இனி உடல் சொன்னதைக் கேட்கும்!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 19 Second

‘தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், உடல் உழைப்பு குறைந்த பணியினையே பலரும் செய்து வருகிறோம். இதனால் உடல் தன்னுடைய Flexibility என்கிற நெகிழ்வுத்தன்மையினை இழந்துவிட்டது.

குனிந்து நிமிர்வது கூட பலருக்கும் சிரமமாக இருக்கிறது. உடலின் இயக்கம் குறைந்த தன்மையினால் தசைகள் மற்றும் எலும்பு மூட்டுகள் இறுக்கமடைந்து விடுவதாலேயே இதுபோல் கை, கால்களைகூட எளிதில் அசைக்க முடிவதில்லை. அப்படியும் அசைத்தால் ஆங்காங்கே கடுமையான வலியும் தோன்றும்.

இந்நிலையை மாற்றவும், நாம் சொல்வதை நம் உடல் கேட்கவும் கீழ்க்கண்ட யோகாசனங்கள் உதவி செய்யும். இதன் மூலம் உடலுக்குப் போதுமான Flexibility கிடைக்கும். இவர்களைத்தவிர, கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கும்போதும், செய்து முடித்தபிறகும் உடலுக்கு வார்ம்-அப் கொடுப்பதற்காகவும் இந்த யோகாசனங்களைச் செய்யலாம். இதன் மூலம் உடல் தளர்வடைந்து ரிலாக்ஸாவதை நன்றாக உணர முடியும்’’ என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான இந்திரா தேவி.

கோமுகாசனம்

விரிப்பில் கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். இடதுகாலை மடக்கி வலது தொடைக்கு மேலாக கொண்டுவந்து வலது இடுப்பிற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வலதுகாலை மடக்கி இடதுகாலின் தொடைக்கு கீழ்ப்புறமாக கொண்டுவந்து இடது இடுப்புக்கு அருகில் வைத்து நன்றாக உட்காரலாம்.

அடுத்து இடது கையை மடக்கி முதுகுக்குப் பின்புறமாக கொண்டு வரவும். வலதுகையை மடக்கி தலைக்குப் பின்புறமாக கொண்டுவந்து இடதுகையையும், வலதுகையையும் கோர்த்துக்கொண்டு உடலின் மேல்பகுதியை நன்றாக நிமிர்த்தி ரிலாக்ஸாக அமரவும். இந்த நிலையில் 10 நொடிகள் மூச்சை உள்ளிழுத்தவாறு அமர வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு கைகளை விடுவித்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

பலன்கள்

கணுக்கால், இடுப்பு, தொடை எலும்புகளுக்கு வலுகிடைக்கிறது. இப்பகுதிகளில் உள்ள தசைகள் விரிவடைகிறது. நரம்புகளின் இறுக்கம் குறைகிறது. தோள்கள், மார்பு மற்றும் ட்ரைசெப்ஸ்களில் உள்ள தசைநார்கள் நீட்சிபெற்று, வலுவடைகின்றன.இதனால் கீழ் இடுப்புவலி, முதுகுவலி மற்றும் தோள்பட்டை வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடிகிறது. சிறுநீரக உறுப்புகள் தூண்டப்படுவதால் நீரிழிவு நோய்க்கு நல்ல தீர்வாகிறது.

தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்வதால் மனப்பதற்றம், மன அழுத்தம் விலகுகிறது. உடலின் அனைத்து தசைகளில் உள்ள இறுக்கம் விலகி நல்ல தளர்ச்சி அடைகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் போது முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டுவலிகளிலிருந்து விடுபடலாம்.

புஜங்காசனம்

விரிப்பில் வயிறு பதியுமாறு குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களும் தரையை தொடுமாறு இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டையும் தரையில் ஊன்றியவாறும், முழங்கைகள் நேர் கோட்டிலும் இருக்க வேண்டும்.மேல் உடலை நேராக நிமிர்த்தி, தலை, மார்பு, கழுத்து, தோள்பட்டை நேராக இருக்க வேண்டும்.

இந்த நிலையில் உடல் எடை முழுவதும் உங்கள் கைகளாலும், தொடைகளாலும் தாங்கிக் கொள்கிறது. இப்போது தலையை பின்பக்கமாக முடிந்த வரை சாய்த்து, மூச்சை ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். இதே நிலையில் சிலநிமிடங்களுக்கு மூச்சை நிறுத்த வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறே தோள், கழுத்து, தலையை தரையை நோக்கி கொண்டு வர வேண்டும். இதேபோல் 4 அல்லது 5 முறை செய்யலாம்.

பலன்கள்

கீழ் மற்றும் மேல் முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது. மார்புத் தசைகள் விரிவடைகிறது. உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முதுகின் மேல், நடு மற்றும் கீழ் பகுதிகளுக்கு நல்ல நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது. செரிமான உறுப்புகள், சிறுநீரக மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் செயலை மேம்படுத்துகிறது. மேலும் கழுத்து தசைகளுக்கு அழுத்தம் கிடைக்கிறது. பெண்களின் மாதவிடாய் சுழற்சிகளை சமன்படுத்துகிறது. கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம்.

அதோமுக ஸ்வனாசனம்

கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை சற்று உயர்த்தி, கைகளை முன்புறமாகவும், முழங்கால்களை பின்புறமாகவும் நீட்டி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கைகள் இரண்டும் தோள்பட்டைகளை ஒட்டியும், கால்கள் இரண்டும் ஒட்டியும் இருப்பது நல்லது. இப்போது தலையை குனிந்து வயிற்றை பார்த்த நிலையில் 10 நொடிகள் நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.

