அக்கா கடை-நான்கை நாற்பதாக மாற்றினேன்!(மகளிர் பக்கம்)
ஒருவரின் மிக அத்தியாவசியமான தேவைகளில் உணவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக வயதானவர்கள். பெரும்பாலும் சிட்டியில் வசிக்கும் நடுத்தர வர்கத்தை சேர்ந்த வயதானவர்களுக்கு மூன்று வேளை நல்ல சுவையான உணவு என்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. பல ஓட்டல்கள் இருந்தாலும் வீட்டு சாப்பாடு போல் இருக்காது. அதே சமயம் அவர்கள் இருவருக்காக மட்டுமே சமைக்க வேண்டும். வீட்டில் சமைக்க ஆட்கள் வைத்தாலும் அதற்கான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கணும்.
இனி இவர்கள் உணவுக்காக கவலைப் பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் திருச்சியை சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர் கடந்த ஒரு வருடமாக கே.கே.கிச்சன் என்ற பெயரில் மூன்று வேளையும் அவர்கள் வீட்டிற்கே உணவுகளை வழங்கி வருகிறார்.
‘‘எங்களுடையது ஓட்டல் குடும்பம். என் தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் ஓட்டல் துறையில் ஈடுபட்டு வருகிறோம். தாத்தாவிற்கு பிறகு என் அப்பா பார்த்துக் கொண்டார். இப்போது என் அண்ணன் பார்த்துக் கொள்கிறார். மேலும் என் அம்மா வீட்டில் இருந்தபடியே வரலட்சுமி பூஜை போன்ற சின்னச் சின்ன விழாக்களுக்கு உணவு தயாரித்து தருவார். அதைப்பார்த்து தான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்கும் ஓட்டல் துறை மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு.
கரூர் பைபாஸ் சாலையில் ராஜகணபதி பெருகமணி ஐயர் என்ற பெயரில் ஒரு ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறோம். அது தவிர விராலி மலையில் ஐ.டி.சி மற்றும் எல்.எஸ்.ஜி நிறுவனங்களுக்கு கேட்டரிங்கும் செய்து வருகிறோம். இந்த துறை எனக்கு மட்டுமில்லை என் கணவருக்கும் பிடித்தமானது. காரணம் வெளிநாட்டில் குளிர்பான நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு அந்த வேலையை விட்டுவிட்டு இங்கு வந்துட்டார். இங்க வந்த பிறகு அவருக்காகவே ஒரு குளிர்பான நிறுவனத்தை துவங்கினோம். உடன் குல்ஃபியும் தயாரித்து வருகிறோம். மட்கா குல்ஃபின்னு சொல்வாங்க. சின்ன மண் பானையில் வரும். குச்சியிலும் தருகிறோம். மேலும் ரெடிமேட் சப்பாத்தி, பருப்பு பொடி போன்ற பொடி வகைகளும் தனியாக செய்து வருகிறோம்’’ என்றவர் கே.கே.கிச்சன் பற்றி விவரித்தார்.
‘‘நாங்க ஓட்டல் துறையில் இருப்பதால், இங்குள்ளவர்களுக்கு எங்களைப் பற்றி நன்றாக தெரியும். இந்த கிச்சன் நாங்களா ஆரம்பிக்கல. வேறு ஒருவர் ஆரம்பித்து பத்து நாட்கள் தான் நடத்தினாங்க. அதன் பிறகு அவர்களால் தொடர்ந்து செய்ய முடியல. அதனால், ‘உங்களால் எடுத்து நடத்த முடியுமா’ன்னு கேட்டாங்க. சரி செய்து பார்ப்போம்னு தான் நடத்த ஆரம்பிச்சோம். ஆனால் இதை நான் நடைமுறைக்கு கொண்டு வரவே கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு.
எங்களிடம் கிச்சனை கொடுத்தவங்க சமையல் மாஸ்டர் மற்றும் டெலிவரி செய்றவங்க எல்லாரும் இருப்பாங்கன்னு தான் சொல்லிக் கொடுத்தாங்க. ஆனால் நாங்க கையில் எடுத்த பத்தே நாட்களில் எல்லாரும் விட்டுட்டு போயிட்டாங்க. வாடிக்கையாளர்களுக்கு உணவு கொடுக்கணும். என்ன செய்றதுன்னே புரியல. அப்ப என் கணவர் தான் எனக்கு ரொம்பவே உதவியா இருந்தார். அவர் தான் உடனடியா சமையல் நிபுணரையும் டெலிவரி செய்வதற்கு பசங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். அப்பவும் கஸ்டமர்கள் இன்னும் உணவு வரலைன்னு போன் செய்வாங்க. பசங்க புதுசு.
