பல தடைகளை உடைத்துதான் வெளிவந்தேன்!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 34 Second

இருள் சூழ்ந்த அறை, மெல்லிய இசை ஒலி, பார்வையாளர்கள் இடத்திலிருந்து ஒரு பெண் மூட்டையோடு நுழைகிறாள். தூக்க முடியாமல் தூக்கி செல்லும் அந்த மூட்டையின் சுமை, ஒடுக்குதலுக்கு ஆளாகும் ஒவ்வொரு பெண்ணையும் குறிப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கரிய அரங்கின் ஊடே இழையாடிய ஒளியில் உழைப்பவர் தினத்தன்று சென்னை கூத்துப்பட்டரையில் அரங்கேறிய அந்த நாடகத்தை இயக்கியுள்ளார் ஜானகி. தேசிய நாடகப் பள்ளியில் (National School of Drama – NSD) பயின்ற ஜானகி, விஜயலட்சுமி அவர்கள் மொழி பெயர்த்த ‘லண்டாய் கவிதை’ யை நாடகமாக வடிவமைத்திருந்தார்.

‘‘இந்த நாடகம் தான் என் வாழ்க்கை. அதனால் தான் அதை இயக்க வேண்டும் என்று முனைப்போடு இருந்தேன். சொல்லப் போனால் என்னை போல் பல பெண்கள் பல போராட்டங்களுக்கு நடுவே தான் தங்களின் வாழ்க்கையினை நகர்த்தி வருகிறார்கள். சிறுவயதிலிருந்து படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. வீட்டிலும் வறுமை. அம்மாவுக்கு பால்வாடியில் ஆயா வேலை. அப்பாக்கு செங்கல் சூலையில் வேலை. அக்கா மூன்று பேரும் தரி நெய்தார்கள். அண்ணா மும்பையில் பிரஸ் ஒன்றில் வேலை பார்த்தான்.

படிப்பு மேல் அவ்வளவு பற்று இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் கல்லூரி போகணும், கலர் கலரா ட்ரஸ் போடணும் என்கிற ஆசை மட்டும் இருந்தது. அதே சமயம், படிச்சா தான் நல்ல வேலை கிடைக்கும் என்று ெதரிந்தது. இருந்தாலும் படிப்பு வரவில்லை. ஆங்கிலம் சுத்தமாக பேச தெரியாது. எங்க பள்ளியில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்வாகவில்லை என்றால், அந்த மார்க் ஷீட்டை சட்டையில் குத்திவிடுவார்கள். அதோடு தான் இருக்கணும். பலரும் நம்மைப் பார்த்து சிரிக்கும் போது அவமானமாக இருக்கும்.

அந்த நிகழ்வு தான் என்னை மேலும் வலுப்படுத்தியது. படித்தால்தான் சமூகத்தில் மதிப்பு என்பதை என் மனதில் பச்சைக் குத்திக் கொண்டேன். அம்மா என் இரண்டாவது அக்காவை பரதநாட்டிய வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தாங்க. எங்க ஊர் நாகர்கோயில். அங்குள்ள மறைமாவட்டம் மூலமாக ‘களரி மக்கள் பண்பாட்டு மையம்’ என்கிற கலைக்குழு இயங்கிக் கொண்டிருந்தது. மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அங்கு இலவச பயிற்சி அளிப்பாங்க.

அங்கு கிராமிய நாட்டியம் கற்றுக் கொள்ளலாம்ன்னு என் அக்காவும், சித்தி பொண்ணும் சேர்ந்தாங்க. இவர்களின் ஆர்வம் பார்த்து அந்த கலைக்குழுவில் அவர்களை முழுநேர கலைஞர்களாக இணைத்துக் கொண்டார்கள். அவர்களும் அங்கு பயிற்சி எடுத்தது மட்டுமில்லாமல் நாடகங்கள், பறை ஆட்டங்கள் எல்லாம் அரங்கேற்றினர். நமக்கு படிப்பு தான் வரல, இதில் நாமும் பங்கெடுக்கலாமே என்கிற ஆர்வம் அதிகமானது.

அப்பா களியல் நடனம் நல்லா ஆடுவாங்க, கதைகள் நிறைய சொல்வாங்க. அம்மாவும் பாடுவாங்க. இந்த பின்னணி இருந்ததால், நானும் அக்காக்களோடு அந்த பண்பாட்டு மையத்தில் இணைந்து நிறைய நிகழ்ச்சியில் பங்கெடுக்க ஆரம்பித்தேன். பரிசுகளும் பெற்றேன். இங்கு எல்லாமே அடிப்படையில் இருந்துதான் சொல்லித் தருவாங்க. அதாவது எடுத்தவுடன் நமக்கு நடனமோ அல்லது நடிப்போ சொல்லித் தரமாட்டாங்க. முதலில் அந்த மையத்தை பார்த்துக் கொள்ளும் வேலை தான் செய்ய சொல்வாங்க. அதாவது நிகழ்சிக்கு போகும் போது பாய்கள் சுருட்டி வைப்பது, நடனத்திற்கு பயன்படுத்தக் கூடிய ஒயில், கோல், சிலம்பம், சலங்கை என ஒவ்வொரு பொருட்களையும் பாதுகாப்பது தான் என்னுடைய வேலை.

