5 கோடியினரை ஈர்த்த அக்கா, தங்கையின் நடனம்!(மகளிர் பக்கம்)
நைனிகா – தனயா இருவரும் பத்து வயதும், ஒன்பது வயதும் ஆகும் சகோதரிகள். ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த இவர்கள் அமெரிக்காவில் தங்கள் பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் முக்கியமான பூங்காக்களில் சாலைகளில் இந்த சகோதரிகள் இருவரும், இந்தியாவில் பிரபலமாக ஒலிக்கும் சினிமா பாடல்களுக்கு அழகாக நடனமாடி யுடியூபில் பதிவேற்றி வருகிறார்கள். இவர்களின் நடன வீடியோக்கள் பல கோடி பார்வையாளர்களால் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்த குழந்தைகளின் தந்தை நம்முடன் சில விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
‘‘பொதுவாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அங்கே சில சங்கத்தில் இருப்பார்கள். அவர்களுக்காக அங்கே சில கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற தென் இந்தியர்கள் கலந்துகொள்வார்கள். நாங்கள் இந்த அமைப்புகளுடன் சேர்ந்து பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடுவதும் இங்கு வழக்கம். அப்படி ஒரு விழாவின் போது, மேடையில் நடன நிகழ்ச்சி நடந்தது. எங்கள் சங்கத்தின் குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடினர். அப்போது நைனிகாவிற்கும் தனயாவிற்கும் ரொம்ப சின்ன வயசு. ஆனால் அவர்கள் மேடையில் பாட்டு சத்தம் கேட்டு நடனம் ஆரம்பமானதும், மேடைக்கு அருகே சென்று கீழே ஆடத் தொடங்கினார்கள். அப்போதுதான் எங்கள் குழந்தைகளுக்கு நடனத்தில் ஆர்வம் இருப்பதே எங்களுக்கு தெரிந்தது.
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் பாடல்களுக்கு டிவியில் வரும் டான்ஸ் ஸ்டெப்பை அப்படியே பின்பற்றி ஆடத் தொடங்கினார்கள். அதனால் 2018ல், நைனிகாவையும் தனயாவையும் எங்கள் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் நடனமாட ஏற்பாடு செய்தோம். அப்போது இவர்கள் இருவருமே தங்கள் வயதை ஒத்த குழந்தைகளை காட்டிலும் நன்றாக நடனமாடுகிறார்கள் என்பது தெரிந்தது. நைனிகா சீக்கிரமே நடனத்தைக் கற்றுக்கொண்டு அதை ஆடினாள். மற்ற குழந்தைகளால் அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
நைனிகா, தனயாவின் திறமையை பார்த்து, அவர்கள் இருவருக்கும் தனியாக நடனமாடும் வாய்ப்பு 2020ல் கிடைத்தது. ஆனால் அப்போது கொரோனா பாதிப்பால், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு குழந்தைகளால் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இருவருமே மனமுடைந்து போனார்கள். ஒரு வாரமாக பயிற்சி செய்து, காஸ்டியூம் எல்லாம் தயார் செய்தும் மேடையில் நடனமாட முடியவில்லையே என்ற வருத்தம்தான் அவர்களுக்கு.
அவர்களின் வருத்தத்தை போக்க ஒரு ஐடியா செய்தேன். மேடையும் பார்வையாளர்களும் இல்லாமலேயே அவர்களுடைய நடனத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். அவர்கள் நடனத்தை அப்படியே ஷூட் செய்து, யுடியூபில் பதிவேற்றினோம். முதலில் இதை அந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்த பார்வையாளர்களுடன் மட்டுமே பகிர்ந்தோம். ஆனால் திடீரென இவர்களது வீடியோவிற்கு பல வியூஸ் வர ஆரம்பித்தது. அனைவரும் மற்ற பாடல்களுக்கும் நடனமாடி அதை வீடியோவாக அப்லோட் செய்ய சொன்னார்கள். அப்போது கோவிட் லாக்டவுனில் எங்கும் போக முடியாததால், குழந்தைகளுக்கு நிறைய நேரம் கிடைத்தது.
