பதின் பருவத்தினரைத் தாக்கும் B.P!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 0 Second

‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு’ என்று பதின் பருவத்தைச் சொல்வார்கள். இளமையின் துடிப்பும், வேகமும் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்ட துறுதுறுப்பும் இந்த வயதின் இயல்புகள் என்பதால் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள். விடுமுறைகளில் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள். இது எல்லாம்தான் இந்தப் பருவத்தின் இயல்புகள். ஆனால், இன்றைய தேதியில் நிலையே வேறு. 13 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 21 சதவிகிதம் பேர் அதாவது ஐந்தில் ஒருவர் உயர் ரத்த அழுத்தம் எனப்படும் பி.பி யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு அதிர்ச்சித் தகவல்.

பி.பி., சுகர் எல்லாம் பணக்கார வியாதி என்று ஒரு கருத்து இருந்தது. பிறகு அது அனைவருக்குமே வரும் என்றானது. இப்போது சின்னஞ்சிறு குழந்தைகள், பதின்பருவத்தினருக்கும் வருகிறது என்பது நிஜமாகவே யோசிக்க வேண்டிய விஷயம். என்ன ஆனது நம் குழந்தைகளுக்கு? மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் அவர்களிடம் இதுபற்றி கேட்டோம்.‘ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை அடிப்படைக் காரணங்கள், இரண்டாம் நிலை காரணங்கள் என்று இரண்டாகப் பிரிப்பார்கள். அடிப்படையான உயர் ரத்த அழுத்தம் ஏற்பட குறிப்பிட்ட காரணம்தான் உள்ளது என்று சொல்லமுடியாது. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள், மரபியல் மற்றும் வாழ்க்கைமுறைக் கோளாறுகள் எனப் பலவிதமான காரணங்களால் இன்று பி.பி உருவாகிறது. மேலும், சிறுநீரக நோய்கள், தைராய்டு உள்ளிட்ட நாளமில்லா சுரப்பி பிரச்சனைகள், ட்யூமர் எனப்படும் கட்டிகள் உடலில் இருப்பது போன்ற நோய் பாதிப்பின் விளைவாகவும் சிலருக்கு உயர்ரத்த அழுத்தம் இருக்கக்கூடும்.

பொதுவாக, இந்தக் கால குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் எனும் பிரச்சனை ஏற்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுகள் போன்ற சமூகக் காரணங்களே அதிகமாக இருக்கக்கூடும். சிறுவர்களுக்கு, பதின் பருவத்தினருக்கு உடற்பயிற்சியைவிட விளையாட்டே மிகச்சிறந்தது. எனவே, தினமும் அவர்களை விளையாட விட வேண்டும். ஆரோக்கியமான உணவுமுறைதான் ஆரோக்கியமான உடலுக்கு முக்கியம். அதே போல போதிய அளவு ஓய்வும் தேவை. இந்த மூன்றும் முறையாக இருந்தாலே இளம் வயதில் தொப்பை விழுவது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.’

உளவியல் சொல்வது என்ன?

இன்றைய குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? உளவியல்ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்கும் பி.பி அதிகரிப்பதற்கும் காரணங்கள் உள்ளனவா? மனநல மருத்துவர் குறிஞ்சியிடம் கேட்டோம். ’நவீன வாழ்க்கை முறைதான் நம் குழந்தைகளைப் பாதிக்கும் முதல் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு எல்லாம் விசாலமான தனித் தனி வீடுகளில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தோம். குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு இடம் இருந்தது. ஓடியாடி விளையாடினார்கள். மாலை முழுதும் விளையாடி விட்டு வீட்டுப்பாடம் செய்துவிட்டு, குறித்த நேரத்துக்கு உறங்கச் செல்வார்கள். ஆனால், நகரங்களில் இப்போது அபார்ட்மென்ட் வாழ்க்கைதான் இருக்கிறது. விளையாட்டுப் பூங்கா வசதி உள்ள பெரிய அபார்ட்மென்ட்டுகள் எல்லா குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை.

