சோடாமாவு சேர்க்காத ஆப்பம் முடக்கத்தான் காரப் பணியாரம் வாழைப்பூ வடை,செம்பருத்தி பால்!(மகளிர் பக்கம்)
என் பெயர் ப்ரீத்தி ஷா. எனக்கு ஊர் திருநெல்வேலி மாவட்டம். 13 வயதில் நான் ஒரு திருநங்கை என்பதை உணர ஆரம்பித்தேன். வழக்கம் போலவே மாற்றுப் பாலினத்தவர் சந்திக்கும் அத்தனை புறக்கணிப்புகளையும் சந்தித்த நிலையில், புனே நோக்கி புறப்பட்டேன். எனக்கான அறுவை சிகிச்சை எல்லாமே அங்குதான் நடந்தது. திருநங்கை என்றாலே கைதட்டி பிச்சை கேட்பது, பாலியல் தொழில் செய்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பொருளாதாரத் தேடலுக்கான அந்த அடையாளத்தை மாற்ற முடிவெடுத்தேன்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள்தான் நான். என் அம்மா மாவு ஆட்டி விற்பது, ஆப்பம், பணியாரம், முறுக்கு போன்றவற்றை சுட்டு விற்பனை செய்வதென, கிடைக்கும் அந்த வருமானத்தில் கஷ்டப்பட்டே எங்களை கௌரவமாய் வளர்த்தார். பிறரிடம் கடன் கேட்கவும் ரொம்பவே யோசிப்பார். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அம்மாவும், அக்காவும் போராடிதான் பொருளாதாரத்தை தேடினார்கள். உழைப்பை நம்பி மட்டுமே வாழ்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் பிச்சை எடுக்கக்கூடாது, பாலியல் தொழில் செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். இது 13 வயதில் நான் எடுத்த முடிவு.
தொடக்கத்தில் என் சக தோழியரோடு ரயில்களில் கீ செயின்களை விற்க ஆரம்பித்தேன். அதிலும் பிரச்சனைகள் எழவே, புனேயில் இருந்து டெல்லி புறப்பட்டேன். அங்கு நடனம், வீதி நாடகம் என நடிப்பில் இறங்கினேன். அதிலும் பெரிதாக வருமானம் இல்லை. 2012ல் சென்னை திரும்பினேன். ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மணிக்குட்டி என்பவர் எனக்கு அறிமுகமானார். நடிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்தவர், நடிப்பு பயிற்சிக்கான தியேட்டரில் என்னை இணைத்தார். அங்கு மாஸ்டர் ஜெயராவ் மூலம் தியேட்டர், நடிப்பு போன்றவற்றை முறையாய் கற்று, நடிப்பிலும், தியேட்டரிலும் என்னை பட்டை தீட்டிக் கொண்டேன். தற்போது திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் இணைந்து, தியேட்டர் டிராமா 4 ஆண்டுகள் பட்டப் படிப்பில் நான் இறுதி ஆண்டில் இருக்கிறேன்.
சமீபத்தில் வெளியான ‘ஐங்கரன்’ படத்தில் எனக்கு எஸ்.ஐ. கேரக்டர். பாம்புசட்டை, வீரய்யன், வெள்ளையானை என இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்கள், 150 மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். நான் நடித்த ‘வதம்’ வெப்சீரிஸ் எம்.எஃக்ஸ் பிளேயரில் உள்ளது. திருநங்கை கேரக்டர் மட்டுமின்றி, எந்த கேரக்டர் கிடைத்தாலும் நடித்துக் கொடுக்கின்றேன். தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் முயற்சிகளிலும் இருக்கிறேன் என்றவர், என்னதான் நடிப்பு சார்ந்து இயங்கினாலும், அதற்கான வாய்ப்பும் வருமானமும் நிரந்தரம் இல்லைதானே என்றவர், நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத நாட்களில் டூவீலரில் கேன்களை வைத்து டீ விற்பனையிலும் இறங்கினேன் என்கிறார்.