பலன்கள்

தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் வேகமாக கிடைப்பதால் மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கிறது.உடலுக்கு உற்சாகம் கிடைக்கிறது. கைகளும் தோள்பட்டைகளும் இணையும் இடங்களில் உண்டாகும் உராய்வினால் வரும் வலிகள் நீங்குகிறது. கையின் மணிக்கட்டு, தசைநார்கள் நன்கு வளைந்துகொடுக்கின்றன.கை, கால்களுக்கு வலு கிடைக்கிறது. இடுப்பு எலும்புகள், கணுக்கால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களைப் போக்குகிறது. கை,கால் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தை குறைக்கிறது.

சக்ரவாகாசனம்

ஒரே நேரத்தில் மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் இரண்டையும் இணைத்து செய்யும் இந்த ஆசனம் சக்ரவாகாசனம் ஆகும். விரிப்பில் கால்களை முழங்காலிட்டு அமர்ந்து மெதுவாக இரண்டு கைகளையும் முன்னோக்கி குனிந்து தரையில் ஊன்ற வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றி, உடலை ஒரு மேஜையைப்போல் சமமாக வைக்கவும்.

வயிற்றை உட்பக்கமாக இழுத்துக் கொண்டு தலை தரையை நோக்கி குனிந்து பார்க்கவேண்டும். இது மர்ஜரியாசனம். பின்னர் முதுகை வளைத்து தலையை அண்ணாந்து பார்க்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இது பிடிலாசனம். இதுபோல் மாற்றி, மாற்றி இரண்டு நிலைகளையும் 3 முதல் 5 வரை செய்யலாம்.

பலன்கள்

உடலுக்கு சமநிலை கிடைப்பதால் கூனில்லாத நல்ல தோற்றத்தை கொடுக்கும். முதுகுத்தண்டுவடம் மற்றும் கழுத்துக்கு வலு கிடைக்கிறது. இடுப்பு, அடிவயிறு மற்றும் முதுகிற்கு நல்ல நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது. உடல்முழுவதும் ஒருங்கிணைப்பதால் உணர்வுகளை சமநிலைப்படுத்துகிறது. வயிறு, சிறுநீரகம் மற்றும் அட்ரினல் சுரப்பிகளை தூண்டுகிறது.

ஏகபாத ராஜ கபோதாசனம்

விரிப்பின்மேல் குனிந்து கைகள், கால்களை ஊன்றியபடி அதோமுக ஸ்வனாசனம் போல நின்று கொள்ளவும். வலதுகாலை பின்னோக்கி நீட்டியும் இடதுகாலை மடக்கி ஊன்றிக் கொள்ள வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றியவாறு இடது காலை உட்புறமாக மடக்கி உட்கார வேண்டும். கைகள் இரண்டும் இடது முட்டிக்கு வெளியே சற்று சாய்ந்த நிலையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.

தலை அண்ணாந்து பார்த்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்து 10 நொடி இதே நிலையில் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக இரண்டு கால்களையும் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.

பலன்கள்

இடுப்பு இணைப்புகள் நன்றாக விரிந்து கொடுப்பதால் இடுப்பு எலும்புகளுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கிறது. கீழ் முதுகுவலி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலி நீங்கும். உள் உறுப்புகளை தூண்டுகிறது. முன்தொடை, பின்தொடை, பின்னங்கால் தசைகளில் உள்ள இறுக்கம் தளர்ந்து நல்ல வளைவுத்தன்மை கிடைக்கிறது.

இடுப்பு தசைநார்கள் நீட்சி அடைகின்றன. சிறுநீரகக் குறைபாடுகள் நீங்குகின்றன. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள் வலுவடைந்து நல்ல தோற்றத்தை பெற முடிகிறது. வண்டி ஓட்டுவது மற்றும் எடை தூக்குவதால் ஏற்படும் முதுகுத்தண்டுவட வலியைப் போக்குகிறது.

வீரபத்ராசனம்

கைகளை பக்கவாட்டில் வைத்து நேராக நிற்கவும். இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி உள்ளங் கைகளை இணைத்து கூப்பிய நிலையில் வைக்கவும். நன்றாக மூச்சை உள்ளிழுத்து வலது காலை நன்றாக முன்னோக்கி கொண்டுவந்து மடக்கி தரைக்கு இணையாக வைக்கவும். இடதுகால் பின்னோக்கி கொண்டு சென்று முழங்கால் மடங்காமல் முன் பாதத்தில் ஊன்றியபடி நிற்கவும். தலை நன்றாக மேலே நோக்கியவாறு இருக்க வேண்டும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருக்க வேண்டும். இதேபோல் மற்றொரு புறமும் செய்ய வேண்டும்.

பலன்கள்

தோள்பட்டைகள் மற்றும் மார்பு நன்றாக விரிவடைகிறது. கால்கள், கணுக்கால்கள், முதுகு வலுவடைகின்றன. இடுப்பு, மார்பு விரிவடைவதால் நுரையீரலுக்கு நன்றாக சுவாசம் கிடைக்கிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கும் ஆசனம் இது. கழுத்து, வயிறு, இடுப்பு தசைப்பகுதி, தொடை தசைகள் வலுவடைகின்றன. இடுப்பு மற்றும் பின்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மன அழுத்தம் மாயமாகும்!(மருத்துவம்)
Next post ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)