மறந்து வாடும் நெஞ்சு… அல்சைமரைத் தடுப்போம்! (மருத்துவம்)
மறதி என்பது மாபெரும் மருந்து என்பார்கள் தத்துவ அறிஞர்கள். ஆனால், முதுமைக்கு மறதி என்பது கொடுமை. மறதி என்பது மூளையின் செல்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாவது. அதாவது, மூளையில் உள்ள உயிரணுக்களின் இறப்பு மற்றும் சிதைவு காரணமாக ஏற்படும் விளைவே மறதி. இதனை அல்சைமர் என்பார்கள்.
நினைவாற்றல், மொழித்திறன், கவனம் செலுத்துதல், தீர்மானிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை இது பாதிக்கிறது. மறதி நோய் பொதுவாக வயதானவர்களிடமே அதிகம் காணப்படுகிறது. ஒருவருக்கு மறதி நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும், மறதி என்பது ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு வகையிலும் இருக்கலாம்.சர்க்கரை நோய், பக்கவாதம் உள்ளிட்ட நீண்ட கால நோய்களால் ஒருவருக்கு மறதி நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், கடுமையான பணிச்சுமை, குடும்பம் மற்றும் சமூக ஆதரவு இல்லாமல் போனாலும் ஒருவருக்கு மறதி நோய் ஏற்படக்கூடும்.
டிமென்ஷியா அல்சைமரின் வகைகளில் ஒன்று. இதில், தொடக்க நிலை, வளர்ச்சி நிலை, முற்றிய நிலை என மூன்று கட்டங்கள் உள்ளன.பழக்கப்பட்ட இடங்களிலேயே அடையாளம் தெரியாமல் குழம்புதல், ஒரு பொருளை வைத்த இடம் தெரியாமல் தேடுதல் போன்ற சாதாரண அறிகுறிகளே தொடக்கத்தில் இருக்கும். இந்த நோய் முற்றிய நிலையில் அறிவுசார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் இழக்கும் நிலை ஏற்படும்.மூளைக்குப் போகும் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்புகளால் வாஸ்குலர் டிமென்ஷியா உருவாகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் இதனால் தடைபட்டு பாதிப்பு ஏற்படுகிறது.
தொடர்ந்து ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டாலோ அல்லது மூளையில் சில குறிப்பிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டாலோ அது வாஸ்குலர் டிமென்ஷியா என்னும் மறதி நோயை உருவாக்குகிறது. சிலருக்கு இதனால் கடுமையான மனச்சோர்வு உருவாகும். நினைவாற்றல், ஒருமுகப்படுத்துதல் மற்றும் அறிவுசார் திறன்களின் குறைபாடு ஏற்படுவதே இந்த மனச்சோர்வின் காரணம்.
தொடக்க நிலை அல்சைமர் பிரச்சனைகளை வாழ்க்கைமுறை மாற்றம் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் ஓரளவு கட்டுப்படுத்தலாம். வால்நட்ஸ், பாதாம், பிரேசில் நட்ஸ் போன்ற நட்ஸ்களை எடுத்துக்கொள்ளுதல், பழங்களை காய்கறிகளை அதிகமாக உண்ணுதல், வல்லாரை போன்ற கீரைக்களைச் சாப்பிடுதல் நினைவாற்றல் மேம்பட உதவும். சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்தல், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்த்தல் போன்றவற்றைச் செய்தால் தொடக்க நிலையில் மருந்து இல்லாமலே இதனைக் குணப்படுத்த முடியும்.
மேலும், உற்சாகமான சூழல் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல் போன்றவையும் இதற்கான சிறந்த தீர்வுகளில் ஒன்றாக இருக்கும்.
மறதியைக் கட்டுப்படுத்த மனதளவில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இதற்குப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அவசியம். நண்பர்களுடன் பேசுவது மற்றும் மனதிற்கு விருப்பமான பணிகளைச் செய்வதும் மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இவை மறதி ஏற்படாமல் தடுக்க உதவும்.
இந்த நோய் முற்றும் நிலை ஏற்பட்டால் நோயாளி மற்றும் அவரது குடும்பத்தார் மருத்துவரோடு கலந்துரையாடி சிகிச்சை அளிக்க வேண்டும். மறதி நோய் ஏற்பட்ட ஒருவரைப் பராமரிக்க குடும்பம் மற்றும் சமூக ஆதரவு மிகவும் முக்கியம்.
மறதியின் பிடியில் இந்தியா!
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடி பேர் மறதி நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், ‘ஒவ்வொரு 3.2 வினாடிக்கும் ஒருவர் மறதி நோயால் பாதிக்கப்படுகிறார்‘ என்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் இந்த மறதி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் பலருக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.