மனதால் மிருதுவானவர்கள்! (மகளிர் பக்கம்)
யானைகளை ஆண்களால் மட்டுமே பராமரிக்கவும் அல்லது அதனை சரியான முறையில் நடத்தவும் முடியும் என்ற ஒரு மனநிலை உள்ளது. ஆனால் இந்த நிலையை 47 வருடங்களுக்கு பிறகு தகர்த்து உடைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த லெஜுமோல்.
கேரளாவில் குருவாயூர் தேவஸ்தானத்தின் புன்னத்தூர் கோட்டா என்ற யானை பராமரிப்பு மையம் உள்ளது. இது கேரளாவில் மிகப்பெரிய யானை பராமரிப்பு மையம். இந்த பராமரிப்பு மையத்தின் நிர்வாகியாக தற்போது லெஜுமோல் பொறுப்பேற்றுள்ளார். இந்த மையம் 1975ம் ஆண்டு 21 யானைகள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 44 யானைகள் அதில் 39 ஆண் யானைகள் 5 பெண் யானைகள் இங்குள்ளன. இந்த யானைகளை 150 வேலையாட்கள் பராமரித்து வருகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள், யானை பாகர்கள். ஒரு பெரிய யானை சாம்ராஜ்ஜியத்தினை கட்டியாளும் பொறுப்பினை ஏற்று இருக்கும் லெஜுமோல் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
‘‘யானைகள் எனக்கு புதிதல்ல. நான் நிறைய யானை கதைகளைக் கேட்டு தான் வளர்ந்து இருக்கிறேன். என்னுடைய அப்பா ரவீந்திரன் நாயர் மற்றும் என் மாமனார் சங்கரநாராயணன் இருவரும் குருவாயூர் தேவஸ்தானத்தின் ஆஸ்தான யானைப் பாகர்களாக இருந்து வந்தனர். என்னுடைய அப்பா 27 வருடங்களுக்கு முன் ஒரு பேருந்து விபத்தில் இறந்துவிட்டார். என் மாமனார் தேவஸ்தானத்தின் செல்லக்குட்டி ராமன்குட்டி என்ற யானையின் பாகனாக இருந்துள்ளார். மேலும் அந்த யானை ஒவ்வொரு முறையும் குருவாயூர் திருவிழாவின் போது நடைபெறும் யானைக்கான ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசினை தட்டிச் செல்லும். இப்போது என் மாமனாருக்கு வயதாகிவிட்டதால் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
என் கணவர் பிரசாத்தும் சில காலம் யானைப்பாகனாக இருந்துள்ளார். தற்போது அவர் ஒரு ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இப்படி யானைகள் மற்றும் யானைகளின் கதைகளை கேட்டு வளர்ந்த எனக்கு அவர்களை பராமரிக்கப் போகிறேன்னு நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. அதுவும் ஒரு பெண்ணாக ஏற்று செய்யும் போது எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு’’ என்றவர் தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு தான் தேவஸ்தானத்தில் கிளெர்க் வேலையில் சேர்ந்துள்ளார்.
‘‘1996ம் ஆண்டு அப்பாவின் மறைவு காரணமாக எனக்கு தேவஸ்தானத்தில் வேலை கிடைத்தது. அதன் பிறகு படிப்படியாக பதவி உயர்வு பெற்றேன். கடந்த எட்டு மாதமாக நான் துணை நிர்வாகி பதவி வகித்து வந்தேன். இப்போது இவர்களை பார்த்துக் கொள்ளும் முழு பொறுப்பு என்னுடையது. இவர்கள் அனைவரும் குருவாயூர் கடவுளின் குழந்தைகள். இங்குள்ள அனைத்து யானைகளும் கோயிலில் கடவுளுக்கு செய்யப்படும் ஆராதனையில் ஈடுபடுவார்கள். தினமும் ஐந்து யானைகள் என மாறி மாறி இவர்கள் கிருஷ்ணருக்கு ஆராதனை செய்வார்கள்’’ என்று கூறும் லெஜுமோல், குருவாயூர் கிருஷ்ணாவின் தீவிர பக்தையாம்.
‘‘இந்த புன்னத்தூர் கோட்டையில் என்னுடைய முக்கிய வேலையே நான் இங்குள்ள 150 பணியாட்கள் மட்டுமில்லாமல் யானைகளின் நலன் குறித்தும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் மருந்துகள். யானைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பனை இலைகள், புற்கள் மற்றும் வாழை எல்லாம் தேவஸ்தானம் ஒப்பந்த முறையில் வழங்கி வருகிறது. அவை எல்லாம் சரியாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். மேலும் கால்நடை மருத்துவர்கள் ஒவ்வொரு யானைக்கும் ஏற்ப உணவின் அளவினை நிர்ணயித்து இருப்பார்கள். அந்த அளவு உணவு சரியாக வழங்கப்படுகிறதான்னு கண்காணிக்கணும். எல்லாவற்றையும் விட சில சமயம் யானைகளுக்கு மதம் பிடிக்கும்.
அந்த நேரத்தில் அவர்களை தனிமையாகவும், அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஓய்வு அளிக்க வேண்டும். மாதம் ஒரு முறை மருத்துவர்கள் யானைகளின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்யுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். யானைகள் ஒரு பக்கம் என்றால், அவர்களை பராமரிக்கும் யானை பாகன்களும் என்னுடைய பொறுப்பில் தான் இருப்பார்கள். அவர்களின் சம்பளம் மற்றும் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வது என்னுடைய வேலை. எல்லாவற்றையும் விட இந்த மையத்தின் வளர்ச்சி நலன் மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
‘‘யானைகள் குழந்தைகள் போன்றவை. இவை சிறு வயதில் இருந்தே இங்கு பராமரிக்கப்படுவதால், அவர்களை குழந்தைகளை பராமரிப்பது போல் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மிரள வைக்கும் தோற்றம் இருந்தாலும், மனதளவில் மிகவும் மிருதுவான மிருகம் என்று தான் சொல்லணும். அவர்களின் ஒவ்வொரு தேவைகளையும் என்னால் முடிந்தவரை பூர்த்தி செய்வேன்’’ என்றார் லெஜுமோல்.