கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)
*மெது வடை மாவு நீர்த்து விட்டால், சிறிது வெள்ளை ரவை, சிறிது உப்புடன் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து வடை தட்டினால் மொறு மொறு மெது வடை சுவையாக வரும்.
*பீர்க்கங்காய், சௌ சௌ காய்களை தோலுடன் சிறிது சதையும் சேர்த்து சீவி வதக்கி வைத்து உப்பு, புளி, மிளகாய் சேர்த்து வறுத்து துவையலாக அரைக்கலாம்.
*வெள்ளைப் பூசணிக் குடலை வேஸ்ட் செய்யாமல் 1 கப் அரிசியோடு சேர்த்து நைஸாக அரைத்து 4 மணி நேரம் கழித்துத் தோசை வார்த்தால் மிகவும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
– கே.சாந்தி, சென்னை.
*கீரையை சமைக்கும் போது மூடாமல் சமையுங்கள். அப்போதுதான் அதிலுள்ள கார்பன்டைஆக்ஸைடு வெளியேறும். அதனால் கீரையை குக்கரில் வேக வைக்கக் கூடாது.
*அப்பளம் வாங்கியதும் கட்டைப் பிரித்து ஒவ்வொன்றையும் துடைத்து பின் டப்பாவில் போட்டால் பூச்சி வராது. அதிலுள்ள மாவோடு வைத்தால் வீணாகிவிடும்.
*சர்க்கரைப் பொங்கலுக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் மில்க் மெய்டு சேர்க்க சுவை அபாரமாக இருக்கும்.
– ஜி.இந்திரா, திருச்சி.
*காளான் ஃப்ரஷ்ஷாக இருக்க பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.
*உடைத்த தேங்காய் மூடியை தண்ணீரில் போட்டு வைத்தால் சில நாட்களில் கெடாமல் இருக்கும்.
*அரிசி பாயசம் தயாரிக்கும் போது ரோஜா எசென்ஸ் வீட்டில் இருந்தால் சிறிதளவு கலந்து விட்டால் சுவையும், மணமும் கூடும்.
*சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு நெய் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாகவும், மெதுவாகவும் இருக்கும்.
– எஸ். ஆஷாதேவி, சென்னை.
*கொதிக்கும் எண்ணெயில் தான் பூரி தயாரிக்க வேண்டும். பூரியை திருப்பிப் போடும்போது உள்ளே செல்லும் எண்ணெயை வெளியேற்ற சிறிய கம்பியால் குத்தினால், இந்த ஓட்டை வழியாக பூரியில் இருக்கும் எண்ணெய் வடிந்துவிடும்.
*தேங்காய் எண்ணெயில் சில உப்புக் கற்களை போட்டு வைத்தால் எண்ணெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
*ரவா கேசரி செய்யும்போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தைப் போட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
– அ.திவ்யா, காஞ்சிபுரம்.
*அடைமாவு அதிகம் புளித்து விட்டால். இட்லி தட்டில் இட்லி போல் விட்டு வேகவைத்து எடுத்து உதிர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், உப்பு போட்டு தாளித்து விட்டால் சூப்பர் அடை காரப்புட்டு தயார்.
*எந்த கீரையானாலும் சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சமைத்தால் கீரையின் பச்சை நிறம் மாறாது. நல்ல ருசியாகவும் இருக்கும்.
*பாகற்காயை சிறிதளவு உப்பு, தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, சமைத்தால் அதிக கசப்பு இருக்காது.
– எஸ்.ஜெயந்தி, மதுரை.
*கேசரி, அல்வா, ஜிலேபி போன்றவற்றில் கலர்பவுடர் சேர்ப்பதற்குப் பதில் கேரட்டை சாறு எடுத்துச் சேர்த்தால் சுவை கூடும்.
*தோசை மாவு அதிகம் புளிக்காமல் பார்த்துக் கொள்ளவும். புளித்து இருந்தால் சிறிது சர்க்கரையைச் சேர்த்து ஊற்றவும்.
– தஞ்சை ஹேமலதா, தஞ்சை.
*பால் பவுடரை கரைக்கும் போது பெரும்பாலும் கட்டியாகி விடும். அதை தவிர்க்க பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை கலந்து, பிறகு வெது வெதுப்பான தண்ணீர் விட்டு ஆற்றினால் கட்டி இல்லாமல் எளிதில் கரைந்து விடும்.
*ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும். உடம்பிற்கும் நல்லது.
– மாலா பழனிராஜ், சென்னை.
*கட்டிப் பெருங்காயத்தை தேங்காய் எண்ணெயில் பொரித்துப் பொடித்து வைத்துக் கொண்டால் எந்த சாம்பார் செய்தாலும் இறக்கியபின் ¼ ஸ்பூன் போட்டு கலக்கி பரிமாறினால் வாசனை அசத்தும்.
*எந்தக் கீரை சமைத்தாலும், அரிசிகளைந்த இரண்டாம் கழுநீரில் சமைத்தால் சத்து அதிகம், உடலுக்கு குளிர்ச்சி.
*தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கட்டிப் பெருங்காயம் இவற்றை தேங்காய் எண்ணெயில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு வாழைக்காய், கத்தரிக்காய் பொரியலில் தூவினால்
‘கல்யாணக் கறி’ போல் ருசியும், மணமும் ஆளை அசத்தும்.
– கே.நாகலட்சுமி, உள்ளகரம்.
*அவல் உப்புமா செய்யும் பொழுது பயத்தம் பருப்பை பதமாக வேகவைத்து சேர்த்து செய்ய சுவை நன்றாக இருக்கும்.
*ரவா கேசரி, ரவா பர்ஃபி செய்யும்போது தண்ணீரின் அளவில் பாதியளவு குறைத்து விட்டுக் கெட்டியான பாலைச் சேர்த்தால் அதன் சுவையே அலாதி.
*தேங்காய் சாதம் கிளறும்போது ஒரு சிட்டிகை சர்க்கரைச் சேர்த்து கிளற சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
*காலிஃபிளவரை சமைக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தையும் சேர்த்து விட நிறம் மாறாமல் ருசியும் அதிகமாக இருக்கும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
கடலை மாவு லட்டு
தேவையானவை:
கடலை மாவு- 2 கப்,
சர்க்கரை- கால் கிலோ,
பசும் பால் – 1 கப்,
நெய் – 1 கப்,
முந்திரிப் பருப்பு – 6,
கற்கண்டு பொடி – 2 ஸ்பூன்,
ஏலக்காய் பொடி- சிறிது.
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு கடலைமாவு போட்டுக் கிளறவும். நல்ல மணம் வந்தவுடன், பாலைத் தெளித்துக் கொண்டே கிளறவும். மாவு பொல பொல வென்று வாணலியில் நிரம்பும். இறக்கிவைத்து, சர்க்கரைப் பொடித்து அதையும் கற்கண்டுப் பொடி, ஏலக்காய்ப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு இவற்றை மாவில் நன்கு கலந்து லட்டுகள் பிடிக்கவும்.