய்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும். ஸ்டெம்செல் சிகிச்சை சிறப்பானது. உடலில் எந்த உறுப்புக்கு குறைபாடு நேர்கிறதோ அந்த உறுப்புக்கு அதற்கேற்ற ஸ்டெம்செல்களை அனுப்பும் போது அந்த உறுப்பாக அவை வளர்ந்துவிடும். ஸ்டெம்செல்களால் ரத்தபுற்றுநோய், மரபணு சம்பந்தப் பட்ட நோய், ஹீமோகுளோபின் குறைபாட்டால் உண்டாகும் தலசீமியா, இதயம், நரம்பு பிரச்னைகள் போன்றவற்றையும் குணப்படுத்த முடியும்.
குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை தூர எறியாமல் காய்ந்து விழும்போது அதை பத்திரப்படுத்தி பொடித்து தாயத்தினுள் வைத்து கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள். அந்த குழந்தை வளர்ந்து பெரியவர்களாகும் போது ஏதேனும் தீராத நோயால் பாதிக்கப் பட்டால் அந்த தாயத்தை திறந்து தொப்புள் கொடியை பொடியாக்கி உள்ளுக்கு கலந்து கொடுப்பார்கள். மரபியல் ரீதியிலான கோளாறுகளை சரிசெய்துவிட்டாலே எந்தவிதமான நோயும் தாக்காது என்பதை நம் முன்னோர்கள் அப்போதே உணர்ந்திருந்தார்கள்.
இதையே இன்றைய மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்’’ என்றவர் ஸடெம்செல்களை 15 முதல் 20 வருடம் வரை சேமித்து வைக்கலாம் என்று அறிவுறுத்துகிறார். ‘‘ஒரு குழந்தை வளர்ந்து 20 வருஷம் வரை எந்த பாதிப்பும் இல்லை என்றால், அதன் பிறகு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று சொல்லிட முடியாது. காரணம் இன்றைய காலக்கட்டத்தில் ஒருவருக்கு எப்போது எந்த நோயின் பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. மேலும் ஸ்டெம்செல்களை குறிப்பிட்ட காலம் வரை தான் சேமிக்க முடியும் என்ற காலக்கெடு இல்லை.
எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சேமிக்கலாம். தனியார் வங்கியில் கட்டணம் கொடுத்து சேமிக்க முடியாதவர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழக அரசு இணைந்து குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் இலவச வங்கியினை செயல்படுத்தி வருகிறார்கள். அங்கு அவர்கள் சேமித்துக் கொள்ளலாம். மேலும் அங்கு இருக்கும் போது ஒருவரின் ஆயுட்காலம் முழுக்க தேவைப்படவில்லை என்றாலும், அவர்களுக்கு பிறகு அவர்களின் வருங்கால சந்ததியினர் அல்லது மற்றவர்களுக்கு பயன்படும்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஸ்டெம்செல்களை செலுத்துவது என்பது ஒரு நாள் சிகிச்சை என்றாலும், அதன் பிறகு அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பது அவசியம். இதை சாதாரண மருத்துவமனைகளில் செய்ய முடியாது. இதற்கென ஹெமடாலஜி துறை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு முதலில் ஸ்டெம்செல்கள் அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு சேருமா என்று ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு எந்த பகுதியில் செலுத்த வேண்டுமோ அங்கு IV மூலம் உடலில் செலுத்தப்படும். பிறகு இரண்டு நாள்கள் அந்த செல்களின் செயல்பாட்டினை கண்காணிக்க வேண்டும்.
பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை குழந்தையை கண்காணிக்க வேண்டும். சுமார் 80 வகையான ரத்த சம்மந்தான பிரச்னைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை தீர்வாக அமைந்து வருகிறது. தற்போது ரத்த மற்றும் மரபணு சம்மந்தமான பிரச்னைகள் மட்டுமில்லாமல் ஸ்டெம்செல்கள் ஆடிசம் மற்றும் செரிபிரல் பால்சிக்கும் ஒரு தீர்வாக ஆமையுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்’’ என்றார் மகப்பேறு நிபுணர் டாக்டர் தீப்தி ஜாமி.