பலாப்பழ சமையல்!!(மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 27 Second

முக்கனிகளில் ஒன்று பலா. மாம்பழத்திற்கு அடுத்து அனைவராலும் விரும்பப்படும் பழமும் இது தான். பலாவைப் பொறுத்தவரை பிஞ்சுக்காய், அதன் சுளை, சக்கை, கொட்டை அனைத்திலும் விதவிதமான உணவுகளை சமைத்து அசத்தலாம். பொதுவாக வெயில் காலத்தில் தான் இந்த பழத்தின் சீசன் என்பதால், அதிகம் கிடைக்கும். தெருக்கு தெரு பலாப்பழங்கள் விற்பனை இருக்கும் என்பதால், பழத்தின் வாசனை எல்லா இடங்களிலும் வீசும். பலாப்பழம் சத்துக்கள் நிரம்பியது. பலாக்கொட்டை மருத்துவ குணங்கள் கொண்டது. அப்படிப்பட்ட சுவையான சத்துக்கள் நிறைந்த பலாப்பழத்தைக் கொண்டு சுவையான உணவுகளை எவ்வாறு சமைக்கலாம் என்று விவரிக்கிறார் சமையல் கலைஞர் ராஜகுமாரி.

பலாமோசு கறி

தேவையானவை:

தோல் நீக்கி சிறிய துண்டுகளாக அரிந்த பலாப்பிஞ்சு – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
உதிர் உதிராக வெந்த பயத்தம் பருப்பு – 6 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ¼ கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்,
வரமிளகாய் – 2,
கறிவேப்பிலை – 10 இதழ்கள்,
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பலாப்பிஞ்சினை உப்பு சேர்த்து அளவான நீர் விட்டு (விருப்பப்பட்டால் மட்டும் ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து) குழையாமல் வேகவிடவும். வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து வெந்த பலாமோசினைப் போட்டு புரட்டி, பயத்தம் பருப்பு சேர்த்து மேலும் ஒரு முறை புரட்டி தேங்காய்த்துருவல் தூவி இறக்கி எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விடவும். இது சாம்பார், ரசம், குழம்பு சாதங்களுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

பலாமோசு கோலா உருண்டை பிரியாணி

தேவையானவை :

கோலா உருண்டை செய்வதற்கு :

தோல் நீக்கி பொடியாக அரிந்த பலாமோசு – 1 கப்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் – ½ டீஸ்பூன்,
சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்,
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்,
பிரட்க்ரம்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

பிரியாணி செய்வதற்கு:

பாசுமதி அரிசி – 1½ கப்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்.

அரைப்பதற்கு:

தேங்காய்த்துருவல் – ¼ கப்,
பச்சைமிளகாய் – 2,
தக்காளி – 1,
சோம்பு – 1 டீஸ்பூன்,
பட்டை – 1 சிறியதுண்டு,
பிரியாணி இலை – சிறியது,
முந்திரித் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பலாமோசினை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த மோசில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சோளமாவு, அரிசிமாவு, ப்ரட்க்ரம்ஸ் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்து காய்ந்ததும் பொரித்து தனியே வைக்கவும். குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு பெரிய வெங்காயம் அரிந்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து அரைக்க கொடுத்தவற்றை அரைத்துச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி வெளியேறியதும் பொரித்து வைத்துள்ள பலா மோசு கோலா உருண்டைகளைச் சேர்த்து (மல்லித்தழை, புதினா இலை பொடியாக அரிந்து தலா 1 டேபிள்ஸ்பூன்) இவற்றையும் சேர்த்துக் கிளறிவிடவும். தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பலாக்கோது குழம்பு

தேவையானவை :

பலாக்கோது அரிந்தது – 1½ – கப்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 3 டேபிள் ஸ்பூன்,
துருவிய வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்,
புளிக்கரைசல் – ½ கப்.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உதிர்த்த குழம்பு வடகம் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பலாக் கோதினை(2 பலாச்சுளைகளையும் செர்த்து பொடியாக அரிந்தது. சில முற்றாத பிஞ்சு பலாக் கொட்டை 2 சேர்த்துப் பொடியாக அரியவும்) அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து புளிக்கரைசல் ஊற்றி மேலும் ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பலாக்கோது வெந்து குழம்புடன் சேர்ந்து வந்ததும் வெல்லம் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பலாப்பழத்தை அரிந்ததும் பலாச்சுளையைச் சுற்றிலும் இருப்பது பலாச்சக்கை எனவும், பலாக்கோது எனவும் அழைக்கப்படுகிறது. இந்தப் பலாக்கோது குழம்பு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் இனிப்பும், காரமும் கலந்த சுவையுடன் அருமையாக இருக்கும்.

பலாப்பழ பாயசம்

தேவையானவை:

நன்கு கனிந்த பெரிய பலாச் சுளைகள் – 15,
துருவிய வெல்லம் – ½ கப்,
கெட்டி தேங்காய்ப்பால் – ½ கப்,
நெய் – 4 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரி துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பலாச்சுளைகளை அரிந்து போட்டு ½ கப் நீர்விட்டு வேகவிடவும். பாதி வெந்ததும் துருவிய வெல்லத்தினைச் சேர்த்து இரண்டு கொதிவிட்டு தேங்காய்ப்பால் சேர்த்து மீண்டும் இரு கொதிவிட்டு ஏலப்பொடி சேர்த்து நெய்யில் முந்திரித்துண்டுகளை வறுத்துச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

பலாப்பழ பிர்ணி

தேவையானவை :

கனிந்த பலாச்சுளைகள் – 10,
பாசுமதி அரிசி – 10 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை – ½ கப்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
பால் – 1 கப்,
நெய் – 4 டேபிள் ஸ்பூன்,
முந்திரி,
திராட்சை – தலா 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பாசுமதி அரிசியை வெறும் சட்டியில் வறுத்து ரவைப்பதத்திற்கு உடைக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் 1 கப் சேர்த்து உடைத்த பாசுமதி அரிசி ரவையைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் பலாச்சுளையை அரிந்து அதில் சேர்த்து வேகவிடவும். பலாச்சுளைகள் குழையாமல் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து இரு கொதிவிட்டு ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்த்து இறக்கவும். மிகவும் சுவையானது இந்தப் பலாப்பழ பிர்ணி.