அவங்க டெலிவரி செய்ய வேண்டிய விலாசத்தை தேடித்தான் போய் கொடுக்கணும். சுமார் ஒருத்தர் மட்டுமே பத்து இடங்களுக்கு டெலிவரி செய்வாங்க. அப்ப பத்து வீட்டு விலாசத்தையும் தேடி கொடுக்க நேரமாகும். இதுதான் இடம்னு பழகிட்டாங்கன்னா… அதன் பிறகு அவங்களும் சரியான நேரத்திற்கு போய் கொடுத்திடுவாங்க. அது செட்டாகவே எனக்கு ஒரு மாசமாச்சு. சில சமயம் இப்பவும் திடீரென்று டெலிவரி பசங்க லீவ்ன்னு சொல்லிடுவாங்க. அந்த சமயத்தில் நாங்களே டெலிவரி செய்திடுவோம். ஆரம்பத்தில் நான்கு பேர் தான் வாடிக்கையாளர் இருந்தாங்க. நான் விளம்பரம், பேம்ப்லெட் எல்லாம் கொடுத்தேன். அதைப் பார்த்து ஆட்கள் சேர்ந்தாங்க. இப்ப 40 பேருக்கு தினமும் மூன்று வேளையும் உணவு கொடுக்கிறோம்.
காலை மற்றும் இரவு வேளை உணவில் இட்லி கண்டிப்பா இருக்கும். அதனோடு சப்பாத்தி, ஆப்பம், பிடிக்கொழுக்கட்டை, இடியாப்பம்னு இன்னொரு டிபன் வெரைட்டி இருக்கும். மதியம் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், அப்பளம்ன்னு கொடுக்கிறோம். சாம்பார் வாரத்தில் இரண்டு நாட்கள் இருக்கும். ஒரு நாள் புளிக்குழம்பு, மோர்குழம்பு. ஒரு நாள் பிரிஞ்சி, தேங்காய் சாதம், புளிசாதம்ன்னு கலவை சாதம் ஒரு பொரியல், அப்பளம் தருகிறோம்.
சிலர் ராகி அடை கேட்பாங்க. அந்த சமயம் இட்லியோட சேர்த்து தருவோம். சிலர் காலையில் டிபனுடன் சாப்பிட காபி மற்றும் இரவு பால், பழங்கள் கேட்பாங்க. சிலர் சாதம் இல்லாமல் குழம்பு, கூட்டு, பொரியல் மட்டும் விரும்புவாங்க. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப செய்து தருகிறோம்’’ என்றவர் ஒவ்வொருவருக்கும் தனியாக ஹாட்பேக்கில் தான் உணவுகளை பரிமாறி வருகிறார்.
‘‘ஒவ்வொருவருக்கும் இரண்டு ஹாட்பேக்ன்னு வச்சிருக்கோம். அதில் ஒரு சிலர் அவங்களே வாங்கி கொடுப்பாங்க. அவங்களுக்கு மட்டும் அதில் பேக் செய்து தருவோம். சாப்பாடு என்பதால் கொஞ்சம் ஹைஜீனிக்கா இருக்கணும்ன்னு பார்ப்பேன். அதனால் ஒவ்வொரு முறையும் நல்ல சோப்பு போட்டு தேய்ச்சு சுடு தண்ணீரில் கழுவி பிறகு வெயிலில் காயவைத்து அதன் பிறகு தான் சாப்பாடு கட்டித் தருவோம். காலை டிபன் 9 மணிக்கும், மதிய உணவு ஒரு மணிக்கும். இரவு உணவு எட்டு மணிக்கெல்லாம் கொடுத்திடுவோம். மழைக்காலத்தில் உணவினை வாட்டர்ப்ரூப் பேக்கில் வைத்து கொடுப்பதால் அதன் தன்மை மாறாமல் அதே சுவையோடு இருக்கும்.
டெலிவரி பொறுத்தவரை காலை மற்றும் மாலை நேரத்திற்கு மட்டும் கல்லூரி பசங்க பகுதி நேர வேலையா செய்றாங்க. மதியம் எங்களுடைய ஆட்கள் கொடுத்திடுவாங்க. எங்க கிச்சன் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் கொடுக்கிறோம். ஆட்கள் குறைவு என்பதால் முழு திருச்சியை எங்களால் கவர் செய்ய முடியல. எங்களின் இலக்கு 150 பேருக்காவது உணவு கொடுக்கணும். இதை சர்வீசா தான் செய்றோம். சம்பளம், மற்றும் இதர செலவுகள் போக ஒரு லாபம் கிடைச்சா போதும். எங்களின் முழு நோக்கமே கஸ்டமருக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு கொடுக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார் உமா மகேஸ்வரி.