அந்த வேலையை தெளிவாக செய்ததால், எனக்கு முன் பல சீனியர்கள் இருந்தாலும் இரண்டு ஆண்டுக்கு பிறகு கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை எனக்கு கொடுத்தார்கள்’’ என்றவருக்கு அங்கு இயங்கிக் கொண்டிருக்கும் போதுதான் ‘ஏழையின் குமுறல்’, ‘செம்மலர்’ போன்ற இதழ்களோடு, இலக்கியம் மற்றும் அரசியல் குறித்த புரிதல்களை தெரிந்து கொண்டுள்ளார்.

‘‘எங்க நாடக குழுவில், ஓர் அறைக்கு ‘சப்தர் ஹஸ்மி’ குடில் என்று பெயர். அந்த குடிலுக்கு மட்டும் ஏன் அந்த பெயர் என்று விசாரித்த போது தான் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது. அவர் வீதி நாடக குழு வைத்து நடத்தியவர். மார்க்சிய சிந்தனையாளர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த விஷயங்கள் பற்றி ‘உரக்க பேசு’ என்ற நாடகம் மூலம் காத்திரமாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதனால் கொதிப்படைந்த அந்த கட்சி தொண்டர்கள் நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவரை தாக்கியுள்ளனர்.

அதில் அவர் இறந்தும் போனார். கலைஞர்களாக இருந்தும் பலர் சமூக உணர்வோடும், அக்கறையோடும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அவர்களுக்கு இணையாக நாம் இல்லாவிட்டாலும், கலைஞராக இருக்கும் நமக்கும் இச்சமூகத்தில் ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்’’ என்கிற ஜானகி, தேசிய நாடக பள்ளியின் அனுபவத்தை பகிர்கிறார்.

‘‘NSD-யோடு, காலச்சுவடு ட்ரஸ்ட், இந்து கல்லூரி இணைந்து முப்பது நாள் நாடக பட்டறை நடத்தினார்கள். அதில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பட்டறைக்கு வந்திருந்த பயிற்சியாளர்களான ராஜேந்திரன் மற்றும் சண்முகராஜா இருவரும் என்னை NSDயில் படிக்க சொன்னாங்க. கல்லூரியில் தான் படிக்க முடியவில்லை. நமக்கு பிடித்த விஷயத்தை கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. அதில் சேர்வதற்காக பெங்களூரில் நேர்காணலுக்கு சென்ற போது, உங்களுக்கு மொழி பிரச்னையாக இருக்கிறது. அதை கற்றுக் கொண்டு வந்தால் இதில் இணையலாம்ன்னு சொல்லிட்டாங்க.

ஓராண்டு உழைத்தேன். இதில் நான் இணைய எனக்கு பெரிதாக உதவியது ‘முரசு கலைக்குழு’வினை இயக்கி வந்த ஆனந்தசெல்வி அக்காதான். மேலும் ஜாய் ஃபாதரிடம் ஹிந்தி மற்றும் ஆங்கிலமும் கற்றுக் கொண்டேன். அடுத்த ஆண்டு NSD-ல் சீட் கிடைத்தது. முதல் மூன்று மாதம் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. பாடம் எடுக்கும் போது எதுவுமே புரியல. ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகு வகுப்பில் உள்ளவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவேன்.

ஆனால் காலப்போக்கில் அவர்கள் சொல்வதும் எனக்கு புரிய ஆரம்பித்தது. காரணம் எனக்கு சவாலாக இருந்த ஆங்கிலத்தை நான் அப்போது முழுமையாக கற்றுக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் நான் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும்… தடைகற்களாக தான் இருக்கும். அதை எல்லாம் உடைத்து தான் வெளியே வந்தேன். ஒவ்வொரு கல்லையும் உடைக்கும் போது நான் வேறாக மாறியிருந்தேன்.

எனக்கு எதுவுமே எளிதாக கிடைக்கவில்லை” என்கிற ஜானகி, நாடக கலையின் முக்கியத்துவம், திரைப்படங்களில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்தார். ‘‘நாடகம் என்பது வெறும் கலை வடிவமாக மட்டுமில்லாமல், மக்களுக்கான விஷயத்தை மக்களிடமே கேள்வி கேட்டு, மக்களை சிந்திக்க வைக்கக் கூடிய பெரிய ஊடகமாக இருக்கிறது. NSD- இறுதி ஆண்டு முடிக்கும் போது சமூக செயற்பாட்டாளர் பிரேமா ரேவதி மூலம் பிரன்ஞ்ச் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

அதே தயாரிப்பு நிறுவனத்தில் வெளியான ‘மாலினி 22 பாளையங்கோட்டை’யில் நடித்தேன். எடிட்டர் லெனின் சாரின், பறை கலைகள் பற்றிய படமான ‘கண்டதை சொல்கிறேன்’ல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கேன். இதனை தொடர்ந்து காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்ததோடு மட்டுமில்லாமல், அதில் நடித்த நடிகர்களுக்கு பயிற்சியும் கொடுத்தேன்.

பிரளயன் ‘சென்னைக் கலைக்குழு’, மங்கையின் ‘மரப்பாச்சி’, பிரசன்ன ராமசாமி போன்ற நாடக ஆளுமைகளோடு வேலை பார்ப்பதோடு, கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் சொல்லித் தருகிறேன். 2018ம் ஆண்டிலிருந்து நானும், கணவர் சாரதியும் இணைந்து ‘முகமூடிகள் அரங்கம்’ என்று ஒன்றை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம்” என்கிறார் ஜானகி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கல்யாணத்துக்கு ரெடியா?! (அவ்வப்போது கிளாமர்)
Next post பச்சிளம் குழந்தை பராமரிப்பு!! (மருத்துவம்)