பலாப்பழ கேசரி

தேவையானவை :

கெட்டி அவல் – 1 கப்,
நெய் – 8 டேபிள் ஸ்பூன்,
பொடியாக அரிந்த பலாச்சுளைகள் – ¼ கப்,
லெமன் புட் கலர் – ¼ டீஸ்பூன்,
சர்க்கரை – 1 கப்,
உடைத்த முந்திரித் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
வில்லைகளாக அரிந்த வாழைப்பழம் – 2 டேபிள் ஸ்பூன்,
அரிந்த ஆப்பிள் துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு, முந்திரித்துண்டுகளை வறுத்துத் தனியே வைக்கவும். மீதியுள்ள நெய்யை ஊற்றி அவலை வறுத்து 1 கப் நீர் ஊற்றி வேகவிடவும். அவல் குழையாமல் வெந்ததும் சர்க்கரைச் சேர்த்து புட்கலர் சேர்த்து சர்க்கரை கரைந்து வெந்ததும் பலா, ஆப்பிள், வாழைப்பழங்களைச் சேர்த்து இறக்கவும். சூட்டிலேயே பழங்கள் வெந்துவிடும். நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விடவும். சுவையான அவல் பலாப்பழ கேசரி தயார்.

பலாக்கொட்டை, மாங்காய் அரைத்துவிட்ட சாம்பார்

தேவையானவை :

பலாக் கொட்டை – 15,
மாங்காய் சிறியது – 1,
குழைய வெந்த துவரம் பருப்பு – ½ கப்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
புளிக்கரைசல் – ½ கப்,
சாம்பார் வெங்காயம் – 6,
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
துருவிய வெல்லம் – 1 டீஸ்பூன்.

வறுத்து அரைப்பதற்கு:

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
வரமிளகாய் – 5,
கடலைப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்,
தனியா – 5 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 6 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
வரமிளகாய் – 1,
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 10 இதழ்கள்.
மேல தூவுவதற்கு – அரிந்த மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:  

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் நீர் விட்டு கெட்டியாக அரைத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சாம்பார் வெங்காயம் அரிந்து வதக்கி ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல் ஊற்றி மேலும் 1 கப் நீர் விட்டு வதக்கிய வெங்காயம் போட்டு மாங்காயை அரிந்து போட்டு பலாக் கொட்டையின் மேல் தோலை உரித்து இரண்டாக அரிந்து போட்டு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வேகவிடவும். காய்கள் முக்கால்பதம் வெந்ததும் அரைத்த விழுதினை ஊற்றி மேலும் இரு கொதி விட்டு துவரம்பருப்பு வேகவைத்ததையும் சேர்த்து தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துச் சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கல்ந்து விடவும். இந்த மாங்காய் பலாக்கொட்டை சாம்பார் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். உப்புமா, பொங்கல் போன்றவற்றிற்கும் ஏற்றது.

பலாக்கொட்டை காரப்போளி

தேவையானவை:

பலாக் கொட்டை – 20,
கோதுமை மாவு – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
ஓமம் – 1 டீஸ்பூன்,
கசூரி மேத்தி – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 டீஸ்பூன்,
பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் – 5 டேபிள் ஸ்பூன்,
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் – 1 டேபிள் ஸ்பூன்,
பொடியாக அரிந்த மல்லித் தழை – 2 டேபிள் ஸ்பூன்.
எண்ணெய் – 10 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பலாக்கொட்டையை நீர்விட்டு வேகவிட்டு அதிகப்படியாக நீர் இருந்தால் வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுற்றிய பலாக்கொட்டை போட்டு அனைத்துப் பொருட்களையும் சேர்த்து எண்ணெய் மட்டும் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி நீர் விட்டு  சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து மாவினை உருட்டி போளியாகத் தட்டி தவாவில் போட்டு ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு புறமும் வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவினையும் இதுபோல் போட்டு எடுக்கவும். அடுப்பினை சிம்மில் வைத்து சாப்ஃட்டாக இருக்குமாறு எடுக்கவும்.

பலாக்கொட்டை காரப் பொரியல்

தேவையானவை :

பலாக்கொட்டை – 20,
தக்காளி – 1,
பெரிய வெங்காயம் – 1,
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
தேங்காய்த்துருவல் – ¼ கப்,
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – ½ டீஸ்பூன்,
சோம்பு – ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 10 இதழ்கள்.
மேலே தூவுவதற்கு – அரிந்த மல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், சோம்பு, கறிவேப்பிலைத் தாளித்து, வெங்காயம், தக்காளி அரிந்து வதக்கி மிளகாய் தூள், உப்பு சேர்த்து பலாக் கொட்டையை நான்காக அரிந்து போட்டு ½ கப் நீர் விட்டு மூடி போட்டு வேகவிடவும். இடையே திறந்து பார்த்துக் கிளறிவிடவும். வெந்ததும் தேங்காய் துருவல் தூவிக் கிளறி மல்லித் தழை தூவி நன்றாகக் கிளறி இறக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோடைக்கு இதமான ஜூஸ்! (மகளிர் பக்கம்)
Next post தொப்புள்கொடி.. நம் உயிர்க்கொடி!!(மருத்துவம்)