கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
*ஒரு ஜாடியில் நெய்யை விட்டு அதில் ஒரு சிறு வெல்லக்கட்டியைப் போட்டு வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமலிருக்கும்.
*தோசைக்கு உளுந்தம்பருப்பை நனைக்கும்போது வெந்தயத்துடன், கூடவே இரண்டு டீஸ்பூன் கடலை பருப்பையும் சேர்த்தால், தோசை சிவந்து கரகரப்பாக இருக்கும்.
*பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
*கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்துவிட சீக்கிரம் ஊசிப் போகாது.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
*சப்பாத்தி மாவு பிசையும்போது நீர் சிறிது அதிகமாகி விட்டால், அரைமணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் கெட்டியாக இருக்கும்.
*சூப்பில் சேர்க்க கிரீம் இல்லையென்றால் பாலில் சிறிது வெண்ணெயை போட்டு நன்றாக கலக்கி சேர்த்தால் கிரீம் சேர்த்தாற் போன்று சுவையைக் கொடுக்கும்.
*புலாவ், பிரியாணியில் காரம் கூடிவிட்டால் நான்கு அல்லது ஐந்து பிரெட் ஸ்லைஸ்சுகளின் ஓரங்களை வெட்டி சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்து, புலால் பிரியாணியில் சேர்த்து அரைமணி நேரம் கழித்து பரிமாறினால் காரம் குறைந்திருக்கும்.
*தேங்காயைத் துருவி ‘ஜிப்லாக்கில் போட்டு’ ஃப்ரீசரில் வைத்து தேவையானபோது மைக்ரோ ஓவனில் ‘டீப்பிராஸ்ட்’ செய்தால் அப்பொழுது துருவினதுபோல மலர்ந்திருக்கும்.
– திருமதி. சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.
*மா, பலா, வாழைப்பழங்களை சமஅளவு எடுத்துத் துண்டுகளாக்கி, கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி பழத்துண்டுகளைப் போட்டு வதக்கவும். அதனுடன் தேவையான சர்க்கரை சேர்க்கவும். பிறகு கெட்டித் தேங்காய்ப்பால், ஏலத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும். ‘முக்கனிப் பாயசம்’ தயார்.
*தேங்காய்த்துருவல், ஏலத்தூள், கிஸ்மிஸ், முந்திரி, சர்க்கரைத்தூள் சேர்த்து பூரணம் தயார் செய்துகொள்ளவும். பிரெட் துண்டுகளை தண்ணீரில் ஊற வைத்து, பிழிந்து எடுக்கவும். அதனுடன் அரை கப் கோதுமை மாவு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை சப்பாத்திகளாகத் திரட்டி அதனுள் பூரணத்தை வைத்து சமோசாவாகச் செய்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் ‘பிரெட் ஸ்வீட் சமோசா’ தயார்.
*தேங்காய்ப்பால், வெல்லப்பொடியுடன் இரண்டு மடங்கு கோதுமை மாவு, 1 டீஸ்பூன் பச்சரிசி மாவு, ஏலத்தூள், சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்து 15 நிமிடம் கழித்து ‘வெல்ல தோசை’யை வார்த்துப் பரிமாறலாம்.
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
*புளிக்குப் பதில் சட்னி செய்யும்போது எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் சேர்க்க சுவை அதிகரிக்கும்.
*புதினா, மல்லி சட்னி செய்யும்போது எலுமிச்சை சாறு, சர்க்கரை 1/2 டீஸ்பூன் சேர்க்க நிறம் மாறாமல் இருக்கும்.
*கொத்தமல்லிச்சட்னி மீந்துவிட்டால் அதை மோரில் போட்டு கரைத்துவிட மசாலா மோராக அருந்தலாம்.
*கத்தரிக்காய் சட்னி, வெங்காய சட்னி செய்யும்போது சிறிதளவு கறுப்பு உளுந்தை எண்ணெயில் வறுத்து, கொஞ்சம், கொரகொரப்பாக அரைத்து சட்னியுடன் கலந்துவிட சுவை அபாரமாக இருக்கும்.
– மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.
*காளான்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கக் கூடாது. ஏனெனில் அவை பாத்திரங்களை கருமையாக மாற்றி விடும்.
– க.நாகமுத்து, திண்டுக்கல்.
வாழைத்தண்டு புலாவ்!!
தேவையானவை:
பாஸ்மதி அரிசி – 1 கப்,
வாழைத்தண்டு – பெரிய துண்டு,
மோர் – 2 கப்,
தண்ணீர் – தேவையான அளவு,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2,
பிரிஞ்சி இலை – 2,
பட்டை – ஒரு சிறிய துண்டு,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 2,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
நெய்,
உப்பு – தேவையான அளவு,
புதினா – சிறிதளவு.
செய்முறை :
முதலில் பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்து, மோரை வடித்துவிட்டு, குக்கரில் வாழைத்தண்டைப் போட்டு 2 விசில் விட்டு எடுக்க வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கி வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் ஒரு கப் மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பின் கொதி வந்தவுடன் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை நன்கு களைந்து கொதிக்கும் கலவையில் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.