அந்த சமயத்தில் அவர்களுடன் நாங்களும் சேர்ந்து என்ன பாடலுக்கு நடனம் ஆடலாம், அதற்கு எந்த உடை அணியலாம், என்ன ஸ்டெப்ஸ் போடலாம் என்று எல்லாம் குடும்பமாக யோசித்து ஒரு வீடியோவை தயார்செய்து பதிவேற்ற ஆரம்பித்தோம். இது வரை நாங்கள் பதிவேற்றிய வீடியோக்கள் அனைத்துமே லட்சக் கணக்கான பார்வையாளர்களுடன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், இப்போது குழந்தைகள் இந்த வீடியோக்களை விரும்பி உருவாக்கி வருகின்றனர். யுடியூபில் இவர்களது வீடியோ நைனிகா, தனயா (Nainika Thanaya) என்ற பெயரிலேயே இயங்கி வருகிறது. இப்போது இவர்களின் சேனலுக்கு சுமார் இரண்டு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்கள்.
யுடியூப், இன்ஸ்டா, முகநூல் என பல தலங்களில் மக்கள் பாட்டுக்கு நடனமாடி அந்த வீடியோவினை பதிவேற்றம் செய்கிறார்கள். ஆனால் இவங்க இரண்டு பேருடைய ஸ்பெஷாலிட்டியே காஸ்ட்யூம் தான். பாடல் காட்சியில் முக்கிய கதாபாத்திரங்கள் என்ன உடைகளை அணிந்திருக்கிறார்களோ அந்த உடையை அப்படியே ரெப்லிகா செய்து நடனமாடுவார்கள். உடை மட்டுமில்லை பாட்டில் வரும் நடன அசைவுகளையும் அப்படியே பின்பற்றுவார்கள். ஒரு சில இடங்களில் மட்டும் மாற்றங்களை செய்து கொள்வோம். குழந்தைகள் நடனமாடுவதை வீடியோ எடுப்பது, அதை எடிட் செய்வது போன்ற வேலைகளை நான் பார்த்துக் கொள்வேன். என் மனைவி குழந்தைகளுக்கான உடைகளை டிசைன் செய்வார். இங்கு அமெரிக்காவில் நம் நாட்டு உடைகள் பல கிடைக்காது. அதனால் வெறும் துணியை மட்டும் வாங்கி, அதை என் மனைவியே டிசைன் செய்திடுவார்.
நைனிகாவும் தனயாவும் இதுவரை முறையான நடனப் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அதற்கான சரியான பயிற்சியாளர்களையும் இங்கு அமெரிக்காவில் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது தவிர குழந்தைகள் இந்த நடனத்தை பொழுதுபோக்காகத்தான் செய்கிறார்கள். நடனத்தை தாண்டி அவர்களுக்கு இசை, ஓவியம், டென்னிஸ் போன்ற பல பொழுதுபோக்கில் ஆர்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் அவர்களுடைய ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்றபடி அவர்களுக்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருப்போம்” என முடிக்கிறார் நைனிகா-தனயாவின் அப்பா. இவர்கள் சமீபத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை நூறு லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
அக்கா நைனிகா அப்படியே விஜய் போன்ற முக பாவனைகளையும் அதே நடன அமைப்புகளையும் ஆடி மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார். அதே போல, அலா வைகுந்த புரமுலோ தெலுங்கு திரைப்படத்தில் இருந்து புட்டபொம்மா பாடலுக்கு இவர்கள் ஆடிய நடனமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். சமீபத்தில் வெளியான RRR திரைப்படத்தின் நாட்டு கூத்துப் பாடலுக்கும் இந்த சகோதரிகள் நடனமாடி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் வைரலாகி வருகிறது.