ஓடியாடி விளையாட வாய்ப்பற்ற குழந்தைகள் வீடியோ கேம்ஸ் உடனும், டி.வியின் கார்ட்டூன் சேனல்களுடன் ஐக்கியமாகிறார்கள். இது குழந்தைகளின் உளவியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு புறம் தற்போதைய குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததுமே ட்யூஷனுக்கு ஓடுகிறார்கள். பிறகு இரவு வீடு திரும்புகிறார்கள். சில பள்ளிகளிலும் விளையாட்டு நேரம் என்பதே தற்போது இல்லை. எந்த நேரமும் படிப்பு, படிப்பு என இயந்திரகதியில் இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போகிறது. மேலும், தேர்வு நேரத்தில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற மனஅழுத்தம் வேறு ஏற்படுகிறது.

இது எல்லாம் சேர்ந்து குழந்தைகளின் உளவியலைக் கடுமையாகப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால்தான் மிக இளம் வயதிலேயே பி.பி உள்ளிட்ட பிரச்னைகள் வரிசைகட்டுகின்றன. குழந்தை களாக இருந்தாலும் போதிய அளவு உடல் உழைப்பு மிகவும் முக்கியம் என்பதை பெற்றவர்கள் உணர வேண்டும். எனவே, தினமும் சிறிது நேரமாவது குழந்தைகளை ஓடியாடி விளையாடவிட வேண்டும். கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட அனுமதிப்பது அவர்கள் உடல், மனவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

மேலும், எப்போதும் படி படி என்று கல்வியைத் திணிக்காமல் கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துவதாகவே நம்முடைய அணுகுமுறை இருக்க வேண்டும். முறையான திட்டமிடல் இருந்தால் இளம் வயதில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தி எளிதாக வெல்லலாம். இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் அதிகரிப்பது எதிர்காலத்தில் இதய நோய்கள், நரம்பு நோய்களுக்கு வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.’

உடலை காக்கும் உணவுமுறை

உணவுமுறை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று கன்சல்டன்ட் நியூட்ரீஷியனிஸ்ட் அனிதா பாலமுரளியிடம் கேட்டோம்… ‘ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான் ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை. ஆனால், இன்றைய குழந்தைகள் பீட்சா, பர்கர், சாக்லேட், கோலா பானங்கள், பானி பூரி, பேல் பூரி, மசாலா பூரி போன்ற சாட் ஐட்டங்கள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், செயற்கையான ரசாயனப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பலரச பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.

இந்த உணவுகள் உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பை உருவாக்கி தொப்பை, உடல் பருமனை உருவாக்குகிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கொண்டுவருகிறது. தரமற்ற இந்த உணவுகளால் ஏற்படும் அதிகப்படியான தொப்பை, உடல்பருமன் இதய நோய்களைக்கூட உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் உண்ணும் உணவில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து,  நுண்ணூட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் போன்ற அனைத்துச் சத்துக்களும் சமச்சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய பதின்பருவத்தினர் காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை உண்பது இல்லை. இரவில் வெகு நேரம் நாம் உண்ணாததால் பசியுணர்வு ஏற்பட்டு, உணவைச் செரிப்பதற்காக அமிலங்கள் சுரந்து தயார்நிலையில் இருக்கும். நாம் காலை உணவைத் தவிர்க்கும்போது நம் இரைப்பையையும் குடலையும் அந்த அமிலச் சுரப்பு பாதிக்கிறது. மேலும், இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன், பி.பி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

உணவு இடைவேளையில் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு பழங்கள், நட்ஸ், சுண்டல் போன்ற புரதங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் அனைத்துச் சத்துக்களும் கொண்ட சமச்சீரான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியை மட்டுமே உண்ணாமல் கம்பு, கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, சோளம் போன்ற சிறுதானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் கடினமான உணவை உண்ணும்போது செரிமானம் தாமதமாவதால் உறக்கமும், உடலின் பிற வளர்சிதை மாற்றப் பணிகளும் பாதிக்கப்பட்டு உடல் பருமன் ஏற்படக்கூடும்.உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதே போல் சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் வெள்ளை உப்புக்கு பதிலாக இந்துப்பு எனப்படும் கறுப்பு உப்பையும், வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, கரும்புச்சர்க்கரை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

உயர் ரத்த அழுத்த அறிகுறிகள்

*கடுமையான தலைவலி
*மனப்பதற்றம்
*கோபம்
*மூச்சுத் திணறல்
*அடிக்கடி சிறுமூக்கு உடைதல் தீர்வு
*ஆரோக்கியமான உணவு
*உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு
*தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எப்போ? யாருக்கு? எப்படி? (மருத்துவம்)
Next post தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை! (அவ்வப்போது கிளாமர்)