காண்டம் பாக்கெட்களுக்கு மாற்றாக என் கைகளில் டீ கப்கள் இருந்தது என்று புன்னகைத்தவர், டீ விற்பனை தவிர்த்து, ஐஸ் வண்டி வைத்து ஐஸ் விற்பனை செய்வது, கோவிட் நோய் தொற்று நேரத்தில் காய்கறிக் கடை வைத்து காய்கறிகள் விற்பனை செய்வது என பல வேலைகளில் இறங்கினேன்.
பொருளாதாரத் தேடலுக்கான எனது தொடர் முயற்சியில், எனக்கு இன்னெர் வீல் கிளப் (Inner wheel club) மூலமாக தெருவோர வியாபாரத்திற்கான வண்டி கிடைத்தது. இந்த வண்டி மூலமாக சிற்றுண்டி உணவகம் தொடங்கினால் கண்டிப்பாய் லாபம் வரும் என யோசிக்கத் தொடங்கி, எங்கு வைத்து கடை போடுவது என திண்டாடியபோது, தொடர்ந்து என்னைக் கவனித்து வந்த இந்தக் குடியிருப்பின் உரிமையாளர் காந்திமதி மேடம், ஒரு ரூபாய் செலவின்றி, இந்த இடத்தையும் கொடுத்து, பண ரீதியாகவும் ஆதரவுக் கரமும் நீட்டினார்.
எனது நண்பன் பிரவீன் குமார் கொடுத்த ஆலோசனையில் இயற்கை மூலிகைகளை வைத்து, உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்காத சிற்றுண்டிகளை குறைந்த விலையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தேன். லாபத்தை தாண்டி மக்களோட நம்பிக்கையை நேர்மையான வழியில் பெற வேண்டும் என்பதில் உறுதி காட்டினேன். காரணம் நான் வடலூர் இராமலிங்க அடிகளாரின் ஜீவகாருண்யத்தில் வளர்ந்தவள். பசியோடு வருபவருக்கு உணவு கொடுப்பது புண்ணியம் என்பதை நேரடியாய் பார்த்தே வளர்ந்தவள்.
தரமான எண்ணெய், சோடா மாவு சேர்க்காத ஆப்பம், முடக்கத்தான் காரப் பணியாரம், வாழைப்பழம் இணைத்த இனிப்பு பணியாரம், வாழைப்பூ வடை, காளான் சூப், வாழைத்தண்டு சூப், தூதுவளை சூப், முருங்கைக் கீரை சூப், ராகி அடை, செம்பருத்தி பால் என ஆர்கானிக் வகை உணவுகளை மட்டுமே கொடுக்கத் தொடங்கினேன். சூப்களில் நான் க்ரீம் கலப்பதில்லை. அதற்குப் பதிலாய் பசும்பால், ஆவின் பால் பயன்படுத்தத் தொடங்கினேன். எனது தயாரிப்பின் சுவையையும், தரத்தையும் கேள்விப்பட்டு, மாலை நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. காரில் இந்த வழியாகச் செல்பவர்கள், குறிப்பாக மருத்துவர்களும் என் கடைக்கு அடிக்கடி வந்து சாப்பிட்டு, என்னைத் தட்டிக் கொடுத்து பாராட்டிச் செல்லத் தொடங்கினர் என்றவர், நேர்மையான உண்மையான விசயங்களுக்கு மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்தானே என்கிறார் புன்னகைத்து.
சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் இருக்கும் அப்பல்லோ மருந்தகம் அருகே இயங்கும் என் “மகிழம் உணவகம்”, திங்கள் முதல் சனி வரை மாலை 3.30க்கு தொடங்கி இரவு 8.30 வரை இருக்கும் என்ற ப்ரீத்தி ஷா, என்னைப் பொறுத்தவரை வீட்டில் சும்மா இருக்கக் கூடாது. நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்கப் போவேன், நடிக்க வாய்ப்பு இல்லாத போது..? அதனால்தான் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தேன் என்கிறார், இதழில் புன்னகையோடு விடைகொடுத்து.